கரவெட்டி கரணவாயைச்; சேர்ந்த தமிழாசிரியர் செல்லையா , பொன்னம்மா தம்பதியினரின் ஏகபுத்திரனாக 1942.03.08 ஆம் ஆண்டு செ.கதிர்காமநாதன் அவர்கள் பிறந்தார். கரணவாய் வேதாரணியேஸ்வரா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியையும் தொடர்ந்து கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கற்றுக்கொண்ட இவர் 1961 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழத்துக்குச் சென்றார். தாய்மொழியில் பட்டப்படிப்பை மேற்கொண்ட முதல்தொகுதி மாணவரில் ஒருவராய் 1963 ஆம் ஆண்டு கலைமாணிப் பட்டத்தைப் பெற்று வெளியேறினார். அதன் பிறகு தனியார் கல்விநிலையங்களில் சிறிதுகாலம் ஆசிரியராகப் பணிபுரிந்துவந்தார். 1966 ஆம் ஆண்டு வீரகேசரியில் உதவி ஆசிரியராக இணைந்து ஆறு ஆண்டுகள் பணிபுரிந்தார். 1968 ஆண்டு இவருடைய முதலாவது சிறுகதைத் தொகுதியான ‘கொட்டும் பனி’ வெளியாகி 1969 ஆம் ஆண்டு சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றுக்கொண்டது. அதே வருடம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு.திருமதி தம்பிராஜா தம்பதிகளின் மகளான சரோஜா அவர்களைத் திருமணம் செய்தார். 1970 ஆம் ஆண்டு இராகுலன் என்ற மகன் அவர்களுக்குப் பிறந்தான். 1971 ஆம் ஆண்டு மூவர் கதைகள் என்ற செ.யோகநாதன், செ.கதிர்காமநாதன், செ.யோகநாதன் ஆகிய மூவரின் சிறுகதைகள் அடங்கிய தொகுதி வெளிவந்தது. அதே வருடம் இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்தார். வவுனியாவில் உள்ள கமநலத் திணைக்கள உதவி ஆணையாளராகப் பணிசெய்து கொண்டிருக்கும் போது ‘நான் சாக மாட்டேன’; என்ற தொகுதியை வெளிக்கொணரும் பணியிலும் தீவிரமாக இருந்தார். ‘அதிமேதைமைக்கும் அற்ப ஆயுளுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது’ என்று மு.தளையசிங்கத்திற்கு சு.ரா எழுதிய குறிப்பு கதிர்காமநாதனுக்கும் பொருந்திவிடும் அவலம் நிகழ்ந்தது. நான் சாகமாட்டேன் என்று தன்னுடைய படைப்புகளால் கதிர்காமநாதன் சாகாவரம் பெற்றுள்ள உண்மை மறுதலிக்கமுடியாதது. முப்பதுவயது வரை வாழ்ந்தாலும் ‘மூத்த படைப்பாளி’ஒருவருக்குரிய முதிர்ச்சியுடன் தன் ஆளுமையைப் படைப்புகள் வழி சுவடாக்கிச் சென்றுள்ளார் கதிர்காமநாதன்.
செ.கதிர்காமநாதன் அவர்களது பதின்மூன்று வருடகால எழுத்தூழியமானது கரவெட்டி மண்ணின் வாழ்வியலையும் கதைகளையும் தனது உயிர்த்துடிப்புமிக்க மொழியால் பதிகைசெய்ததுடன் அது நம் மக்கள் வாழ்கின்ற இலங்கையையும் தாண்டி உலகெங்கும் வாழ்கின்ற மனிதகுலமனைத்தும் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிர்க்குரல் கொடுப்பதாகவும் அமைந்திருக்கின்றது. இத்தகைய ஒருவரது சொந்தச் சிறுகதைகள், மொழிபெயர்ப்புக்கதைகள், கட்டுரைகள், விமர்சனக்குறிப்புகள், பத்தி எழுத்துக்கள், கவிதை என பன்முகப் படைப்புகளை ஒன்றுதிரட்டி பெருந்திரட்டாய்த் தொகுப்பாக்கம் செய்கின்றபோது எம்முன் உருக்கொண்ட – எண்ணங்கள் -சிந்தனைகள் இங்கு விரிகின்றன.
