சிறுவயதிலிருந்தே எழுத்துலகில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட செம்பியன்செல்வன் எனஅழைக்கப்படும் ஆறுமுகம் இராஜகோபால் அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமாணவனும் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் சிறப்புப்பட்டம் பெற்றவருமாவார். இவர் ஆசிரியராக, அதிபராக, கோட்டக் கல்விப்பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஈழத்து படைப்புலக யாம்பவான்களில் ஒருவர்.
யாழ்ப்பாணம் திருநெல்வேலி என்னும் இடத்தில் வாழ்ந்துவந்த ஆறுமுகம் தமர்தாம்பிகை தம்பதியரின் இரன்டாவது புதல்வனாக 1943-01-01 ஆம் நாள் பிறந்தவர். தனது சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து துன்பப்பட்டு தனது அண்ணனாலும் ஆச்சி எனச் செல்லமாக அழைக்கும் நாகம்மா பேர்த்தியாரினதும் அரவணைப்பில் வளர்ந்தவர். ஆச்சி நாகமுத்து அவர்கள் இவர்களிருவரையும் எவ்விதக் குறைகளுமின்றி ஒழுக்கத்திலும,; பண்பிலும், கல்வியிலும் சீரும்சிறப்புடனும் வளர்த்தார். பேர்த்தியாரின் அறநெறிக்கண்டிப்புகளுடன் கூடிய வழிகாட்டுதல்கள் இவரை பின்நாளில் சிறந்த இலக்கியப் படைப்பாளியாக பிரசவித்தது. தனது ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையிலும,; உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் கற்றார். 1960 இல் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இருந்து தனது பதினேழாவது வயதில் பேராதனைப்பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி அங்கு புவியியல் கற்று சிறப்புக் கலைமாணியாக வெளியேறினார்.
அண்ணன் கணேசபிள்ளை அவர்களது வழிப்படுத்தலினால் இலக்கிய ஆர்வமேலீட்டினை தன்னுள் உருவகித்துக் கொண்டவர். சிறுவனாக இருந்த போது அண்ணன் கணேசபிள்ளை அவர்கள் கையெழுத்துச் சஞ்சிகையினை மாற்றுச் சஞ்சிகையாக நடத்திக் கொண்டிருந்தவர். இச்சஞ்சிகையில் சிறுவர் பகுதியினை செம்பியன்செல்வனது ஆக்கங்கள் நிரப்பிக் கொண்டிருக்கும். இத்தகைய படிமுறை வளர்ச்சியானது அவரை படைப்பாக்கத்தில் வலுவூன்றச் செய்தது. மேலும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கொம்யூனிஸ் கார்த்திகேசுமாஸ்ரர், அற்புதரத்தினம், இலக்கியவாதிகளான வை.ஏரம்பமூர்த்தி, க.சிவராமலிங்கம் ஆகிய ஆசிரியர்களினது கிடைப்பனவும் இவரது இலக்கிய அறிவினை புடம் போடவைத்தது. அத்துடன் மூத்த கவிஞர்களான சோ.பத்மநாதன், பஞ்சாட்சரம் போன்றவர்களும் பள்ளித்தோழர்களான செங்கை ஆழியான், முனியப்பதாசன், து.வைத்திலிங்கம், வை.அ.கைலாசநாதன் எனப்படும் அங்கயன் முதலியோரும் செம்பியன்செல்வனின் இலக்கிய வளர்ச்சியின் தூண்களாகக் கருதப்படுகின்றனர். புத்தகங்களை வாசிப்பதற்கு கஸ்டப்பட்ட இவருக்கு செங்கை ஆழியான் தனது நூல்களை வழங்கி வாசிப்புத்திறனை அதிகரிக்கச்செய்தது மட்டுமல்லாது உற்ற தோழனாகவும் உடனிருந்தவர்.
பேராதனைப் பல்கலைக்கழகச் சூழலிற்குள் இவர் நுழைந்த வேளை தாய்மொழிக் கல்விபோதிக்கும் வழிபிறந்தது. தாய்மொழிமூலமான சிந்தனை தரமான படைப்புகளை பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உருவாக்கியது. இச்சூழல் இவரை படைப்புலகில் வெளிக்கொணரும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தியது. இங்கு படைப்பாற்றல் மிகுஇளைஞர்கூட்டம் செம்பியன்செல்வனின் பக்கபலமாக அமைந்தது. குறிப்பாகசெங்கைஆழியான், செ.யோகநாதன், குந்தவை, துருவன், அங்கையன் கைலாசநாதன், நவசோதி, கலாபரமேஸ்வரன் போன்ற எழுத்துலக யாம்பவான்களது நட்பும் பக்கபலமும் கிடைத்தது. இக்காலத்தில் கவிதைப்பூங்கா, விண்ணும் மண்ணும், காலத்தின் குரல்கள், யுகம்ஆ கிய சிறுகதைத்தொகுதி நூல்களை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளியிட்டனர். இத்தொகுதிகளின் பிதாமகரில் ஒருவராக செம்பியன்செல்வன் திகழ்கின்றார்.
