Sunday, June 16

சாதனை வீரன் ஆழிக்குமரன் ஆனந்தன்

1

வல்வெட்டித்துறை மண் பெற்றெடுத்த சாதனையாளர்களின் வரிசையில். வி.எஸ்.சி. ஆனந்தன் என சுருக்கமாக அழைக்கப்படும், விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் என்ற அந்த உலக சாதனையாளனின் வரலாறும், அனுபவங்களும் புதிய தலைமுறை யினருக்கு ஒரு பாடமாகவும், உந்துசக்தியாகவும்  அமையும். ஆனந்தன், ராசு, ஆழிக் குமரன் என்றெல்லாம் பேசப்படும் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் 1943 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி வல்வெட்டித்துறையில், தெணியம்பை என்ற இடத்தில்,  பொறியியலாளராகக் கடமையாற்றிய விவேகானந்தன் அவர்களதும், செல்வானந்த ராஜம் அவர்களதும் சிரேஸ்ட புதலவனாகப் பிறந்த பொழுது அந்தக் குழந்தையின் இருவழிப் பேரன்மார்களையும் நினைவு கூரும் வகையில், விவேகானந்தன் அவர்களின் தந்தையின் பெயரான குமாரசாமியில் இருந்து முதல் பகுதியையும்,அவரது தாயார், இராஜன் என்று அழைக்கப்படும் இராஜரட்ணம் அவர்களின் தந்தையின் பெயரான செல்லத்துரை என்ற பெயரின் முதல் பகுதியையும் இணைத்து “செல்வகுமார் ஆனந்தன்” என்ற நீண்ட பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்கள். ஆதுவே பிற்காலத்தில் “வி.எஸ்.சி.ஆனந்தன்”  என்ற பெயராக நிலைத்து நின்றது.

சிறு வயதில் இருந்தே ஆனந்தனிடம் எதனைச் செய்தாலும் தானே முதலில் செய்ய வேண்டும் என்ற பிடிவாதக் குணமும்,எந்தப் போட்டியிலும் தானே வெற்றிபெறவேண்டும் என்ற வைராக்கியமும் இருந்து வந்தது. “ஆனந்தன் சிறு வயதில் இருந்தே எதிலும் வெற்றி பெறவே முயற்சி செய்வான். உழைத்துச் சம்பாதிப்பதைத் தனது சாதனை முயற்சிகளுக்கே செலவிடுவான். சாதனைகளின் போது கிடைக்கும் பரிசு; பணத்தை ஊனமுற்றவர்களுக்கே உதவிடுவான்…..” என்று அவரது தாயார் திருமதி இரான் விவேகானந்தன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

 1953 ஆம் ஆண்டில் முதன் முதலில் பாக்கு நீரிணையைக் கடந்து சாதனை நிலைநாட்டிய நீச்சு வீரன் நவரத்தினசாமியின் “நீச்சல் வாரிசாக” ஆனந்தன் பாக்கு நீரிணையை நீந்திக் கடப்பதற்குத் தயாராகினார். ஆழிக் கடலில் இறங்குவதற்கு முன்னர், நீச்சல் சாதனையாளர் அமரர் நவரத்தினசாமி அவர்களின் வீட்டுக்குச் சென்று ஆசி பெற்றதுடன் கடலில் திடீர், திடீரென ஏற்படும் கால நிலை மாற்றங்கள் பற்றியும் அவ்வாறான மாற்றங்களின் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றியும் தெரிந்து கொண்ட ஆனந்தன் தனது நீச்சல் சாதனையை நிலை நாட்டுவதற்குப் புறப்பட்டார்.

