1925-05-15 ஆம் நாள் வடமராட்சி கரவெட்டி கன்பொல்லை என்ற இடத்தில் பிறந்தவர். பாடுந்திறனும், நடிப்புத்திறனும் ஒருங்கே வாய்க்கப்பெற்று நாடகமேடை நுட்பங்களை உள்வாங்கி பார்சி அரங்கமுறையில் மேடைகள் பலகண்டு வரலாற்றில் தனக்கென்றொரு இடத்தினைப் பெற்றுக்கொண்ட கலைஞன். நாட்டுக்கூத்து, இசைநாடகம், பிற்பாட்டு, மிருதங்கம், கரகம், காவடி ஆட்டுவித்தல் கல்வெட்டு ஆக்கமும் பாடல் இயற்றலும் போன்ற கலைத்துறைகளில் ஈடுபாடுடையவர். இவர் அரிச்சந்திரா, சத்தியவான் சாவித்திரி, அல்லி அருச்சுனா, ஞானசௌந்தரி, ஏழுபிள்ளை நல்லதங்காள், பவளக்கொடி, பூதத்தம்பி, வள்ளிதிருமணம், மார்க்கண்டேயர், கோவலன் கண்ணகி, பக்த நந்தனார், சாரங்கதாரா போன்ற பல நாடகங்களில் பிரதான ஆண் பாத்திரம் ஏற்று நடித்ததுடன் ஒளவையாக பெண் பாத்திரம் ஏற்றும் நடித்துள்ளார். இவர் அண்ணாசாமி, ச.தம்பிஐயா, வி.வி.வைரமுத்து சீ.ரி.செல்வராசா, என்.செல்வராசா, வி.மார்க்கண்டு, வே.திரவியம், VK.இரத்தினம், வி.செல்வரத்தினம், VT.ஐயாத்துரை, கனகரத்தினம், பொ.தைரியநாதன், மு.குழந்தைவேல், உருத்திராபதி போன்ற முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார். சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் சின்னமணி இயமனாகவும் நற்குணம் நாரதராகவும் தோன்றி ஒருவரை ஒருவர் விட்டுக்கொடாமல் பாடல்களால் மோதித்தர்க்கிப்பதும் இருவரது குரல்களும் கனதியாகி ராகம் பிசகாமல் ஒலித்தமையும் பார்வையாளர்களைப் பரவசப்படுத்திய விடயங்களாகவுள்ளன. மேலும் இவரது அண்ணாவியத்தில் உருவான நடிகர்களாக திரு.ப.பரராஜசிங்கம், செ.இரத்தினகுமார், க.கண்ணதாசக்குருக்கள், க.கனகரத்தினம், ந.இரகுநாதன், ஆ.தங்கராஜா, சி.ஜெயம், மு.சந்திரன், பூ.பசுபதி, சீனித்தம்பி போன்ற பலரைக் குறிப்பிடலாம். விநாயகர் நாடகமன்றம் என்ற பெயரில் இசை நாடகக் குழுவை அமைத்து நாடகங்களை மேடையேற்றியுள்ளார். இந்த நாடக மன்றம் இதனூடாக வடமராட்சி, தென்மராட்சி போன்ற பிரதேசங்களிலும் கண்டி புஸ்பதான மண்டபம், பேராதனை சர்வகலாசாலை மண்டபம், லயனல் மண்டபம், இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனம் என்பவற்றுடன் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திலும் நாடகங்களை மேடையேற்றியுள்ளார். இதில் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் சத்தியவான் சாவித்திரி நாடகத்தினை தனி நடிப்பாக 5 பாத்திரங்கள் நடித்து பெரும் பாராட்டைப் பெற்றவர். அத்துடன் தீபாவளி தினத்தன்று யாழ். மாநகர சபை மண்டபத்தில் மயான காண்டம் மேடையேறிய அதேகாலத்தில் வானொலி மூலமும் இந் நாடகம் ஒலிபரப்பாகி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன்வசம் ஈர்த்து பிரமிக்க வைத்தவர். வைரமுத்து மயானம் காக்கும் புலையனாகவும் (அரிச்சந்திரன்) நற்குணம் சத்தியகீர்த்தியாகவும் நடித்த நாடகம் ஈழத்தின் பலபாகங்களிலும் பல தடவைகள் மேடையேறி சாதனை படைத்தது. இவருடைய கலைச் சேவையினைப் பாராட்டி 1955 ஆம் ஆண்டு கலையரசு சொர்ணலிங்கமவர்களால் “நாடகதிலகம்” என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்பெற்றவர். மத்தளம் வாசிக்கும் ஆற்றலுடைய இவர் 1999-09-06 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