செம்பியன்செல்வன் தனித்துவமான இலக்கியச் செல்நெறியை தனக்கென அமைத்துக்கொண்டவர். “இலக்கியம் என்பது கலை சார்ந்த சித்தரிப்பாகும். கலை சமூகமாற்றத்தை உருவாக்கும். சமூகமாற்றம் கலைவடிவங்களை மாற்றியமைக் கும்”என்ற கருத்து நிலையில் செயற்பட்டவர். நிகழ்காலத்தை வெளிப்படுத்துவனவா கவும், வரலாற்றுப் பதிவுகளாகவும் தனது படைப்புகள் அமைய வேண்டும் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருந்தவர். ஈழத்தில் ஆளுமைமிக்க அறிஞர்களின் ஆக்கங்களைத்தாங்கி வெளிவருகின்ற சாகித்திய மண்டல வெளியீடான “கலைப்பூங்கா” என்னும் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவானது இவர் பல்ககை;கழகத்தில் படித்துக்கொணடிருந்த வேளை எழுதிய கட்டுரை ஒன்றினை விரும்பிப் பிரசுரித்தமை இவருடைய படைப்பின் உயர் ஆற்றலை வெளிப்படுத்தி நிற்பதனை காணலாம்.
வெறுமனே பல்கலைக்கழகத் தொகுப்பில் மட்டும் எழுதாமல் ஈழத்தில் வெளிவருகின்ற பத்திரிகைளிலும் எழுதினார். ஈழநாடு, விரகேசரி, ஈழகேசரி, முரசொலி போன்றவற்றிலும் இந்தியப்பத்திரிகைளிலும் இவர் எழுதிய சிறுகதைகள், கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலக்கியப் படைப்பாளியாக தன்னை வெளிப்படுத்தினாலும் பிறகலைகள் மீதிருந்த நாட்டமும் இவரை கலையுலகில் மேலும் நன்குயரச் செய்;தது. குறிப்பாக நாடகத்தின் மீதும் ஆர்வம் கொண்டு செயற்பட்டார். இத்துறையில் பல நாடகப்பிரதிகளை ஆக்கியுள்ளதுடன் அப்பிரதிகள் சிறந்நூலுக்கானபரிசில்களை வென்றுள்ளமை கவனத்திற் கொள்ளப்படவேண்டியதாகும். 1966, 1967 ஆம் ஆண்டுகளில் இலங்கைக் கலைக்கழகம் நடத்திய நாடக எழுத்துருப் போட்டிகளில் செம்பியன்செல்வனால் சமர்ப்பித்த‘ இந்திரஜித்’ என்னும் நாடகப் பிரதி இரண்டாம் பரிசினையும்‘ இருளில் எழும் பெருமூச்சுக்கள்’என்ற நாடகப் பிரதிமுதலாம் பரிசினையும் பெற்றன. 1975, 1976 ஆம் ஆண்டுகளில் இலங்கை கலாசாரப் பேரவையின் நாடக எழுத்துருப் போட்டிகளில்‘ சின்னமீன்கள்’‘எரியும்பிரச்சினைகள்’ஆகியன முதற்பரிசினையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவர் எழுதிய‘ மூன்றுமுழுநிலவுகள் ’என்ற நாடகநூல் ஆசீர்புத்தகநிறுவன வெளியீடாக 1967 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்நாடகமானது அரு.இராமநாதனது அசோகனின் காதலி, எஸ்.பொன்னுத்துரையினது சதுரங்கம் நாடகவரிசையில் செம்பியன்செல்வனின் மூன்றுமுழுநிலவுகள் நாடகம் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளதென பேராசிரியர் சு.வித்தியானந்தனவர்கள் குறிப்பிட்டுள்ளமை ஈண்டு கவனிக்கத்தக்கது. ஈழநாடு பத்திரிகை தனது பத்தாவது ஆண்டு நிறைவினையொட்டி நடத்திய இலக்கியப்போட்டிகளில் செம்பியன்செல்வன் ஏழைக்குடும்பமொன்றின் ஆசாபாசங்களையும், அவலங்களையும் கருப்பொருளாக உள்வாங்கி‘ விடிய இன்னும் நேரமிருக்கு” என்ற ஓரங்க நாடகப்பிரதியினை சமர்ப்பித்தார். இப்பிரதியானது முதலிடத்தினைப் பெற்றுக் கொண்டது.. ஈழநாடு பத்திரிகை வருடந்தோறும் தொடர்ச்சியாக நடத்திய நாடகப்போட்டிகளில் நான்கு தடைவகள் செம்பியன்செல்வனது நாடகப்பிரதிகள் முதலிடம் பெற்றன. இப்பிரதிகளை தொகுத்து“ விடிய இன்னும் நேரமிருக்கு ”என்னும் நாடகத்தொகுப்பு நூலாக ஈழநாடு வெளியீடு வெளிவந்தமை இவருடைய புலமையின் இன்னொரு வெளிப்பாடு எனலாம்.