அலை கடல் ஆர்ப்பரிக்கும் ரேவடிக் கடற்கரையெங்கும்  மக்கள் வெள்ளத்தில் நிறைந்து போய் இருந்தது. பல நூற்றுக் கணக்கான வள்ளங்கள் புடை சூழ  அங்கு குழுமி நின்ற மக்களின் உணர்ச்சி பூர்வமான வாழ்த்தொலிகள் வானைப் பிளக்க ஆனந்தன் என்ற அந்த 18 வயது இளைஞனின் உடல் முழுவதும் ‘கிறிஸ்’ பூசப்பட்ட நிலையில் கடலில் இறங்கி நடக்கத் தொடங்கினார். வானை முட்டுமளவுக்குப் பொங்கி எழும் பேரலைகளை எதிர்த்து அந்த ஆழிக் கடலினூடாக வல்வெட்டித்துறையில் இருந்து தமிழகத்தின் கோடியாக் கரைவரை நீந்திச் சென்று,மீண்டும் அதே பாதையில் நீந்தி வந்து வல்வெட்டித்துறை மண்ணைத் தொடவேண்டுமென்பதே ஆனந்தனின் இலட்சி யமாக இருந்தது.

வல்வைக்  கடற்கரையில் நின்று வழி அனுப்புவதற்காக வந்திருந்த மக்களுக்குக் கை காட்டி தன்னுடைய வணக்கத்தையும் தெரிவித்துவிட்டு ஆனந்தன் கடலில் இறங்கி கழுத்து வரை மறையும் ஆழம் வரை நடந்து சென்று பின்னர் நீந்தத் தொடங்கினார்.  ஊரில் உள்ள அத்தனை வள்ளங்களும் ஆனந்தனுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்காக அவரைச் சூழ்ந்து சென்று கொண்டிருந்தன. ஆனந்தனுக்கு உற்சாகத்தை வழங்குவதற்காக இடையிடையே அவரது சில நண்பர்களும்  அவருக்குச் சிறிது தூரம் தள்ளி நீந்திக் கொண்டிருந்தனர். படிப்படியாக இரண்டு பக்கங்களினதும் கரைகள் மறையத் தொடங்கியதும் போகும் பாதையும் தெரியவில்லை, அவர்கள் சென்று கொண்டிருக்கும் திசைகளும் தெரியவில்லை.

சூரியன் மறையும் நேரத்தில் திடீரென வானம் இருண்டுகொண்டு வந்து கடும் குளிர் காற்று வீசத் தொடங்கிவிட்டது. நீண்ட நேரமாக நீந்திக் கொண்டிருந்த ஆனந்தனின் உள்ளங்கால்கள் இரண்டும் வெளிறிப் போய் இருந்தது. இது மிகவும் ஆபத்தான ஒரு விடயமாகும். வானமும் கடலும் இருண்டு கொண்டு வநத்தாலும் இலகுவில் வெள்ளை நிறம் பளிச்சென்று தெரியும். அவ்வாறான வெள்ளை நிறங்களை நோக்கி பெரிய சுறா மீன்கள் வந்து தாக்கத் தொடங்கும். காற்றும் வேகமாக அடிக்கத் தொடங்கியதால் ஆனந்தனால் ஒரு சரியான திசையை நோக்கி நீந்த முடியவில்லை. பதினைந்து நிமிடங்களுக்குள் வானம் இருண்டு கொண்டே வந்துவிட்டது. அலைகள் பத்தடி உயரத்திற்கு பொங்கி எழுந்து,  துணையாக வந்த வள்ளங்களின் மேல் மோதியது. பெருத்த இரைச்சலுடன் மழையும் பெய்யத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு அலையும் கூடச் சென்ற படகுகளைக் கவிழ்த்து விடுவது போல் மோதிச் சென்றது.

