Saturday, May 4

இளமுருகனார் , சோமசுந்தரப்புலவர்

0

1908-06-11 ஆம் நாள் யாழ்ப்பாணம், மானிப்பாய், நவாலி என்னும் இடத்தில் பிறந்தவர். உரைநடை, நூற்பதிப்பு, கவிதை, போன்ற துறைகளில் மிகுந்த ஆற்றலுடையவர். இருந்தபோதிலும் கவிதை புனைவதிலேயே மிகுந்த ஈடுபாடுடையவர். நவாலியூர் சோமசுந்தரப்புலவரினது புதல்வனாவார். தமது ஆரம்பக் கல்வியை ஊரிலும், உயர்கல்வியை வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியிலும் பயின்று ஆசிரியராகத் திகழ்ந்த அதேவேளை பண்டிதர் தேர்வில்தோற்றி சித்திபெற்று பண்டிதரானார். வித்துவ சிரோன்மணி சி.கணேசையர், பண்டிதர் ம.வே.மகாலிங்கசிவம், பண்டிதமணி சு.நவநீத கிருஸ்ணபாரதியார், முதலிய தமிழ் அறிஞர்களுடன் நெருங்கிப் பழகியவர். இவரால் தமிழ் பாதுகாப்புக் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளும், கண்டனவுரைகளும் ஈழகேசரி, தினகரன் முதலிய வெளியீடுகளில் பிரசுரமாயின.தமிழ்க் கல்வி இலக்கண பாடமின்றி வரம்பழிந்துபோதல் கண்டு அரசை அணுகி இலக்கணப் பாடத்திட்டம் எழுதி பாடநூல் களை உருவாக்கி தமிழின் வளர்ச்சிக்கு உதவினார். தமிழின் தூய்மையை ஓம்பி இலக்கண வரம்பிற்கு முரணாகாதவாறு தனித்தமிழில் எழுதியும் பேசியும் வந்தார். இதற்காகவே தனது பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயரை இளமுருகனார் என மாற்றிக் கொண்டவர். தமிழ்ப் பாதுகாப்புக் கழகமொன்றினை நிறுவியதோடு, கலைச்சொல் ஆக்கத்துறையிலும் அரும்பணியாற்றியவர். ஊதியம் எதுவும் பாராமல் பாலபண்டித, பண்டித வகுப்புக்களை நடத்தி வந்தவர். ஈழத்துச் சிதம்பரபுராணம், செந்தமிழ்ச் செல்வம், பூரணன் கதை, இலக்கணச் சூறாவளி, தொல்காப்பிய முதநூற்ச் சூத்திரவிருத்தி, செந்தமிழ் வழக்கு, அரங்கேற்று வைபவம், வேனில் விழா, கப்பற் பாட்டு, கவிதைவியல், சொற்கலை, கயரோகச் சிந்து, சுருக்கெழுத்துச் சூத்திரம் முதலியன இவரது சிறந்த படைப்புக்களாகும். குறிஞ்சிப்பாட்டு, திருமுரு காற்றுப்படை, பொருநராற்றுப்படை, மதுரைக்காஞ்சி, ஐங்குறுநூறு என்பனவற்றிற்கு விளக்க வுரை எழுதியுள்ளார்.தமயந்தி திருமணம், கமலேசன், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நாடக நூல்களையும் இலங்கைமாதேவி திருப்பள்ளியெழுச்சி, அறப்போருக்கு அறைகூவல், திருமலை யாத்திரை முதலிய அரசியற் பாடல்களையும் இயற்றியுள்ளார். வாழ்க்கைத்துணைவியாரான பண்டிதை பரமேஸ்வரி அம்மையாரும் இவரது முயற்சிகளுக்கு பின்நின்றூக்கப்படுத்தி வந்தவர். 1936 இல் கயரோக சிந்தாமணியைப் பாடியமைக்காக தங்கப்பதக்கம் பெற்றவர். இவரது தமிழ்ப் பணிக்காக தமிழ் அறிஞர்களால் ஈழத்துச் சிதம்பரபுராணமியற்றிய சிறப்பு நோக்கிப் புலவர்மணி என போற்றப்பட்டார். காஞ்சிபுரம் மெய்கண்டார் ஆதீன மகா சந்நிதானமாகிய சீலத் திருஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் கவிசிந்தாமணி என்ற வரிசையை வழங்கி களிப்புற்றார். 1975-12-17 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!