தோற்றமும் வரலாற்றுப் பதிவும்
வண்டில்மாடு, மாட்டு வண்டில் என இரண்டு விதமாகக் கிராமங்களில் அழைக்கப்படுவது வழக்கம். கிராமத்தில் ஒருவனைப் பார்த்து அவன் வண்டில்மாடு வைத்திருக்கிறான் என்றும் வண்டிற்காரன் என்றும் குறிப்பிடுவது யாழ்ப்பாணப் பிரதேச வழக்கில் உண்டு.
சங்கத்தமிழ் இலக்கியங்கள், அதனோடெழுந்த பல்வேறு இலக்கியங்கள் வண்டிலை சகடம் என்று குறிப்பிட்டிருக்கின்றன. குறிப்பாக இரண்டு வரியால் உலகை அளந்த திருவள்ளுவர் தனது திருக்குறளில் 48 வது வலி அறிதல் அதிகாரத்தில் மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார்.
“பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்”
என்ற குறளின் மூலம் ஒருவன் சுமக்கக்கூடிய சுமையின் அளவினையும் அது மிகையானால் ஏற்படக்கூடிய வலியினையும் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். அதாவது மயிலின் தோகையானாலும் அளவுக்கு மிஞ்சிய சுமையை வண்டிலில் ஏற்றும் போது பாரந் தாங்க முடியாமல் அவ் வண்டிலின் அச்சு முறிந்து விடும் எனக்குறிப்பிட்டு வாழ்வின் சுமையினை வண்டி லின் பாரத்துடன் ஒப்பிட்டு விளக்கியிருக்கின்றார். இக்குறளின் மூலம் வண்டிலின் பயன்பாடு தொடர்பிலும் வண்டில் முற்காலத்திலிருந்துள்ள மையையும் அறியமுடிகின்றது.
நாலடியார், பெரும்பானாற்றுப்படை போன்ற சங்க இலக்கிய நூல்களிலும் வண்டில் பற்றிய சான்றுகளைக் காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. நாலடியார் என்ற இலக்கியத்தில் “பகடு நடந்த கூழ் பல்லாரோடுண்க” என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது பகடு என்பது கலப்பையின் உதவியால் எருதைக் கொண்டு கலப்பையால் கலப்பையால் உழுது பெற்ற உணவை எல்லோருடனும் பகிர்ந்து உண் என்பது இதன் பொருள். இக்காலத்தில் எருது, வண்டில், கலப்பை என்பவற்றின் பயன்பாடுகள் இருந்துள்ளன என்பதனை இத்தகைய பாடல் வரிகளிலிருந்து நாம் உணர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
அதேபோன்று கம்பராமாயணத்தின் சூழ்ச்சிப் படலத்தில் ஆபத்திலிருக்கும் மன்னனின் நிலை யினை வண்டிலின் சில்லு மணலில் புதையுண்டு வண்டிற்காரன் துன்பப்பட்ட வேளை இரக்கமுடைய ஒருவன் அத்துன்பத்திற்கு உதவி செய்து வண்டிற் சில்லினை தள்ளி உருள வைத்து துன்பத்திலிருந்து விடுவித்தமை போன்று அரசாட்சியில் இருண்ட உலகத்தினை காக்கும் மன்னன் இன்னலுக்குட்பட்டதனை உருளுடைச் சகடம் பூண்ட என்ற வரிகளின் ஊடாக வண்டிலை ஒப்பிட்டு விளக்;கியுள்ளதன் மூலம் வண்டிலின் தோற்றம் என்பது காலத்தால் முந்தியது என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் சான்று மூலாதாரங்களாக காணப்படுகின்றன.
“தெருளுடை மனத்து மன்னன் ஏவலில் திறம்பலின்றி
இருளுடை உலகம் காக்கும் இன்னலுக்கு இசைந்து நின்றான்.