ஒரு பிரதேசத்தின் மண்வளத்தையும் மனிதர்களையும் உலகளாவிய தன் பார்வையால் வெளிக்கொணர்நத ஒரு படைப்பாளியின் படைப்புகளைத் தொகுக்கும்போது அப்படைப்பாளி வாழ்ந்த காலத்துக்கு உயிர்கொடுக்கின்றோம். வரலாற்றுக்கு வெளிச்சம் பாய்ச்சுகின்றோம். அந்தச் சிந்தனைப் பாதைகளில் பயணம் செய்கின்றோம். போராட்டங்களில் கண்ணீரில் துயரங்களில் மகிழ்ச்சிகளில் பங்குகொள்கின்றோம். ‘நான் சாகமாட்டேன்’ என்ற அந்தப் படைப்பாளியின் கனவுகளுக்குள் நுழைந்துகொள்கின்றோம். என்றோ மறைந்துபோன அந்தப் படைப்பாளி இரத்தமும் சதையுமாய் புன்னகையுடன் உயிர்த்துடிப்போடு எழுந்து சமூகத்தில் – வரலாற்றில் பயணம் செய்யத் தொடங்குகின்றான்.
கதிர்காமநாதனின் படைப்புலகம்
செ.கதிர்காமநாதனின் படைப்புலகம் சிறுகதையுடனேயே ஆரம்பிக்கின்றது. 1959 ஆண்டு விக்னேஸ்வராக் கல்லூரிச் சஞ்சிகையான ‘கலையொளி’யில் அவரது முதலாவது சிறுகதை வெளிவந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் கலைச்செல்வியில் 1959இல் எழுதிய ‘எல்லாம் உனக்காக’ என்ற சிறுகதை மூலம் பாடசாலைக் காலத்திலேயே ‘ஆரோக்கியமான இலக்கிய உலகில்’ பொதுவாசகர்களை சென்றடையும் வகையில் கதிர்காமநாதன் அறிமுகமானார். அவருடைய சிறப்புத்துறை, சிறுகதை என்று கூறுமளவுக்குப் பல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் தொடர்ந்து எழுதிக் கவனிப்புப் பெற்றார். இவரது படைப்புகள் தமிழின்பம், வசந்தம், கற்பகம், வசந்தம், அஞ்சலி முதலான சஞ்சிகைகளிலும், வீரகேசரி, மித்திரன், தினகரன் முதலான பத்திரிகைகளிலும் இளங்கதிர், கதைப்பூங்கா போன்ற பல்கலைக்கழக வெளியீடுகளிலும் வெளியாகின. இந்தியாவில் தாமரை, கார்க்கி முதலிய இதழ்களிலும் வெளியாகின.
