போர்த்துக்கேயர் காலத்தில் வரணிக்கோவிற்பற்றில் அடங்கியிருந்ததாகவும் தற்பொழுது வடமராட்சி கிழக்குப் பகுதிக்குரியதாகவும் காணப்படுகின்றது. சங்கிலியன் காலத்தில் திருவம்பல முதலி என்பவர் தம்பானுக்கு அண்மையிலுள்ள அம்பலவாணக்குளக்கரை என்னுமிடத்தில் இருந்து சிவபூசை செய்வதோடு விநாயகரையும் சிதம்பரம் சென்று தில்லையம்பலத்தையும் வழிபட்டு வந்தமையினால் போர்த்துக்கேயரால் சிரச்சேத தண்டனைக்குட்படுத்தப்பட்டார். அதன்படி தற்போது ஆலயமமைந்துள்ள காட்டுப் பகுதியில் சிரசு வெட்டப்பட்டபோது அவர் தில்லையம்பலப்பிள்ளையாரே எனக்கூறி சிவபதமடைந்தார் எனவும் இவ்விடமே பின்னர் கீர்த்திபெற்ற ஆலயமாக தில்லையம்பலப் பிள்ளையாராக வளர்ச்சியுற்றதெனலாம். கால்நடைகளை நோய ;களில் இருந்து காப்பாற்றுவதற்காக நேர்த்திக்கடன் வைத்த பக்தர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தின் நாலாதிசைகளிலுமிருந்துஇவ்வாலயத்திற்கு வருகைதந்து தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவது வழக்கம். இவ்வாலயத்தில் அபிஷேகமும், எண்ணெய்யில் பொரித் தெடுத்த மோதகமும் விசேடமான நெய்வேத்தியங்களாகும்.