உருளுடைச் சகடம் பூண்ட உடையவன் உய்த்த காரேது
அருளுடை ஒருவன் தூண்ட அப்பிணி அவிழ்ந்த தொத்தான்”
இத்தகைய சான்றுகள், பின்புலங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணத்து வண்டிலின் தோற்றத்தினையும் வரலாற்றுப் பதிவினையும் நோக்குகின்ற போது அதனுடைய தோற்றம் எங்கு உற்பத்தியானது என்பதில் சந்தேகம் நிலவுகின்றது. மனிதன் தோன்றும் போதே வண்டிலும் தோன்றியதா? இ;ல்லையேல் அவனுடைய நாகரிக வளர்ச்சியில் பரிமாணம் பெற்றுள்ளதா? என்றெல்லாம் சிநிதிக்கத்தூண்டும் அளவிற்கு வண்டில் சிறப்புப் பெறுகின்றது. மனிதனுடைய நாகரிகங்கள் பல்வேறு இடங்களிலும் தோன்றியிருக்கின்றது. இவையெல்லாம் உலக வளர்ச்சி நிலைகளைத் தெளிவாக்குகின்ற விடயங்களாகும். யாழ்ப்பாணத்து வாழ்வில் – பண்பாட்டில் வண்டிலின் தொன்மைபற்றி அதன் வரலாறு பற்றி எவ்வாறு அறிந்து கொள்வது என்பதிலும் ஐயப்பாடுகள் தோன்றுகின்றன. யாழ்ப்பாணத்தரசு காலத்திற்கு முற்பட்ட வரலாற்றுத் தொன்மையுடையது என்று ஒரு சிலரும், இன்னொரு சிலர் இலங்கையில் வாழ்ந்த இயக்கர், நாகர் வரலாற்றோடு தொடர்புடையதென்றும், வேறொரு வகையினர் மெசப்பொத்தேமியாவில் இருந்து கேரளாவிற்கும், கேரளாவில் இருந்து நேரடியாகப் புவியியல் தொடர்புகளினால் யாழ்ப்பாணத்திற்கும் பரவியிருக்கலாம் என்று குறிப்பிடுகின்றனர். எவ்வாறாயினும் சில்லும் எருதும் பற்றிய தடயங்களே தொல்லியற் சான்றுகளில் கிடைத்துள்ளன. இவற்றினை ஆதாரமாகக் கொண்டு மாட்டுவண்டிலின் பரிமாண வளர்ச்சியினை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. எனவே நாம் இவற்றோடு தொடர்புடைய தொல்லியற் பதிவுச் சான்றுகளினூடாகவே யாழ்ப்பாணத்து வாழ்வில் வண்டிலின் பரிமாண வளர்ச்சியை மதிப்பிட்டுக் கொள்ள முடியும்.
கலைக்களஞ்சியம் சக்கரம் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றது. ‘மனிதனது நாகரிக வளர்ச்சியில் சக்கரத்தின் கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். முதலில் சக்கரம் இல்லாத ‘சறுக்குவண்டிகள்”; ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போக்குவரத்தினை மேற்கொண்ட அவ்வண்டிகளுக்கு சக்கரம் அமைக்கப் பின்னரே கற்றுக்கொண்டனர். சக்கரம் பூட்டிய வண்டி களை இழுப்பது சறுக்கு வண்டிகளை இழுப்பதிலும் பார்க்க எளிதாக இருந்தது. போக்குவரத்துச் சாதனங்களில் முதலில் சக்கரம் பயன்படுத்தப்பட்டது. பின்னரேதான் எந்திரவியலில் சக்கரம் பயன்படும் வழக்கத்திற்கு வந்தது.