  ஒரு திசையில் போய்க் கொண்டிருந்த வள்ளங்கள் அலையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது வேறு திசைகளில் செல்லத் தொடங்கிவி;ட்டன. அந்த வேகத்தில் அலையை எதிர்த்து நீந்திக் கொண்டிருந்த ஆனந்தனையும் அலை வேறு திசைக்கு இழுத்துச் சென்றதால், ஆனந்தனைக் காணாது தவித்தனர். அவருக்குத் துணையாகச் சென்றவர்களுக்கு அச்சம் ஏற்பட்டு விட்டது.  இரவு முழுவதும் அச்சத்துடன் பொழுதைக் கழித்தபடி,  துணைக்குச் சென்றவர்களால், ஆனந்தனைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது போய்விட்டது. கிழக்கு வெளிக்கத் தொடங்கியதும் தான்  தூரத்தில் ஆனந்தன் மெதுவாக நீந்திக் கொண்டிருந்தது தெரிந்தது. நீண்ட நேரம் இரவிரவாக நீந்திக் கொண்டிருந்ததாலும், உப்புக் கடல் நீரை அதிகளவில் அருந்தியதாலும் வாந்தி எடுக்கத் தொடங்கிவிட்டார். அவரது நிலையைப் பார்த்த, அவரது நண்பர்கள், ஆனந்தனை நீச்சலைக் கைவிட்டு வள்ளத்தில் ஏறிக்கொள்ளு மாறு  கெஞ்சினார்கள். ஆனந்தனுக்கு உள்ள வழமையான பிடிவாதக் குணம் காரணமாக அவர்களுடன் வள்ளத்தில் ஏற மறுத்து விட்டார். ஆனால் ஆனந்தனைக் கட்டாயப்படுத்தி இன்னுமொரு சந்தர்ப்பத்தில் சாதனையை முடிக்கலாம் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் ஆனந்தன் பலவந்தமாக ஏற்றப்பட்டார். இதனால் ஆனந்தன் தனது நீச்சல் சாதனையைகை; கைவிடும் நிலை வந்ததால், வள்ளத்தில் இருந்த ஒருவரையும் ஆனந்தன் ஏறெடுத் தும் பார்க்கவில்லை. இந்தப் பயணம் முழுவதும் தனது தோல்வியை நினைத்து அழுது கொண்டே வந்தார். தனது பள்ளிப் படிப்பிலோ அல்லது பல்கலைக்கழக வாழ்க்கை யிலோ தோல்வியைச் சந்தித்து அனுபவிக்காத ஆனந்தனால், இந்த ஏமாற்றத்தையும், தோல்வியையும்  சீரணித்துக் கொள்ளமுடியவில்லை.

சிலநாள்களின் பின் பயிற்சிகளையும், காலநிலை மாற்றங்கள் பற்றியும் நன்கு அறிந்து கொண்ட ஆனந்தன் மீண்டும் பாக்குநீரிணையைக் கடக்கும் நீச்சல் சாதனையின் இரண்டாவது பயணத்திற்கான முயற்சியினை மேற்கொண்டார். அன்றும் கூட பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்த்தொலிகளின் மத்தியில், பல நூற்றுக்கணக்கான வள்ளங்கள் புடை சூழ ஆனந்தனின் நீச்சல் பயணம் இரண்டாவது தடவையாக ஆரம்பமானது. 1963 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் (சுங்கக் கடற்கரை) அவரது இரண்டாவது நீச்சல் சாதனைக்கான பயணம் ஆரம்பமானது. அன்று பிற்பகல் 4.15 மணிக்கு ஆரம்பித்த அவரது நீச்சல் பயணம் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 42 மணி நேரம் வரை கடலில் நீந்தியும் மிதந்தும் சென்று தமிழகத்தின் கோடிக் கரையில் நிறைவடைந்தது.

