வடமராட்சி கரவெட்டி என்ற இடத்தில் 1924-07-19 ஆம் நாள் பிறந்தவர். ஈழத்து பார்சி அரங்கில் தனக்கென ஒரு இடத்தினை ஏற்படுத்திக்கொண்டவர். இவரது நாடக வளர்ச்சியில் தந்தையார் கணபதிப்பிள்ளையும், மாமனார் கந்தையாவும் காரண கர்த்தாக்களாக விளங்கியுள்ளனர். இவர் ஈழத்து இசைநாடக அரங்குகளில் பல்வேறு உணர்வு நிலைப்பட்ட பாத்திரங்களை ஏற்று நடித்து இருக்கின்றார்.இவர் சத்தியகீர்த்தியாக, காலகண்டஐயராக, நட்சத்திரத் தரகராக தெய்வேந்திரனாக, இராவணனின் ஆஸ்தான இசைவித்துவானாக (இலங்கேஸ்வரனாக) காசிராசனாக (ஏழுபிள்ளை நல்லதங்காள்), ஏலப்பொல (கண்டியரசன்), நாரதர், தூய்மைச்சேனன், அசுபவதி, சுமாலி (சத்தியவான் சாவித்திரி) விருத்தன், நம்பியரசன், நாரதர் (ஸ்ரீமுருகவேள்) பரதன், மாசாத்துவான், மாமா, வஞ்சிப் பத்தன்(சிலம்புச் செல்வி) திருதராட்டினன், விதுரன் (பாஞ்சாலி சபதம்) மார்க்கண் டேயர் ஆகிய பாத்திரங்களையும் காத்தவராயன் சிந்துநடைக்கூத்தில் சின்னானாகவும் பாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ளார். மேலும் இசைநாடகங்களை நெறியாள்கை செய்தும் பிரதிகள் பலவற்றை பிரம்மஸ்ரீ தெட்சணாமுர்த்தி ஐயர் அவர்களுடன் இணைந்து உருவாக்கியும் உள்ளார். இவரது நாடகப்பணியினைப் பாராட்டி இந்து கலாசார அலுவல்கள் அமைச்சு 2001 ஆம் ஆண்டு “கலைஞான கேசரி” என்ற பட்டத்தினை வழங்கிக் கௌரவித்தது. 2004ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.