வெண்கலக்காலத்தில் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுவர். கி.மு 3000இல் மெசப்பொத் தேமியாவில் சக்கரம் பூட்டிய வண்டிகளைப் பயன்படுத்தினர். கி.மு 1600இற்குப் பின்னரே எகிப்தில் சக்கரம் வழக்கத்தில் வந்தது. பிரிட்டனில் இரும்புக்காலத் தொடக்கத்திலேயே சக்கரம் பயன்பாட்டிற்கு வந்தது. சிந்துவெளி நாகரிக மக்கள் வண்டிகளைப் பயன்படுத்தியிருக்கின்றார்கள். வேதத்திலும், வால்மீகி இராமாயணத் திலும் இரதங்களைப் பற்றிய குறிப்பு இருக்கின்றது. தொல்காப்பியம் என்னும் பழந்தமிழ் இலக்கணமும் தேரைப்பற்றிப் பேசுகின்றது.
வரலாற்றுக்கு முந்திய காலத்தில் நினைவுச் சின்னங்கள் கட்டத்தேவையான பெரிய கற்களைக் கற்குழிகளிலிருந்து கொண்டு வருவதற்கு சறுக்கு வண்டிகளைப் பயன்படுத்தினர். பின்னர் இந்த உருளையின் துண்டுகளை வண்டியில் இருக்கின்ற இருசில்லின் முனைகளிலும் அமைத்தனர். இத்தகைய திடவடிச் சக்கரங்கள் மிகப்பாரமுடையனவாக இருந்தன. பாரத்தைக் குறைக்கும் பொருட்டு ஏறக்குறைய கி.மு 2000 அளவில் சக்கரங் களுக்கு ஆரைக்கால் (ளுpழமநள) களை அமைத்தனர். வண்டிற்சக்கரங்கள் மட்டுமன்றி குயவனுடைய சக்கரத்தையும் மெசப்பொத்தே மியாவில் அறிந்திருந்தனர். பண்டைய பாபிலோனியாவில் தோண்டியெடுக்கப்பட்டு கல்லறைகளில் செப்புத் தகட்டு விளிம்பு பதித்த மரச்சக்கரங்கள் கிடைத்துள்ளன. எகிப்தியர் தோல் விளிம்புள்ள சக்கரங்களைப் பயன்படுத்தினர். கம்பி ஆரைக்காலுள்ள சக்கரங்களை 1869இல் முதலில் செய்தனர். பின்னர் நெம்புகோல்களையமைத்து வண்டியைத் தேவையானபடி செலுத்த வேண்டிய அமைப்பை ஏற்படுத்தினர். (கலைக்களஞ்சியம் தொகுதி 04)
கி.மு 3700 இல் சிந்துவெளிநாகரிக மக்கள் பயன்படுத்திய பல பொருள்கள் அகழ்வாராய்ச்சியின் பொழுது கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் எருதின் வடிவத்தைக் கொண்ட நாணயங் களும் கிடைக்கப் பெற்றுள்ளன. அதேபோல கி.மு. 1700களில் மத்திய தரைக்கடலில் உள்ள கிரீட்டன் தீவு தொல்லியற் படிவுகளிலும், தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தில் சக்கரம், எருது ஆகியன பொறிக்கப்பட்ட சான்றுகள் கிடைத்துள்ளன. கி.மு 800 அளவில் அதாவது பெருங்கற்காலப் பண்பாட்டுச் சவக்குழியில் இருந்து லாடன் கிடைத்துள்ளதோடு குயவசக்கரமும் கிடைக்கப் பெற்றுள்ளது. கந்தரோடையில் மீட்டெடுக்கப்பட்ட எலும்பு ஒன்றில் எருதின் படமும் அமைந்திருக்கின்றது. இவற்றின் வழியாக யாழ்ப்பாணத்தில் வண்டிலின் தொன்மையை அறிந்து கொள்ள முடிகின்றது. கந்தரோடை அகழ்வாராய்ச்சிகள் யாழ்ப்பாணத்தில் நிலவிய பெருங்கற்காலப் பண்பாட்டை எடுத்துக்காட்டியது. இக்காலம் கி.மு 800 அளவில் என ஆய்வாளர்கள் வரையறுத் துள்ளனர். இவ்வாய்வுகள் மூலம் கிடைத்த எலும்பு ஒன்றினில் எருதின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் இங்கு கிடைக்கப்பெற்ற ‘பன்னிரண்டு” அச்சுக்குத்தப்பட்ட நாணயங்கள் வட்ட வடிவினதாகவும், சதுர வடிவினதாகவும் காணப்பட்டன. இந்நாணயங்களின் முன்பக்கத்தில் சூரிய உருவமும் அல்லது வண்டிற்சில்லு ஒன்றிலே விலங்கு ஒன்று இழுத்துச் செல்வது போன்ற உருவமும் காணப்படுவதனை தொல்லியல் ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். (தகவல் கிரு~;ணராசா.செ.1998)
