Thursday, January 23

விவேகானந்தன், செல்லையா

0

1943.01.01 ஆம் நாள் வடமராட்சி பொன்மகள் வாசம் கவிஞர் செல்லையா வீதி அல்வாய் என்ற இடத்தில் பிறந்தவர். நாடக நடிகனான இவர் கவிஞர் செல்லையாவின் புதல்வனாவார். வசனநடை நாடகங்களிலும் புராண இதிகாச நாடகங்களிலும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர். தனது தந்தையார் கவிஞராக இருந்ததன் காரணத்தினாலும் உறவினர்களும் நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டவர்களாகக் காணப்பட்டதனாலும் 5 வயது முதல் இக் கலைத்துறைகளிலே ஈடுபாடு கொண்டவராகக் காணப்பட்டார். இவரது வாழ்க்கைக் காலத்தில் 5 வயது முதல் நாடகம், பாட்டு துறைகளில் ஈடுபாடு கொண்டார், 20 வயது முதல் கவிதையிலும் ஆலயப்பாடல்களிலும் 28 வயது முதல் தயாரிப்பு நெறியாள்கையிலும் பின்னர் மனைவி பிள்ளைகளுடன் இசைநாடகம் நடித்தும் மேடையேற்றியும் வந்தார். இவர் அல்வாயூர்க் கவிஞர் நாடகமன்ற ஸ்தாபகர் ஆவார். 1974 இல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிலும், இலங்கை வானொலியிலும், இலங்கை ரூபவாகினிக் கூட்டுத் தாபனத்திலும், பல மேடைகளிலும் தமது நாடகங்களைக் காட்சிப்படுத்தியுள்ளார். இவரது காத்தவராயன் இறுவெட்டு ரூபவாகினியிலும் ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இவர் பல திருவூஞ்சல் பாக்கள், கோயிற்பதிகங்கள், வாழ்த்துப்பாக்கள், நிலைய கீதங்கள், நினைவஞ்சலிப்பாக்கள் என்பவற்றையும் இயற்றியுள்ளார். பல வில்லிசைப் பிரதிகளை ஆக்கம் செய்து மெட்டமைத்தும் பாடியிருக்கிறார். அழகு நிலாவானத்திலே என்ற மெல்லிசைப்பாடல் இறுவட்டாக வெளிவந்துள்ளது. இவரது மயானகாண்டம் 3 தங்கப்பதக்கங்களையும் பல மேடைகளில் பாராட்டுக் களையும் பெற்றது. இலங்கை வானொலியில் மெல்லிசை, நாடகம் என்ற இரண்டு தளத்திலும் பங்கேற்று அவை இன்றுவரை ஒலிபரப்பாகும் ஒரேயொரு கலைஞர் என்ற பாரட்டுக்குரியவர் .மயானகாண்டத்தில் அரிச்சந்திரனாகவும், ஸ்ரீவள்ளியில் முருகனாகவும், நந்தனாரில் நந்தனாகவும், காத்தவராயனில் காத்தானாகவும், சத்தியவான் சாவித்திரியில் சத்தியவானாகவும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 1999.06.07 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!