1915-11-11 ஆம் நாள் நாவற்குழி என்னுமிடத்தில் பிறந்து தெல்லிப்பளை- குரும்பசிட்டியில் வாழ்ந்தவர்.நாவலர் வழி வந்த வித்துவசிரோன்மணி கணேசையர் முதலான தமிழறிஞர்களிடம் பயின்று மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டித பரீட்சையில் சித்தி பெற்றவர். இவரது நூல்கள் செந்தமிழ் வளம், இலக்கியச் சுவையும், தூய இனிய வசனநடையும் வாய்க்கப்பெற்றவை. இலக்கியமஞ்சரி, உரைநடைவிருந்து, மொழிப்பயிற்சி, சகுந்தலை சரிதை, மணிமேகலை முதலான நூல்களை ஆக்கியவர். ஈழகேசரியிலும், கலைச்செல்வியிலும் பல இலக்கியக் கட்டுரைகளையும், விமர் சனங்களையும் எழுதியவர். இத்தகைய படைப்புக்களின் சிறப்பே இவரை கல்வி வெளியீட்டுத் திணைக்கள பாடநூற் பதிப்பகத்திற்கு பணிபுரியுமளவிற்கு உயர்த்தியது. தனது வழிகாட்டி ஈழகேசரி நா.பொன்னையா என்று கூறிப் பெருமிதம் கொண்டவர். 2000-08-17 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.