 1953 ஆம் ஆண்டு நீச்சு வீரன் நவரத்தினசாமி அவர்களுக்கு தமிழக மக்களால் எவ்வாறு மாபெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டதோ, அவ்வாறே  தமிழக உறவுகளால் ஆனந்தனுக்கும் வழங்கப்பட்டது. இந்த இரு சாதனையாளர்களுக்கும் தமிழகத்தின் கோடியாக்கரை மக்கள் திரண்டு வாழ்த்தியமை வல்வெட்டித்துறை நகரத்திற்கு மட்டுமல்லாது, தமிழர்கள் பரந்து வாழும் உலகுக்கே பெருமை சேர்த்த ஒன்றாக அமைந்தது. ஆனந்தனின் அந்த இரண்டாவது முயற்சி எந்த ஒரு பிரச்சினையும் இல்லாது, வெற்றிகரமாக முடிவடைந்தமை ஆனந்தனுக்கு மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கெல்லாம் சந்தோசத்தைக் கொடுத்தது. அங்கிருந்து ஆனந்தனை மீண்டும் வள்ளமொன்றிலேயே வல்வெட்டித்துறைக்கு அழைத்துச் சென்றனர். மறுநாள் சனிக்கிழமை வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரை விழாக்கோலம் பூண்டிருந்தது. காற்றில் அசைந்து அசைந்து ஆடும் வண்ணக் கொடிகளாலும்,மேடை அலங்காரங் களாலும் வல்வெட்டித்துறைக் கடற்கரை அழகூட்டப்பட்டிருந்தது. 18 வயதில் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்த வீர மைந்தனுக்குப் பிறந்த நகரமே விழா எடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. அங்கே அமைக்கப்பட்டிருந்த அழகான மேடையில் ஆனந்தன் அமர்ந்திருக்க பூமாலைகள அவரை மறைத்துக் கொண்டிருக்க சுற்றி வர மக்கள் கூட்டம் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆரவார ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தது. அந்தப் பாராட்டு விழாவில்,ஈழத் தமிழர்களின் தலைவரும், தமிழரசுக்கட்சியின் தலைவரும்,தந்தை செல்வா அமரர். சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்கள் முன்னிலையில் அவரது வாழ்த்துரையுடன் நடந்த அந்தப் பாராட்டு வைபவத்தில் அவர் வாழ்த்திய அந்த நிகழ்வு,ஆனந்தனின் வாழ்வில் மறக்கமுடியாத ஒன்று என்று அவரே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார். அன்று அதே மேடையில் வைத்து இவரது சாதனையைப் பாராட்டி வீரகேசரியின் பிரதம ஆசிரியராக இருந்த பத்திரிகை உலகின் ஜாம்பவான் என்று அழைக்க்பபட்ட திரு. எஸ்.டி.சிவநாயகம் அவர்கள், ஆழிக்கடல் கடந்து சாதனையை மேற்கொண்ட ஆனந்தனுக்கு “ஆழிக்குமரன்” என்ற பட்டத்தைச் சூட்டிக் கௌரவித்திருந்தார். அன்று வீரகேசரி வழங்கிய “ஆழிக்குமரன் ஆனந்தன்” என்ற பட்டமே,கடைசி வரை அவரது பெயராக நிலைத்து விட்டது.

   ரேவடிக் கடற்கரையில் நடைபெற்ற வரவேற்பு வைபவத்தில், ஆனந்தன் பேசும்போது, “பாக்கு நீரிணையை நீந்திக் கடந்தது போல் என்றோ ஒரு நாள் ஆங்கிலக் கால்வாயையும் நீந்திக் கடப்பேன்” என்று வைராக்கியத்துடன் கூறிய பிரகடனம் ஆனந்தனுக்குப் பிற்காலத்தில் அதுவே ஒரு சவாலாகவும் இருந்தது. ஆனந்தன்; தனது 18 ஆவது வயதிலேயே ஆழியை நீந்திக் கடந்து சாதனை புரிந்தது போல், தனது கல்வியைத் தொடர்வதற்காகவும், பல பாடசாலைகளில் ஏறி இறங்கிக் கற்றும் சாதனை புரிந்த ஒரு பல்துறை ஆற்றல் உள்ளவராகவும் திகழ்ந்தார்.