‘எலும்பினால் ஆன கருவி ஒரு பக்கம் தட்டையாகச் சமப்படுத்தப் பட்டு ஓர் எருதின் உருவம் வரையப்பட்டுள்ளதாகவும் காணப்படுகின்றது. மிகவும் நீளஅகலப்போக்கான அமைப்பினை உடைய அந்த எருதில் இரு கொம்புகள், சுருக்கங்களையுடைய தாடை, குறுகிய நான்கு கால்கள், வால் என்பன காணப்படுகின்றன”. (தகவல் கிருஷ்ணராசா.செ,1998)
யாழ்ப்பாணத்தில் மனித நாகரிக வரலாறு இற்றைக்கு 2800 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய தற்கு உறுதியான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இக்காலந்தொட்டு நிரந்தரக் குடியிருப்பு, நிரந்தர பொருளாதாரம், பண்டமாற்று, நகரமயமாக்கம், அயல் நாட்டு வர்த்தகம், கந்தரோடை, ஆனைக்கோட்டை, வல்லிபுரம் போன்ற இடங்களில் கிடைத்த திராவிட மக்களுக்கு உரிய பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் உறுதி செய்கின்றன. இந்தப் பண்பாட்டில் குறிப்பிட்ட இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதற்குச் சான்றுகள் இருப்பதனால் அதற்கு ஒரு போக்குவரத்துச் சாதனம் பயன்படுத்தப் பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் இப்பெருங்கற்காலப் பண்பாட்டில் மாடுகள் வீட்டு மிருகமாக வளர்க்கப்பட்டதற்குப் போதிய சான்றுகள் உண்டு. இந்த மிருகங்கள் பயிற்செய்கை நடவடிக்கையோடு, போக்குவரத்து சாதனங்களுக்கும் பயன்படுத்தியிருக் கலாமென நம்பப்படுகின்றது. இரு நாடுகளிலும் இப்பண்பாட்டு மட்பாண்டங்களில் வண்டிச் சக்கரங்கள், பாய்மரக்கப்பல்கள் போன்ற குறியீடுகளாகவும், சின்னங்களாகவும் குறிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் மிகப்பெரிய புராதன பாறை ஓவியங்களில் மாடும் போக்குவரத்து சாதனமும் கீறப்பட்டிருப்பதை ஆதாரம் காட்டும் கலாநிதி பவுன்துரை இவ் ஓவியங்கள் பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரியவை என்று குறிப்பிடுகின்றார். இலங்கை பெருங்கற்காலப் பண்பாடு தமிழகத்தின் ஒரு பிரிவாகக் காணப்படுவதால் யாழ்ப்பாணத் திலும் இதன் பயன்பாடு நூற்றாண்டிலிருந்து பல்வேறு போக்குவரத்துச் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டமை பற்றிக் கூறுகின்றன. குறிப்பாக எல்லாளன் என்ற தமிழ் மன்னன் தேரிற் போகும் போது தேரினால் உடைக்கப்பட்ட பௌத்த தூபிக்கு பதினையாயிரம் ரூபாவினைத் தண்டமாகக் கொடுத்தான் என மகாவம்சம் கூறுகின்றது. இங்கே தேரின் பயன்பாடு இருந்தமையையும் மறைமுகமாகச் சுட்டுகின்றது. இலங்கையின் பண்டைய காலக் கல்வெட்டுக்களும், பாளி இலக்கியங்களும் ‘வில்’ என முடியும் புராதன இடப்பெயர்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன. பேராசிரியர் பரமசிவம் ‘வில்’ என்ற இடப்பெயரிலிருந்தே வில்லு வண்டில் வந்ததாக குறிப்பிடுகின்றார்.