1977இலிருந்து 1983 அம்ஆண்டு இலங்கை கலாசாரப் பேரவையின் தமிழ்நாடக ஆலோசனைக்குழு உறுப்பினராகவும், 1981ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை பிரதேச அபிவிருத்தி அமைச்சின் தமிழ் நாடக மதியுரைஞர் குழுவின் செயலாளராகவும் செயற்பட்டார். பேராசிரியர் சு.வித்தியானந்தனவர்களுடன் இணைந்து நாட்டுக் கூத்தினை மத்தியதர வர்க்கத்திற்குள் கொண்டு வரும்முயற்சிகளில் பங்கெடுத்தவர்.
படைப்பிலக்கியத்துறையில் யாம்பவானாகத்திகழும் செம்பியன்செல்வன் மிகச்சிறந்த நாவலாசிரியராக ஈழத்தில் பேசப்படுகின்றார். அதுமட்டுமல்லாமல் மிகச்சிறந்த உருவகக்கதாசிரியராகவும் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். உருவகக்கதைத்துறையில் ஈழத்துச் சிற்பிகளானசு. வேலுப்பிள்ளை (சு.வே) எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) எம்.ஏ.ரஹ்மான் ஆகியோரின் வரிசையில் செம்பியன்செல்வனும் வைத்து எண்ணப்படு பவர். ஐம்பதுக்குமேற்பட்ட உருவகக்கதைகளை ஆக்கியபோதிலும் இவை அச்சில் வெளிவராமை கவலைக்குரியது. இவரது உருவகக்கதைகள் கவித்துவமான சொற்களுடன் புதிய உரைநடையை உள்வாங்கியனவாக மிளிர்கின்றன.
ஈழத்தில் வெளிவந்த பல இதழியல்களின் ஆசிரியராக, பிரதம ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். குறிப்பாக 1964 – 1970 காலப்பகுதியில் எம்.வி.ஆசீர்வாதத்தினால் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்ட “விவேகி” சஞ்சிகையின் ஆசிரியராகவும், ஈழமுரசு மயில் அமிர்தலிங்கம் அவர்கள் 1986ஆம்ஆண்டில் நடத்திய மாதாந்த இலக்கியச் சஞ்சிகையான “அமிர்தகங்கை” யின் ஆசிரியராகவும் பணியாற்றினார். யாழ் இலக்கியவட்டம் தனது முதலாவது ஆண்டு நிறைவில்‘ இலக்கியம்’ என்றமலரினை வெளியிட்டமை குறிப்பிடத் தக்கது. இம்மலரின் இணைஆசிரியர்களாக செம்பியன்செல்வனும் யாழ்வாணனும் பணியாற்றியுள்ளனர். யாழ்பல்கலைக்கழக பட்டப்பின்ப டிப்புக்கற்கையின் போது ‘கலைஞானம்’ என்னும் சஞ்சிகையின் 1982-1983 காலப்பகுதிக்கான ஆசிரியராகவும் செங்கை ஆழியானின் ‘புவியியல் ’‘நுண்அறிவியல்’ ஆகிய சஞ்சிகைகளின் இணை ஆசிரியராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
ஈழத்துத் திரைப்படங்களுக்கானதும், குறும்படங்களுக்கானதுமான வழிகாட்டல் விரிவுரைகளையும் நடத்தியவர். நாவல், நாடகம், சிறுகதை, உருவகக்கதை, குறுங்கதை, திரைப்படம், ஆன்மீகம், பத்திரிகை, மேடைப்பேச்சு எனப் பலவழிகளிலும் ஈழத்துக்கலை, இலக்கிய முயற்சிகளில் பங்கெடுத்தஇவர் செங்கைஆழியானின்‘ வாடைக்காற்று ’நாவலைதிரைப்படத்திற்குரிய கதைப்பிரதியாக வடிவமைத்து திரைப்படமாக மலர்வதற்கு துணைநின்றவர். ஈழத்து படைப்புலகச் சக்கரவர்த்தி கலாநிதி க.குணராசாவுடன் என்றும் பிரியாத நட்புக்கொண்டிருந்தவர்.
1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் அத்தியடியைச் சேர்ந்த சந்தியாப்பிள்ளை பொன்னம்மா தம்பதியரின் மூத்த புதல்வியான புவனேஸ்வரி என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ராகுலன் என்னும் திருநாமத்துடனான ஒரேயொரு புதல்வனைப் பெற்று மகிழ்ந்தார்.
‘ராஜகோ’ என்னும் புனைபெயர் அடையாளத்துடன் தன்படைப்புகளை எழுதினார். அனேகமாக இவர் எழுதிய கவிதைகள், கட்டுரை, குறுங்கதைகள், விமர்சனங்கள் போன்றனவற்றை இப்பெயரிலேயே வெளியிட்டுள்ள இவர் 2005-05-20 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.