அவர் தனது ஆரம்பக் கல்வியை வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாலயத்தில் ஆரம்பித்து பின்னர் வல்வை சிதம்பரக்கல்லூரியிலும அங்கிருந்து யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரியிலும் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் பண்டாரவளை குருத்தலாவலை சென் தோமஸ் கல்லூரி, கல்கிசை சென் தோமஸ் கல்லூரி வரை சென்று கற்று மீண்டும் யாழ்ப்பாணம் வந்து பருத்தித்துறை காட்லிக் கல்லூரியில் சேர்ந்து கற்றுக் கொண்டிருந்த பொழுது, அங்கிருந்து வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் க.பொ.த. உயர்தர வகுப்பில் கற்பதற்காகச் சேர்க்கப்பட்டார். யாழ்ப்பாணக் கல்லூரியில் இருந்தே பேராதனைப் பல்கலைக் கழகத்தின் சட்டபீடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை மேற்கொண்டிருந்த பொழுதே, பேராதனையில், பொருளியல் சிறப்புப் பட்டப் படிப்பை மேற்கொண்டிருந்த மாத்தறையைச் சேர்ந்த ‘மானெல்’ என்பவரை விரும்பியிருந்தார். இவர் முன்னாள்  நிதி அமைச்சராக  இருந்த கௌரவ. மங்கள சமரவீரவின் மருமகளாவார். அவரது குடும்பத்தினரதும் அனுமதி பெறாமலேயே ஆனந்தன், அவர் விரும்பியிருந்த ‘மானெலை’ பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.

 ஆனந்தன் சட்டப் படிப்பை முடித்தும் அதில் பெரிய அளவில் நாட்டம் கொள்ளாது, உலக சாதனைகளை நிலைநிறுத்துவதிலேயே கூடிய கவனம் செலுத்தி வந்தார்.பாக்கு நீரிணையை இருவழியாகவும் நீந்திக் கடக்க வேண்டுமென்ற அவரது இலட்சியம் நாளுக்கு நாள் அவருக்குள்ளாகவே வளர்ந்து வந்தது. அன்று அவரது உள்ளத்தில் கருக்கொண்ட அந்த இலட்சியம், பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து 12 வருடங்களின் பின்,ஆனந்தனின் 30 வது வயதில் உருப்பெறத் தொடங்கியது.

 1976 ஆம் ஆண்டு தலைமன்னாரின் ஆர்ப்பரிக்கும் கடற்கரையோரம் ஆயிரக் கணக்கான மக்கள் குழுமி நின்று வாழ்த்துக்களைத் தெரிவிக்க,பல நூறு படகுகள் பக்கத்துணையாகச் செல்ல தலைமன்னர் கடலில் இருந்து  ஆனந்தனின் இண்டாவது சாதனைப் பயணம் ஆரம்பமானது. அன்று காலை 8.00 மணிக்கு நீந்தத் தொடங்கி மறுநாள் தனுஸ்கோடியை 52 மணித்தியாலங்களில் அடைந்து, அங்கிருந்து தலை மன்னாரை நீந்திக் கடந்து தனது மற்றைய உலக சாதனையையும் நிலை நாட்டினார்.

உலக சாதனைகளைப் பதிவு செய்யும் கின்னஸ் புத்தகத்தில் தனது முதலாவது உலகசாதனையைப் பதிவு செய்து கொண்ட ஆனந்தனுக்கு மேலும், மேலும் உலக சாதனைகளை நிலையாட்டி கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரைப் பல தடவைகள் பதிவு செய்து கௌ்ளவேண்டும் என்ற அவாவும்,ஆவலும் மேலோங்கியது.

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த பின், அதனைத் தொடர்ந்து ஏழு உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் உலகசாதனைப் புத்தகத்தில் தனது பெயரை எட்டுத் தடவைகள் பதித்துக் கொண்ட ஒரே ஒரு தமிழன் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார். ஆனந்தனின் சாதனைகளைக்; கௌரவிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் “பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த குமார் ஆனந்தன்” என்ற குறிப்புடன் இவரது உருவம் பதிக்கப்பட்ட  தபால் முத்திரையை வெளியிட்டிருந்தது.

