1934-01-14 ஆம் நாள் பிறந்தவர். ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் தனிமுத்திரை பதித்த இவர் இலக்கியத்துறையில் பல நல்ல இலக்கியச் சிந்தனைகளை ஊட்டியவர். திறமைமிக்க இலக்கியச் செயற்பாட்டாளர். சிறந்த சமூகசேவையாளர். சோமசுந்தரன், கலாமதி, சோமகாந்தன், கருணையூர்ச் சோமு, புதுமைப்பிரியன், ஈழத்தச்சோமு என்கின்ற புனைபெயர்களில் ஆவேசப் பாணியில் ஒடுக்கப் பட்ட மக்களின் துன்பங்களை கவிதை, சிறுகதை, சிறுகட்டுரைகளாக சுதந்திரன், ஈழகேசரி ஆகிய பத்திரிகைகளில் எழுதினார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு 1960களில் நூறிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கலைஞர்களை சுதந்திரன் பத்திரிகை மூலம் அறிமுகப்படுத்தினார். பதினைந்து சிறுகதைகளை உள்ளடக்கிய ஆகுதி என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1987 இல் விடிவெள்ளி பூத்தது என்ற நாவலை வெளியிட்டார். நல்லூரில் ஆறுமுகநாவலருக்கு சிலை வைப்பதற்கு முன்னின்றுழைத்தவர். 2008 ஆம் ஆண்டில் கலாபூ~ணம் பட்டம் பெற்றதுடன் , பல நிறுவனங்களும் இவரது பணிகளுக்காக இலக்கியக்குரிசில், தமிழ்மாமணி, தமிழ்ஒளி போன்ற விருதுகளை வழங்கிப் பாராட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஈழத்துச்சோமு என அழைக்கப்பட்ட இவரின் கொலைக்களம், நாகவிகாரை, நிலவோநெருப்போ, காசுக்காகவல்ல ஆகிய சிறுகதைகள் இவரது படைப்பின் ஆற்றலை வெளிப்படுத்தி நிற்கும் சான்றுகளாகும். 2006-04-28 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.