1966 ஆம் ஆண்டு இவரால் எழுதப்பட்ட ‘ஒரு கிராமத்துப்பையன் கல்லூரிக்குச் செல்லுகின்றான்’ இவரது சிறந்த சிறுகதையென எல்லோராலும் போற்றப்பட்டதோடு யுனெஸ்கோ நிறுவனத்தினால் அறுபதிற்குமேற்பட்ட உலக மொழிகளில் வெளியிடப்படுவதற்கெனத் தெரிவு செய்யப்பட்ட ஈழத்துச் சிறுகதைகளில் ஒன்றாயமைந்தது. ‘வெறும் சோற்றுக்கே வந்தது’ சிறுகதை சாகித்திய மண்டலத்தினரால் சிங்களத்தில் மொழிபெயர்ப்பதற்கெனத் தேர்வு செய்யப்பட்டது. அண்மைக்காலத்தில் கூட செல்வா கனகநாயத்தினால் இவரது சிறுகதை ஒன்று மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. தன்னுடைய சிறுகதைகள் மொழிபெயர்க்கப்படும் தகுதியுடையனவாகப் படைத்ததோடு அமையாது இந்திய எழுத்தாளர்களினதும் மேலைத்தேச எழுத்தாளர்களினதும் படைப்புகளை தமிழில் திறம்பட மொழிபெயர்த்து வெளியிட்ட ஒருவராகவும் விளங்கினார். வீரகேசரியில் பிறமொழிக்கதைகள் என்று வாராவாரம் வெளியிடும் கைங்கரியத்தை நிறைவேற்றினார். அஞ்சலி முதலிய இதழ்களிலும் இவருடைய மொழிபெயர்ப்புக்கதைகள் வெளிவந்தன.
விக்னேஸ்வராக் கல்லூரியில் கற்கின்ற காலத்திலே மாணவர்கள் வெளியிட்ட ‘கலையொளி’ சஞ்சிகையின் ஆசிரியராக விளங்கியவர். பேராதனைப் பல்கலைக் கழகத்திலே மாணவனாக இருந்த போது அங்கு வெளியிடப்பட்ட ‘இளங்கதிர்’ ஆசிரியராகவும் விளங்கியவர். பல்கலைக்கழகக் கல்வியை நிறைவுசெய்ததும் வீரகேசரி – மித்திரனில் உதவி ஆசிரியராக விளங்கி ஆரோக்கியமான படைப்புகளுக்கு பின்புலமாயமைந்தவர். அஞ்சலி என்ற இதழின் காத்திரத்தன்மைக்குப் பின்புலமாக அமைந்தவர். கதிர்காமநாதன் ஓர் இதழாசியராகத் தன் வாழ்நாள் முழுவதும் ஏதோவொரு வகையில் இலக்கியப் பணிசெய்தவராகக் காணப்படுகின்றார்.
வீரகேசரியில் பணிசெய்த காலத்தில் “சேனா’ என்ற பெயரோடு பல கட்டுரைகளையும் சிலவேளைகளில் தன்சொந்தப் பெயரையும் பெய்து ‘உரைகல்’ என்ற நூல் அறிமுக –விமர்சனப் பகுதியிலும் தொடர்ந்து எழுதிவந்திருக்கின்றார். சங்க இலக்கியத்தில் இருந்து நவீன இலக்கியம் வரை நிறைந்த வாசிப்பு உடையவராகவும் இலக்கியத்தின் சகல வடிவங்களிலும் விருப்புக்கொண்டவராகவும் இவர் விளங்கியதை இவரது எழுத்துக்கள் மெய்ப்பிக்கின்றன. ‘கதிர்’ என்ற பெயரில் இளங்கதிரில் இவரது கவிதை ஒன்று வெளிவந்திருந்தது. ‘தமிழ் எங்கள் ஆயுதம்’ என்ற கவிதைத் தொகுப்பிலும் இவரது கவிதை ஒன்று இடம்பெற்றதாக அறியக் கிடைக்கின்றது.
இவரது இலக்கிய முயற்சிகள் உச்சம் பெற்ற காலமாக வீரகேசரிக்காலத்தையே குறிப்பிடலாம். அங்கிருக்கும்போதே உன்னதமான படைப்புகளை ஆக்கியிருக்கின்றார். ‘கோடைநதி’ என்ற தொடர்கதையை மித்திரனில் எழுதியிருக்கிறார்.
