ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிப் பகுதியில் அதாவது 1794-01-27 ஆம் நாளில் பெரியகோவிலாகக் கட்டப்பட்டிருந்ததாகப் பதிவுகள் கூறுகின்றன. 1794 இல் இருந்து 2016 வரையான 216 ஆண்டுகள் கடந்த வரலாற்றினை உள்ளடக்கியதாக இவ்வாலயம் காணப்படுகின்றது. போர்த்துக்கேயர் காலத்தில் சிறிய கோவிலாக இருந்தபோது பன்றிக்கோட்டுப்பிள்ளையார் கோவில் எனக் காரணப்பெயர்கொண்டு வணங்கி வந்துள்ளனர். பிரம்மஸ்ரீ அகிலேசஐயர் கணேசையர் 1794 இல் இவ் வாலயத்தின் ஆதீன கர்த்தாவாகவும் மூதாதையராகவும் இருந்துள்ளனர்.தொடர்ந்து ஆண்சந்ததி நேர்வழி வாரிசுகள் கோவிலைநிர்வகித்து வந்துள்ளனர். பிற்காலத்தில் கந்தப்பசேகரம் திருப்பணிகளைச் செய்ததோடு முகாமையாளராகவும் இருந்து வந்துள்ளார்.ஆதீனத்தின் கடைசி வாரிசாகிய பிரம்மஸ்ரீ ச.பாலசுப்பிரமணிய ஐயரும் திரு. க.ஆ.கந்தப்ப சேகரமும் தங்களுடன் சேர்த்து பன்னிரண்டுபேர் கொண்ட ஆலய பரிபாலன சபையை 1951இல் ஸ்தாபித்தார்கள்.அன்றிலிருந்து இன்று வரை தர்மகர்த்தா சபை கோவிலை நிர்வகித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 1954,1986,2001,2004 ஆகிய ஆண்டுகளில் மஹாகும்பாபிசேகம் நடந்தேறியமை குறிப்பிடத்தக்கது. ஆனி உத்தரத்தினை இறுதி நாளாகக்கொண்டு பத்து நாட்கள் அலங்கார உற்சவம் நடைபெற்று வருவது வழக்கம்.