  • 1971 இல், தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடிக்கு நீந்திச் சென்று மீண்டும் அங்கிருந்து தலைமன்னாருக்கு நீந்தி வந்து 51 மணித்தியாலங்களில் இருவழி நீச்சல் பயணத்தை நிறைவு செய்தமை முதலாவது உலக சாதனையாகப் பதிவு செய்யப்பட்டது.
  • 1978 டிசெம்பர் மாதத்தில் தொடர்ச்சியாக 128 மணித்தியாலங்கள் வரை ருவிஸ்ற் நடனம் (Twist Dance)) ஆடிச் சாதனை புரிந்தார்.
  • 1979 ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பில் உள்ள விகாரமாதேவி பூங்காவைச் சுற்றி நிற்காது தொடர்ந்து துவிச்சக்கர வண்டியில் 1487 மைல்கள் (2227 KM) வரை 187 மணித்தியாலங்ளில் (Non-stop cycling) ஓடி முடித்தார்.
  • கொழும்பில் 1979 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் விகாரமாதேவி பூங்காவில் உயரமாக அமைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட மேடையில் பந்து ஒன்றுக்குக் கைகளால் அடித்து அது மேலே எழும்ப மீண்டும் மீண்டும் அடித்து (Ball Punching) ) தொடர்ச்சியாக 136 மணித்தியாலங்களாகக் களைக்காது உலக சாதனையை நிலை நாட்டினார்.
  • 1980 ஆம் ஆண்டில் இரண்டு நிமிடங்களில் 165 தடவைகள் இருந்து எழும்பியும் ((Sit ups) சாதனை படைத்தார்.
  • 70 இறாத்தல் நிறையுள்ள இரும்பை 2000 தடவைகள் கீழிருந்து மேலே தூக்கிய மற்றொருசாதனை.
  • 01.01 அன்று 1000கிராம் நிறையுள்ள பிலியட் தடியை 2520 தடவைகள் 2 மணித்தியாலமும் 29 நிமிடங்களுமாக உயர்த்துகின்ற மயிர்க் கூச்செறியும் மற்றொரு சாதனையை யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தினார். இதில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகப் பிரமுகர்கள் நடுவர்களாகக் கடமையாற்றினர்.
  • கொழும்பில் 1979 மே மாதத்தில்;; ஒற்றைக்காலில் 33 மணித்தி யாலங்கள் வரை இடைவிடாது நின்று,(Balancing on one foot) சாதனை படைத்தார். இதற்கு முன்னர் 2 நிமிட நேரத்திற்குள்,165 தடவைகள் இருந்து எழும்பியும் ஒரு சாதனையைப் படைத்தார்.
  • 1980 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் கொழும்பில் தான் high kicks என்ற உலக சாதனையை 9100 தடவைகள் நிகழ்த்தி உலக சதனையை நிலை நாட்டினார்.
  • 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ற் மாதத்தில் சென்னை அண்ணா நீச்சல் தடாகத்தில் தொடர்ந்து 80 மணித்தியாலங்கள் வரை ‘தவளையைப்’ போல் மிதந்து (Water-Treading) தமிழகத்திலும் கூடத் தனது உலக சாதனயை நிலைநாட்டினார்.

இவ்வாறு பல சாதனைகளை நிலைநாட்டிக் கொண்டே வந்த ஆனந்தனின்,  ஆங்கிலக் கால்வாயை நீந்திக்  கடக்க வேண்டுமென்ற அந்த இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கான பயிற்சிகளை இங்கிலாந்திலே ஆரம்பித்தார். அந்தச் சாதனையை நிறைவேற்றவிடாது தடுப்பதற்கான பல்வேறு சதிமுயற்சிகள் கூட இங்கிலாந்து மண்ணில் நடந்தது. அவரைக் காரினால் மோதிக் கொலை செய்வதற்கு முயன்றவேளை அதிர்ஸ்டவசமாக பலத்த காயத்துடன் உயிர் தப்பியிருந்தார். அதனால் அவருடைய காலுக்குச் சத்திர சிகிச்சையின் மூலம்  உலோகத்தகடுகள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த நிலையிலும்கூடத் தனது முயற்சியைக் கைவிடாத ஆனந்தன் நாள் குறித்து ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கும் முயற்சியை மேற்கொண்டார்.