இவரது படைப்புகளை விட முக்கியமான ஒன்று இவருக்கு இருக்கிறது. உறுதியான கோட்பாட்டுத்தளம் ஒன்றைத் தழுவி, தெளிவான சிந்தனைகளோடு படைப்பிலக்கிய முயற்சியில் ஈடுபட்டவர் என்பதே அதுவாகும். கோட்பாட்டுத் தெளிவும், பிரசாரவாடை இல்லாமல் அதை வெளிப்படுத்தும் அழகியல் கலைநுட்பங்களும் இவரது ஆளுமையை வெளிப்படுத்துவனவாக அமைந்தன. அத்துடன் ‘மண்ணின் மணம் குன்றாமல் இலக்கியம் படைக்கமுயலும் எழுத்தாளர்கள் தங்கள் வட்டாரவழக்குகளையும் சொற்களையும் இரண்டறக் கலக்கவிடுவது இயல்புதான்’ என்று தன்னுடைய கட்டுரை ஒன்றில் கூறியதுபோலவேதனது மண் மணம் கமழ ஆக்கப்பெற்ற இவரது எழுத்துக்கள் மண்வாசனையை எப்போதும் தன்னோடு வைத்திருக்கும் சிறப்புப் பெற்றவையாக உள்ளன.
செ.கதிர்காமநாதனின் சிறுகதைகள்
செ.கதிர்காமநாதனின் பிரதானமான முகம் சிறுகதைதான். 1959 இல் கலைச் செல்வியில் வெளிவந்த ‘எல்லாம் உனக்காக’ சிறுகதை முதல் இறப்பதற்கு ஒருவாரம் முன்னர் வீரகேசரியில் எழுதிய ‘வியட்நாம் உனது தேவதைகளின் தேவ வாக்கு’ என்ற சிறுகதைவரை பல சிறுகதைகளை எழுதியிருந்தார். 1968 இல் வெளிவந்த ‘கொட்டும்பனி’ தொகுதியில் கொட்டும் பனி, யாழ்ப்பாணம் இங்கே வாழ்கிறது, நிந்தனை, அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கட்டும், சில்லென்று பூத்த…,ஒரு கிராமத்துப் பையன் கல்லூரிக்குச் செல்லுகின்றான்.அதனாலென்ன பெருமூச்சுத்தானே,அழுவதற்கும் சிரிப்பதற்கும்,குளிர் சுவாத்தியம் ஒத்துவராது, சோழகம் ஆகிய பத்துச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. 1971 இல் வெளிவந்த மூவர் கதைகள் தொகுதியில் வெறும் சோற்றுக்கே வந்தது, ஒரே குடிசைகளைச் சேர்ந்தவர்கள்,தாய்மொழி மூலம் ஆகிய மூன்று சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இவரது இறப்பின் பின்னர் 1972 நவம்பர் மாதம் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்த ‘நான் சாக மாட்டேன்’ தொகுதியில,; ஏற்கெனவே இவரது தொகுதிகளில் இடம்பெற்ற ஒரு கிராமத்துப் பையன் கல்லூரிக்குச் செல்லுகின்றான், வெறும் சோற்றுக்கே வந்தது ஆகிய கதைகளோடு இவரது இறுதிச்சிறுகதையான ‘வியட்நாம் உனது தேவதைகளின் தேவவாக்கு’ ஆகியன இடம்பெற்றிருந்தது. இவரது சிறுகதைகளில் பதினான்கு சிறுகதைகளே தொகுதியில் இடம்பெற்றிருக்கின்றன. தொகுதிகளில் இடம்பெறாத கலைச்செல்வியில்(1959) வெளிவந்த எல்லாம் உனக்காக, பேராதனைப் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்த கதைப்பூங்காவில் வெளிவந்த எட்டுமாதங்கள், இளங்கதிரில் வெளிவந்த நெஞ்சில் நஞ்சு ஆகிய மூன்று சிறுகதைகள் இத்தொகுதியிலே இடம்பெறுகின்றன.
கதிர்காமநாதன் எழுத வேண்டும் என்பதற்காக எழுதியவரல்லர். அவர் தனக்குரிய கோட்பாட்டுத்தளத்தில் உறுதியாக நின்று கலைநேர்த்தி குன்றாமல் எழுதியவராகக் காணப்படுகின்றார்.
