யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர். ஏழு வயதிலேயே பாடல்கள் இயற்ற ஆரம்பித்தவர். 18-19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் வில்வராய முதலியார், ஒல்லாந்தர் அரசினால் “தேச வழமை” நூலை திருத்தி அமைக்க பணிக்கப்பட்ட அறிஞர். சின்னத்தம்பிப் புலவரின் தந்தை வில்லவராய முதலியார் நல்லூரில் அக்காலத்திலே செல்வத்தாலும் ஈகையாலும் சிறந்து விளங்கிய கூழங்கைத் தம்பிரான் இவரது வீட்டிலே இராக் காலத்திலே வித்தியாகாலட்சேபஞ் செய்து வந்தனர். சின்னத்தம்பிப் புலவர், தம்பிரான் காலக்ஷேபத்தின் பொருட்டுப் படித்துப் பொருள் சொல்லி வந்த பாட்டுக்களையெல்லாம் ஏழு வயதளவில் அவதானம் பண்ணி உடனே அவ்வாறே ஒப்பித்து வந்தனர். ஒருநாள் அப்புத்திரனார் வீதியிலே நின்று விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரு புலவர் வில்லவராய முதலியார் வீடு எங்கேயென்று வினாவ, அப்புத்திரனார் அவரைப் பார்த்து,
“பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்
நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் – மின்பிரபை
வீசுபுகழ் நல்லூரான் வில்லவராயன்றன்
வாசலிடைக்கொன்றை மரம்.”
என்று கூறினர். அதுகேட்ட புலவர் அவரை மெச்சி இச்சிறு பருவத்தே இத்துணைச் சிறந்த கவியினாலே விடை கூறிய நீ வரகவியாதல் வேண்டுமென ஆசி கூறிச் சென்றார். சின்னத்தம்பிப் புலவர் பதினைந்து வயதளவிற் சிதம்பரம் சென்று தலயாத்திரை செய்து மீளும்போது வேதாரணியத்தை அடைந்து அங்கே மறையந்தாதி பாடி அரங்கேற்றினார். அப்போது அவ்வாதீனத்து வித்துவானாகிய சொக்கலிங்கதேசிகர் என்பவர் சொல்லிய பின்வரும் கவி அவருடைய இயல்பை விளக்குகின்றது இயற்றிய பிரபந்தங்களாக பின்வருவன காணப்படுகின்றன. மறைசையந்தாதி – இது வேதாரணியேசுரர் மேற்பாடப்பெற்றது. இதற்கான உரையை உடுப்பிட்டி அ.சிவசம்புப் புலவரும், மதுரை மகா வித்துவான் சபாபதி முதலியார் எழுதியுள்ளார்கள். கல்வளையந்தாதி – இது யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் கல்வளையில் உள்ள விநாயகர் மீது பாடப்பெற்றது. இதற்கான உரையை வல்வெட்டித்துறை இயற்றமிழ்ப் போதகாசிரியர் ஸ்ரீ. வைத்திலிங்கம்பிள்ளை எழுதியுள் ளார். கரவை வேலன் கோவை – கரவெட்டி பிரபு திலகராகியவேலாயுதம் பிள்ளைமேற்பாடப்பட்டது. இக்கோவையை அரங்கேற்றியபோது ஒவ்வொரு செய்யுட்கும் ஒவ்வொரு பொற்றேங்காய் பரிசாக அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இச் செய்யுட்கள் சுன்னாகம் அ.குமாரசுவாமிப்புலவர் அவர்களால் “செந்தமிழ்” பத்திரிகையில் வெளியிடப்பட்டது.பறாளை விநாயகர் பள்ளு – சுளிபுரம், பறாளை என்னும் இடத்திலுள்ள விநாயகப் பெருமானின் மேற்பாடப்பட்டது.