21.11.1936 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலுள்ள புலோலி என்னும் ஊரிற் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியைப் புலோலி தமிழ்ப் பாடசாலையிலும், பின் புலோலி ஆங்கிலப் பாடசாலையிலும் கற்று, தனது உயர்கல்வியைக் ஹாட்லிக் கல்லூரியிற் கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். பேராசிரியர். க.கணபதிப்பிள்ளை அவர்களின் நெறிப்படுத்தலில் தமிழிற் கலாநிதிப் பட்டத்தை, மிக இளம் வயதிலே, முதன் முதலில் இலங்கையிற் பெற்றுக் கொண்டவர் இவரே என்று அவரது வரலாற்றுக் குறிப்பில் இருந்து அறியமுடிகின்றது. இதன்பின் இலண்டனில் உள்ள ஒக்ஸ்வேட் சர்வகலா சாலையில் தோமஸ்ப்ரோ என்பவரின் நெறிப்படுத்தலிற் கலாநிதிப் பட்டத்தைப் பெற்று இரண்டு கலாநிதிப் பட்டங்களைப் பெற்ற பெருமைக்குரியவரானார். பேராசிரியர் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1964 ஆம் ஆண்டு விரிவுரையாளராகப் பதவியேற்றுப் படிப்படி யாக உயர்வு பெற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராகத் தமிழ்த துறைத் தலைவராகக் கடமையாற்றிப் பின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப் பேராசிரிய ராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். நோர்வேயிலும், பின் அமெரிக்காவிலுள்ள இரண்டு பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராக, பேராசிரியராக, கலாநிதிப்பட்ட நெறியாளராக, கலாநிதிப்பட்ட மதிப்பீட்டாளராகப் பணிபுரிந்துள்ளார். இவர் பல ஆய்வு நூல்களையும் ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். ஈழத்துத் தமிழறிஞர் ஒருவரை, அவரது ஆழ்ந்த புலமையினை, உயரிய பண்பை, இலண்டன், சுவீடன், நோர்வே, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் இனங்கண்டு கொண்டது மட்டுமன்றி அவரது அறிவை, சிந்தனையை அந்த நாட்டு இளம் தலைமுறையினருக்குப் பெற்றுக்கொடுப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயற் பட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் சமயவியல்துறையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்தவர். 1973-1974 இல் திருவனந்தபுரத்தில் உள்ள திராவிடமொழியியற் பள்ளியில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிந்தவர். அப்பொழுது கேரளப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்தவர். 1980 இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தில் முதுநிலைப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். 1981-1982 இல் பொதுநல நாடுகள் (காமன்வெல்த் நாடுகள்) கழகத்தில் நிதியுதவி பெற்று இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் உலகப் புகழ்பெற்ற பேராசிரியர் ஆசர் அவர்களுடன் இணைந்து பணிசெய்தவர். 1990-2000 இல் சுவீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இவர் 1959-1962 இல் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு தமிழில் முதன் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர். பாண்டியர் காலக் கல்வெட்டுகளில் (1251- 1350 யுனு) தமிழ்மொழிநிலை என்ற பொருளில் ஆய்வு செய்தவர். கல்வெட்டுகளில் தமிழ்மொழியின் நிலை (கி.பி.800 – 920) என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தியவர். இவரது கல்வெட்டு ஆய்வுகள் தமிழகக் கல்வெட்டுகளைப் பற்றியும், இலங்கைக் கல்வெட்டுகள் பற்றியும் பல தகவல்களைத் தருகின்றன. பின்னாளில் இவரது ஆய்வேட்டுச் செய்திகள் நூல்வடிவம் பெற்றபொழுது தமிழுலகம் இவரது ஆராய்ச்சி வன்மையை ஏற்றுப் போற்றியது. 31.05.1996 இல் சுவீடனில் உள்ள உப்சாலாப் பல்கலைக்கழகமும் இவரது பேரறிவுகண்டு இவருக்குச் சிறப்பு முனைவர் பட்டம் வழங்கிப் பாராட்டியது. இவரால் வெளியிடப்பட்ட நூல்களாக இலக்கணக் கொள்கைக் கட்டுரைகளிலே கணேசையரின் அணுகுமுறை, ஈழத்து அறிஞர் ஆளுமைகள், கல்வெட்டுச் சான்றும் தமிழாய்வும் (ஆங்கிலத்தில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது), கல்வெட்டில் தமிழ்க்கிளைமொழியியல் ஆய்வு (ஆங்கிலத்தில், திராவிட மொழியியற் கழகம் வெளியிட்டது), சாசனமும் தமிழும், சேர் பொன். இராமநாதன் நினைவுப் பேருரை, தமிழிலக் கியத்தில் காலமும் கருத்தும், தமிழ் வரலாற்றிலக்கணம், நினைவுப்பேருரை பேராசிரியர் வித்தியானந்தன் காட்டும் ஈழத்துத் தமிழர்சால்புக் கோலம், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, தமிழர் சமய வரலாறு போன்றவற்றினைக் குறிப்பிடலாம். தமிழ் இலக்கிய உலகில் தமிழர்களின் பண்டைய வரலாற்றுப் பெருமைகளைத் தனது ஆய்வுகள் மூலம் வெளிக் கொணர்ந்தவர். பேராசிரியர் அவர்கள் அமெரிக்காவில் 1.11.2015 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.