கி.பி 1260ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணஇராசதானியை ஆண்ட சிங்கை ஆரியச்சக்கரவர்த்திகள் வம்சத்தினால் முதல்முதல் கட்டப்பட்டு வணங்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வந்துள்ளதாக சரித்திரங்கள் கூறுகின்றன.இக்கோயிலின் வரலாற்றுப்படி சிங்கையாரியச்சக்கரவர்த்தி மதுரையில் உள்ளது போல் சொக்கநாதர் கோவில் ஒன்றை அமைக்க விரும்பினார். வேதங்களுக்கும் எட்டாத ஸ்ரீ கைலாசநாதப்பெருமாள் அரசனின் கனவில் காட்சியளித்ததற்கமைவாக கைலாசநாதப் பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் திருக்கோயில் அமைத்து யாகசாலை, உக்கிரணசாலை,அன்னதானமடம், திருமஞ்சனக்குளம், நந்தவனங்கள் ஒன்றுசேர கோயில் அமைத்தான். இக்கோயிலை மூன்றாவது கைலை என வரலாறுகூறும். பிற்காலத்தில் வந்த அன்னியரான போர்த்துக்கீசர் ஒல்லாந்தரால் கோயில் இடிக்கப்பட்டது. பின்னர் வந்த ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சமய விழிப்புணர்வு ஏற்பட்டு 1890ஆம் ஆண்டளவில் ஆறுமுகநாவலரினதும் சைவமக்களினதும் பெருமுயற்சியால் மீண்டும்இவ்வாலயம் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகின. 1916 ஆம் ஆண்டளவில் கும்பாபிகேம் நடைபெற்றது. மூலவர்களாக கைலாசபிள்ளையார், கைலாசநாதர், கைலைநாயகி ஆகியோர்உள்ளனர். சித்திரை மாதத்து பௌர்ணமியை இறுதிநாளாகக் கொண்டு முதல் 10 நாட்கள் பிள்ளையாருக்கு மகோற்சவம் நடைபெறுகிறது.ஆனி உத்தரத்தை அந்தமாக வைத்து முதல்பத்து நாட்கள் கைலாசநாதன் சிவனுக்கு மகோற்சவம் நடைபெறுகிறது. பரம்பரை பரம்பரையாக சைவக் குருக்களே இவ்வாலயத்தின் அறங்காவலர் களாகப் பணியாற்றி வருகின்றனர்.