‘கலையும் இலக்கியமும் மக்களுக்காக என்ற கோட்பாட்டை நான் தழுவிநிற்பவன்: ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்க்கையின் பிரதிபலிப்புகளும் விpளைவுகளுமே என் கதைகளின் உள்ளடக்கம். வாழ்க்கை, தாங்கொணாத – அழுத்திக் கொல்கிற – சுமையாக ஏன் இருக்கிறதென்பதைத் துருவி ஆராயும் உளப்பாங்கே எனது கதைகளின் ஊற்றுக்கண் ஆதலின் கலைக்காகவம், கலை அழகுக்காகவும் எப்படியும் எழுதலாம் என்ற குழம்பிய இலக்கியக் கோட்பாடுகளின் அடியொற்றி வாழ்க்கைக்கு முரணான கற்பனைககளைத் தழுவிநிற்கும் சமத்காரம் எனது கதைகளுக்குக் கிடையா. 1959 -இல் எழுத ஆரம்பித்த நான், எனது முதலாவது ‘சவலை’க் கதையிற்கூட இப்பரிணாமத்தைப் பிரதிபலிக்கத் தவறவில்லை.’ என்று பிரகடனம் செய்துவர்.
தனது இலக்கியக்; கொள்கையை முதலாவது கதையில் இருந்து பின்பற்றியவர் என்பது அவரது தெளிவைக் காட்டுகின்றது. இன்றைய இளம் எழுத்தாளர்கள் கற்றுக்கொள்வதற்கு ஏராளமான பாடங்கள் இவரிடம் இருக்கின்றன. முற்போக்குத் தளத்தில் நின்ற பலரின் கதைகளில் பிரசாரவாடை அதிகம் அடித்தபோது தனது கருத்தைக் கலைநேர்த்தி குன்றாமல் பதிகை செய்த ஆளுமையாக இவர் விளங்கினார். இவரது சிறுகதைகள் உத்தி என்று வெளித்தெரியாத நுண் உத்திகளால் ஆக்கப்பட்டவை. அது மட்டுமன்றி இவரது கதைகளின் தலைப்புகள்; எளிதில் மறக்கமுடியாதவையாக விளங்குகின்றன. இவரது சிறுகதைகளின் இன்னொரு சிறப்பு கரவெட்டியின் உயிரோட்டமிக்க பேச்சுமொழியை தனது கதைகளில் பதிவு செய்தமை ஆகும். ஒரு கிராமத்துப் பையன் கல்லூரிக்குச் செல்லுகின்றான், வெறும் சோற்றுக்கே வந்தது என்ற சிறுகதைகளின் பேச்சுமொழியே கதைகளை இன்னும் ஆழப்படுத்தி மனதைக் கீறி உள்நுழைந்து துருத்தி நிற்கின்றன. கரவெட்டியின் ஒரு காலத்து பேச்சுவழக்கின் கோவையாகவும் இவரது சிறுகதைகளைக் குறிப்பிடலாம்.
இவர் எழுதுவதோடு நிற்காமல் முற்போக்குப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சமூகப்போராளியாகவும் விளங்கினார். எழுத்தையும் வாழ்வையும் பிரிக்கமுடியாத கலைஞனாக விளங்கினார். தான்சார்ந்தவர்களுடன் ஒன்றுபட்டு ஆக்கமுயற்சிகளில் ஈடுபட்டார். இதன் சாட்சியாகவே ‘மூவர்கதைகள்’ விளங்குகின்றது.
