யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை என்னும் ஊரில் 1906 ஆம் அண்டு பிறந்தவர். இந்தியக் கலைஞர்கள் வியந்து போற்றுமளவிற்கு மிகச்சிறந்த தவில் வித்துவானாகத் திகழ்ந்தவர். இவரது தவில்வாசிப்பானது யாவரும் பிரமிக்கும்படியாகவும், நாத சுகமுள்ளதாகவும், இலயவேலைப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்து வந்தது. யாழ்ப்பாணத்து தவிற்கலையின் முன்னோடிகள் பலர் இருந்த போதிலும் காமாட்சிசுந்தரம் அவர்களின் இத்துறைக்கான பங்களிப்பு அளவிடமுடியாததாகும். இந்தியாவிலேயே நீண்டகாலம் வாழ்ந்து கலைச்சேவையாற்றியமையினால் இலங்கையில் இவரு டைய சிறப்பினை மக்கள் அறிவதற்கு வாய்ப்பிருக்கவில்லை. தவிற்கலையில் பலகலைஞர்களை உருவாக்கி இன்றைய தவிற்கலையின் வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமைக்குரிய இவர் 1944 ஆம் ஆண்டு கலையுலக வாழ்வை நீத்து நிலையுலகம் சென்றார்.