ஆனந்தன் சிறுபிள்ளையிலேயே இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், பல சாகசச் செயல்களில் தன் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். பின்னர், இடம்பெற்ற  மோட்டார் சைக்கிள்; விபத்தின் விளைவால் இவரது மண்ணீரல் அகற்ற நேரிட்டது.  ஆயினும் அவர் மனம் தளரவில்லை. இவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார். குறுகிய பயிற்சியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்க முற்பட்டார். முன்வைத்த காலைப் பின்வைக்க முடியாது என்ற வைராக்கி யத்துடன்,அங்கே நின்ற ஒவ்வொருவரினதும் கண்ணீரின் நடுவே, 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ற் மாதம் 20 ஆம் திகதி ஆங்கிலக் கால்வாயில் தனது நீச்சல் பயணத்தை அரம்பிப்பதற்கான முயற்சியை மேற்கொண்ட போது ஆனந்தனின் பயணத்தை இனிமேல் எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்ற நிலையில் தமது துயரங்களைத் தமக்குள்ளேயே அடக்கிக் கொண்ட அவரது உறவுகள் மற்றும் நண்பர்கள் பலர் சூழநின்று விடை கொடுத்து அனுப்பிய போது அது தான் ஆனந்தனின் இறுதிப் பயணம் என்பதை அப்போது யாரும் உணரவில்லை….. ;. அந்தக் குளிர் நிறைந்த ஆங்கிலக் கால்வாயைத் தொட்டு வணங்கிய ஆனந்தன், “குளிர்ந்த கடலே கவலை தருகிறது. அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போத வில்லை” என்று தெரிவித்தார். இதுதான் அவர் கூறிய கடைசி வார்த்தை.

சிறிது  தூரம் வரைக்கும் அந்தக் குளிர் நிறைந்த ஆங்கிலக் கால்வாயை  நீந்திக் கொண்டிருந்த பொழுது அவரது கால்கள் விறைத்துப் போன நிலையில், உலோகத் தகடுகள் பொருத்தப்படடிருந்த கால்களால் அவரால் முன்னோக்கி நகர முடியவில்லை…. ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்தபோது குளிரால் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ற் மாதம் 6 ஆம் திகதி அன்று, மரணத்தையும் தழுவினார்.

வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள சர்வதேச தரத்திலான ”குமார் ஆனந்தன்  நீச்சல் தடாகம்” ஆழிக்குமரன் ஆனந்தனின் பெருமையை மேலும் உலகறியச் செய்யும்.

மேலும் தகவல்களை அறிவதற்கு  ஈ.கே.ராஜகோபால் அவர்களால் எழுதப்பட்ட “ஆழிக்குமரன் ஆனந்தன்” என்ற நூலும், கரவெட்டி பிரதேச சபையினால் வெளியிடப்பட்ட “திருவுடையாள்” சிறப்பு மலரில், வல்வை.ந.அனந்தராஜ் அவர்களால் எழுதப்பட்ட “சாதனை வீரன் ஆழிக்குமரன் ஆனந்தன்” என்ற கட்டுரை,  முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர்  கல்வி அமைச்சர் கௌரவ.த.குருகுலராஜா அவர்கள் கிளிநொச்சியில் கல்விப் பணிப்பாளராக வலயக் கல்வித் திணைககளத்தில் இருந்தபோது வெளிவந்த “அறிவுக்கதிர்” என்ற சஞ்சிகையின் ஆனந்தன் சிறப்பு மலர் என்பன இவரைப்பற்றி அறிவதற்கான இலக்கியங்களாகக் காணப்படுகின்றன.

நன்றி , மூலம்  –  வல்வை.ந.அனந்தராஜ்

Share.

1 Comment

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!