Wednesday, May 29

குணராசா, கந்தையா (செங்கை ஆழியான்) (கலாநிதி)

0

1941-01-25 ஆம் நாள் வண்ணை கிழக்கு கலட்டி புன்னை வளவு என்ற இடத்தில் கந்தையா அன்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார்.தனது ஆரம்பக்கல்வியை யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையிலும் உயர் கல்வியை யாழ். இந்துக்கல்லூரியிலும் கற்றார்.பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியலில் கலைமாணிப் பட்டம் பெற்றார். தனது பதினாறாவது வயதில் எழுத ஆரம்பித்தவர் இறுதிக்காலம் வரை எழுதிக்கொண்டே இருந்தார். முதலாவது சிறுகதை கல்கண்டு சஞ்சிகையிலும் முதலாவது நாவல் ஆறுகால்மடம் என்ற பெயரில் சுதந்திரன் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற வேளையில் கதைப்பூங்கா, விண்ணும் மண்ணும் என்ற கதைத்தொகுதிகளை வெளியிட்டு பெருமை பெற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருட மாணவனாக இருந்த காலத்தில் இலங்கைப் புவியியல் என்ற பாடநூலை வெளியிட்டார். 1971 ஆம் ஆண்டு CAS (SLAS) என்னும் இலங்கை நிர்வாகசேவைப் பரீட்சையில் சித்தியடைந்து தெல்லிப்பளை காரியாதிகாரியாகப் பணியாற்றி D.R.O வாக உயர்ந்து உதவி அரசாங்க அதிபராகிப் பின்னர் பிரதேச செயலாளராக இலங்கையின் பல பாகங்களிலும் பணியாற்றிய இவர் யாழ். பல்கலைக் கழகத்தின் பதிவாளராகவும், யாழ். மாநகர சபையின் ஆணையாளராகவும் 67 வயது வரை பல மக்கள் நலப்பணிகளையாற்றினார். மிகச்சிறந்த நிர்வாகியான இவர் பார்போற்றும் எழுத்தாளன். சமூகசேவையாளன். சிறந்த கல்வியாளன். புவியியல் வரலாற்றுப் பாடநூலாசிரியர். ஆய்வாளர் எனப் பன்முகங்கொண்ட இவர் 53 நாவல் களையும்  200 இற்கு மேற்பட்ட சிறுகதைகளையும், சிறுகதைத் தொகுதிகளையும், 2 நாவல் தொகுதியினையும் 7 பல்சுவை நூல்களையும் 14 வரலாறு மற்றும் புவியியல் நூல்களையும் அறிவியல் நூல்களையும் எழுதிக்குவித்தவர். புவியியலில் சிறப்புப்பட்டம் பெற்ற இவர் 1964 இல் எம். ஏ, 1984 இல் பீ.எச்.டீ பட்டங்களைப் பெற்றவர். 1991 இல் இலங்கை நிர்வாக சேவையின் தரம் 1 இற்கு தரமுயர்த்தப்பட்டவர். ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த “கிடுகு வேலி” என்ற இவரது தொடர்கதை வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நந்திக்கடல், சித்திரா பௌர்ணமி, ஆச்சி பயணம் போகிறாள், முற்றத்து ஒற்றைப் பனை, வாடைக்காற்று, காட்டாறு, இரவின் முடிவு, ஜன்ம பூமி, கந்தவேள் கோட்டம், கடற்கோட்டை என்னும் நாவல்களையும், பூதத்தீவுப் புதிர்கள், ஆறுகால்மடம் என்னும் சிறுவர் புதினங்களையும், யாழ்ப்பாண அரச பரம்பரை, நல்லை நகர் நூல், 24 மணிநேரம், மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் என்னும் வரலாற்று நூல்களையும், ஈழத்துச் சிறுகதை வரலாறு என்கின்ற ஆய்வு நூலையும், மல்லிகைச் சிறுகதைகள் -1, மல்லிகைச் சிறுகதைகள் – 2, சுதந்திரன் சிறுகதைகள், மறுமலர்ச்சிச் சிறுகதைகள், ஈழகேசரிச் சிறுகதைகள், முனியப்பதாசன் கதைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகள் என்கின்ற தொகுப்பு நூல்களையும் வெளியிட்டு எழுத்துலகில் தன்னிகரில்லா சாதனை புரிந்துள்ளார். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகி மறைந்த எழுத்தாளர்களை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் சிறந்த இலக்கியப் படைப்பாளி களுக்கு பரிசில் வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தி செயற்படுத்தினார். குறிப்பாக சம்பந்தர் விருது,கவிஞர் ஐயாத்துரை விருது, கணபதிப்பிள்ளை விருது என்பன இவரால் செயற்படுத்தப்பட்ட திட்டங்களாகும். இத்தகைய கலை ஆளுமையாளனைப் பாராட்டி சாஹித்யரத்னா, கலாபூ~ணம், கலைஞானச்சுடர் போன்ற உயர்விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். 2016-02-28 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!