‘முற்போக்கான அரசியல் நம்பிக்கை எம்மூவருக்கும் குறைந்தபட்ச ஒருமைப்பாட்டை விளங்குகின்றது. அதன் விளைவாக எதிர்காலத்தில் உறுதியான நம்பிக்கையும், சிறப்பான எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டதோடமையாது அதை உருவாக்கும் பணியில் – போராடத்தில் எழுத்தாளனுக்கும் பங்குண்டு என்ற உறுதிப்பாடும் , அத்தகைய போராட்டம் விஞ்ஞானபூர்வமான தத்துவத்தையும் வெகுஜனங்களின் பங்குபற்றலையும் நிறைவாகப் பெற்றிருக்கவேண்டும் என்ற உணர்வும் எமக்குப் பொதுவான நம்பிக்கையாயிருக்கின்றது. இந்த நம்பிக்கை எமக்குப் பொதுவாக இருப்பதால், வெவ்வேறு அளவில் இக்கதைகளிலும் பிரதிபலிக்கின்றது. தனிப்பட்டவர்களின் ஆளுமைக்கேற்பவும் , அனுபவம், ஆற்றல், கல்வி, பயிற்சி என்பவற்றிற்கியையவும் இந்த நம்பிக்கை பெறும் அழுத்தம் வேறுபடக்கூடும். ஆனால் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் ஏறத்தாழ எல்லாக்கதைகளிலும் இழையோடுகிறது என்பதில் தவறு இருக்காது’
ஆனால் கருத்து வெளிப்பாட்டிற்காக சோரம் போகும் படைப்புகளை ஆக்கிப் பெயர் பெறும் ஒருவராக அவர் விளங்கவில்லை. ‘ஆத்ம திருப்தியளிக்கும் ஆக்கங்களையே படைக்கவேண்டு;மெனச் சத்திய விரதம் பூண்டு’ நம்பிக்கையோடு எழுதியவர் என்பதால் தனது படைப்புக்களின் செம்மையாக்கத்தில் கலைநுட்பத்திலும் மொழியிலும் அதீத அக்கறை காட்டினார் என்பது முக்கியமானது. இதற்குச் சான்றாக இளங்கதிரில் வெளிவந்த ‘சோழகம்’ என்ற சிறுகதையைக் குறிப்பிடலாம். ‘கொட்டும்பனி’ தொகுதியில் இச்சிறுகதை வெளிவந்தபோது ஏராளமான செம்மைப்படுத்தல்களுடன் வெளிவந்ததைக் குறிப்பிடலாம். படைப்பாளியின் பொறுப்புணர்வை இதன் மூலம் இனங்கண்டு கொள்ளமுடிகின்றது
கதிர்காதநாதனின் மொழிபெயர்ப்புகள்
செ.கதிர்காமநாதன் புனைகதைகளை மொழிபெயர்ப்பதில் மிகுந்த ஆற்றல் பொருந்தியவராக விளங்கினார். கிருஷன் சந்தரின் நான் சாகமாட்டேன் என்ற குறுநாவல்;, முகமது பஷீரின் பூவன்பழம் நெடுங்கதை, கிருஷன் சந்தரின் செம்மலர்கள், ஆசியா விழித்துவிட்டது, பிறேம்சந்தின் கோயில்கதவுகள், முல்கராஜ் ஆனந்தின் ஒரு காயமடைந்த புறா, நோரா அடமியனின் மகன், மாபஸானின் ஓடலி, மினாயில் ஷோலகோவ் இன் குதிரைக்குட்டி, போலந்து எழுத்தாளர் ஜென்கோ ஊஜீனோவின் மாஜி ஆசிரியர், யங்கா பிரிலின் என் அன்னை, ஹங்மீ வாங்குவானின் ஒருநாள் பிரதியீடு முதலிய சிறுகதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். இவையே எமக்குக் கிடைக்கப்பெற்ற மொழிபெயர்ப்புகள்.
