கனகசபை நாகேந்திரம்பிள்ளை என்னும் இயற்பெயருடைய இவர் தமிழின் பால் கொண்ட பற்றினால் தனித்தமிழாக்கமாக வேந்தனார் என நாமம் சூட்டிக்கொண்டார். 1918-11-05 ஆம் நாள் யாழ் தீபகற்பம் வேலணை என்னுமிடத்தில் பிறந்தவர். 1941 இல் பண்டிதர் பட்டத்தினையும், 1947 இல் வித்துவான், தமிழ்ப்பேரன்பர் பட்டத்தினையும், 1964 இல் சித்தாந்தசிரோன்மணி பட்டத்தினையும் பெற்றுக்கொண்டவர். 1946-1966 காலப்பகுதி வரை யாழ் . பரமேஸ்வராக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1940களிலிருந்து கட்டுரை, காவியம், கவிதை, நூலாக்கம் எனப் பல்துறைகளில் தன்னை வெளிப்படுத்தி நின்றார். 1961 இல் கவிதைப் பூம்பொழில், சான்றோர் வளர்த்த தமிழ், இந்துசமயம், ஆகிய நூல்களையும், கம்பராமாயணம், கும்பகர்ணன்வதைப்படலம், காட்சிப்படலமும் நிந்தனைப் படலமும், மந்தரை சூழ்ச்சிப்படலமும் கைகேயி சூழ்வினைப்படலமும் ஆகிய உரை நூல்களையும் வெளியிட்டவர். இந்துசாதனம், தினகரன், தமிழ்மணி, யாழ்பாடி, நாவலன், ஈழநாடு, சிவதொண்டன், சுதந்திரன், தமிழ்இளைஞன், ஈழகேசரி, வீரகேசரி ஆகிய இதழ்களில் ஆக்கபூர் வமான கட்டுரைகள் பலவற்றினை எழுதியவர். 1966-09-18 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.