10ஆம், 11ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழ்க் கல்வெட்டுக்களில் ஆலயங்களுக்கு கொடுக்கப்பட்ட தானங்களில் காளைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதற்கு அக்காலத்தில் போர்த்துக் கேயர் வருவதற்கு முன்னர் புராதன போக்குவரத்து மையங்களில் ஆவுரஞ்சிக்கல்லும் சுமைதாங்கியும் முக்கியத்துவம் பெற்றிருந் தமையினை இன்றும் அவற்றின் அழிபாடுகள் உணர்த்துகின்றன. இதில் ஆவுரஞ்சிக்கல் என்பது வண்டிலை இழுத்துச் செல்லும் காளைகள் முதுகினை உரஞ்சுவதற்கும், மாடுகள் சுமைதாங்கி வண்டிலிலிருந்து பொருள்களை ஏற்றவும் இறக்கவும் பயன்பட்டது. (தகவல் புஸ்பரட்ணம்.சி,2005 ) யாழ்ப்பாணத்தில் இயந்திரவாகனப் பாவனைக்கு முன் நிலவிய வண்டில் மிகவும் தொன்மை வாய்ந்ததும் பெருங்கற்காலப் பண்பாட்டிலிருந்து பயன்பாட்டிலும் இருந்துள்ளது. காலப்போக்கிலேயே அது இன்றைய வளர்ச்சி நிலையையுடைய பரிமாண வளர்ச்சி பெற்றிருப்பதாகக் கொள்ளமுடியும்.
சில்லுஇல்லாத சறுக்குவண்டில் – பாரம்குறைந்த வண்டில் – சக்கரம் – வளர்ச்சிபெற்ற நிலையில் ஆரைக்கால்கள் பொருந்திய சில்லு – இன்றைய வண்டில்கள்
அமெரிக்க இலங்கை மிஷன் சரித்திர நூலில் வண்டில் சில்லுக்கு இரும்பு வளையமிடப்பட்ட பதிவு காணப்படுகின்றது. அந்நூலில் ‘………… இக்காலத்தில் மனுசர் உபயோகிக்கும் வாகனங்கள், வண்டிகள் முதலியவைகள் அக்காலத்திற்கிடையா என்பனவாம். ஆதிமிசனரிமாருள் ஒருவராகிய மெக்ஸ் ஐயரே வண்டிகளுக்கு இரும்பு வளையமிடப்படும் வகையைக் காட்டிக் கொடுத்து வண்டிகளைச் சரியாய் உபயோகிக்கச் செய்தவர்.” (வேலுப்பிள்ளை சி.டி 1922) இச்சம்பவம் கி.மு 1817ற்குப் பின்னர் நடைபெற்றிருக்கக் கூடும். ஏனெனில் மெக்ஸ் ஐயர் 1717 ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் வட்டுக்கோட்டையில் குடியேறினார். இப்பதிவினை நோக்குகின்ற போது யாழ்ப்பாண வாழ்வில் வண்டில்கள் தொன்மையான வரலாறு உடையது என்பது உறுதியாகின்றது.
மனிதனின் புத்திக்கூர்மை வளர்ச்சிக்கேற்ப இலகுவாகவும், விரைவாகவும் தேவைக்குத்தக்கவாறு பயன்படுத்தக் கூடியதாக வண்டில்கள் அமைப்பு மாற்றமடைந்தது எனக் கருதலாம்.