இவரால் மொழிபெயர்க்கப்பெற்ற குறுநாவல், நெடுங்கதை, சிறுகதைகள் இவரது கொள்கைகளுக்கு சார்பானவைகளாகவும் ஒரே குரல் உடையனவாகவும் விளங்கவதை அவதானிக்கலாம். இவை இவரது தீவிர வாசிப்பினையும், நல்ல படைப்புகளை இனங்காணும் ஆற்றலையும், அவற்றை இலகுவாக வெளிப்படுத்தும் மொழிபெயர்ப்புத் தாடனத்தையும் காட்டுகின்றன. சில சிறுகதைகளைத் தவிர பெரும்பாலும் இவரது மொழிபெயர்ப்புக்கதைகளைப் படிக்கும் போது மொழிபெயர்ப்பு என்று உணரத்தோன்றாத வகையில் மொழியும் களமும் பாத்திரங்களும் வாலாயப்பட்டு இருப்பதைக் காணலாம். இவரது பிறமொழிக் கதைகளின் பயில்வும் மொழிபெயர்ப்பு முயற்சியும் சேர்ந்தே ‘வியட்நாம் உனது தேவதைகளின் தேவவாக்கு’ என்ற சிறுகதை எழுதப்பெற்றது.
‘சர்வதேச ரீதியில் மனித குலமனைத்தையும் அதன் துயரத்தையும் இக்கதை பகிர்ந்துகொள்ளத் துடிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாம் மீது தாக்குவதை மனிதகுல நேசமுள்ளவர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள் அல்லவா? நீங்களும் நீதிதேவதையின் பக்கமே நிற்பீர்கள்.
வெளிநாட்டுப் பிரச்சினையை அலசும் முதல் தமிழ்ககதையாக (ஈழத்தில்) இது இருக்கக்கூடும்’
என்று தன் இறுதிச் சிறுகதையை வீரகேசரிக்கு அனுப்பிய போது செ.க கடிதம் எழுதிருந்தார். வெளிநாட்டுப் பிரச்சினையை அந்தச் சூழமைவில் உயிரோட்டமாக இவரால் எழுத முடிந்தமைக்கு இவரது வாசிப்பும் மொழிபெயர்ப்பு முயற்சிகளும் காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது ஆகும். கரவெட்டிக்களத்தில் இருந்து வியட்நாம் வரை அடக்குமுறைகள் எங்கெல்லாம் என்னவடித்தில் நிகழ்ந்தாலும் அதற்காகக் குரல் கொடுக்கின்ற மனிதகுல நேசமுள்ளவராய் இவர் விளங்கியிருந்தார்.
ஏனைய படைப்புகள்
சிறுகதைகள், மொழிபெயர்ப்பு முயற்சிகள் என்பவற்றைத் தவிர இவர் எழுதிய கட்டுரைகள், பத்திகள், விமர்சனங்கள், அறிமுகங்கள் இவருடைய வாசிப்பின் தேர்வு, இலக்கியக்கொள்கை, ஆளுமை என்பவற்றைப் புலப்படுத்துவனவாக உள்ளன. வீரகேசரியிலேயே இவைபெரும்பாலும் வெளிவந்திருந்தன. இளங்கதிர், அஞ்சலி என்பவற்றிலும் எழுதியுள்ளார்.
தன் படைப்புநிலைப்பாட்டை தனது கட்டுரைகள் வழியாக வெளிப்படுத்தும் தன்மை இவரிடம் காணப்பட்டது. சிறுகதைகளில் வட்டாரவழக்கை நயம்படக் கையாண்ட காரணத்தை இலங்கையிலும் இருக்கிறார்கள் என்ற கட்டுரையிலே கூறுகின்றார்.
தான் சார்ந்த இலக்கிய அபிமானத்தை இலங்கையிலும் இருக்கிறார்கள், சுதேசிகள் படைத்த விதேசி இலக்கியம்என்ற கட்டுரைகளில் செ.க வெளிப்படுத்துகின்றார். இளங்கதிர் ஆசிரியர் குறிப்பை ‘நமக்குள்ளே பல கதைகள்’ தலைப்பிட்டு ஈழத்துக் குழுமனப்பான்மைக்கு சாவுமணி அடிக்கவும் ஆராக்கியமான இதழ்களின் எழுகைக்கு வழிகோலவும் தேசிய உணர்வுமிக்க சமூகப் படைப்புகளை ஆக்குவதற்கும் அறைகூவல் விடுப்பதை மிகுந்த உணர்வுபூர்வமாக எழுதயிருந்தார்.
‘நமது பேனாவலியை மற்றவர்கள் உணரவைக்கவேண்டுமானால் ‘நமது’ என்ற தேசிய உணர்வு தோன்றவேண்டும்! அதன் அத்திவாரத்திலே, நம்மிடையே இருக்கும் கோஷ்டிப் பிரிவினைகள் மாறவேண்டும்…! சமூகச் சித்திரங்களை – அதன் ஏற்றத்தாழ்வுகளை மூலை முடுக்கெங்கும் புகுந்து சுக்குநூறாகப் பிரித்துச் சுட்டிக்காட்டும் வன்மை படைத்தவர்களாக சமூக சமத்துவ நோக்குடையவர்களாக – உண்மையான சமூகச் சிற்பிகளாக மாறவேண்டும.;
நாவல்கள் பற்றிய கருத்துக்களை ஆர.கே.நாராயணனின் வழிகாட்டிக்கு அமெரிக்கத் தயாரிப்பாளரின் ‘சத்தரசிகிச்சை’ , ஹிந்தி இலக்கியத்தில் இருள் விலகியது, நகைச்சுவையும் நல்ல நாவல் ஆகலாம், யுத்த பின்னணியும் தமிழ்நாவல்களும் நந்திக்கடல், ஒரு நோக்கு ஆகிய கட்டுரைகளிலும் பத்தியிலும் விளக்கிச் சொல்லுகின்றார். இதில் எல்லாம் இவரின் வாசிப்பின் ஆழம், பிறமொழி இலக்கியப் பயில்வு, நமக்கோர் கலை இலக்கிய மரபை ஆழப்படுத்தும் பிரக்ஞை, ஆய்வு மனப்பான்மை, எள்ளல் என்று பலவிடயங்களைக் காணமுடிகின்றது. மிகச் சுவாரசியமாகவும் இவரது கட்டுரைகள் அமைந்துள்ளன.
காதலி ஆற்றுப்படை பற்றியும் இவரால் எழுத முடிகின்றது – ஹிந்தி வங்காள ஆங்கில இலக்கியங்களைப் பற்றியும் இவரால் எழுத முடிகின்றது.
கவிதை தொடர்பான இவரது எண்ணங்களை கவிதைநயம் நூலுக்கு எழுதிய குறிப்பில் காணமுடிகின்றது. சிறுகதை தொடர்பான கருத்துக்களை விண்ணும் மண்ணும், கதைக் கனிகள் ஆகிய நூல்களுக்கு எழுதிய அறிமுகக்குறிப்புகளிலும் காணமுடிகின்றது.
தனது கொள்கைக்கேற்ற எழுத்தும் வாசிப்பும் இவரது தொடர்செயற்பாடுகளாய மைந்தன. பிறமொழி இலக்கியங்களை மிகச் சரளமாக அறிமுகப்படுத்த இவரால் முடிந்திருக்கின்றது. நம்முடைய இலக்கிய உலகை வளப்படுத்தவேண்டும் என்ற ஓர்மமும் இவரிடம் காணப்பட்டிருக்கின்றது. இவரது கதையுலகமும் ஏனைய எழுத்துக்களும் ஒரு கோட்டிலேயே பயணம் செய்தவை என்பதை இலகுவில் இனங்காணலாம். திடீரென ஏற்பட்ட காய்ச்சலால் பீடிக்கப்பட்டு கொழும்பில் உள்ள சுலைமான் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனற்றுப் போக 1972-09-01 ஆம் ஆண்டு கதிர்காமநாதன் காலம் ஆகினார்.
நன்றி தருமராசா அஜந்தகுமார்