மயிலங்கூடல் – இளவாலை வடக்கில் 1936.01.13 ஆம் நாள் பிறந்தவர். வலிகாமம் வடக்கின் முதுபெரும் அறிஞரும் கவிஞரும் ஆவார். இவர் பல கவியரங்குகளில் சிம்மக்குரலால் கவிபாடியதுமட்டுமல்லாமல் தலைமைதாங்கி கவியரங்குகளையும் நடத்தியவர். பண்டிதமணி கணபதிப்பிள்ளை, இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் ஆகியோரிடம் பயின்றது மட்டுமல்லாமல் தன் இலக்கியக் குருவாகவும் நெஞ்சில் நிலை நிறுத்தியவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்ற இவரின் இலக்கியத் திறனை நன்கு புரிந்துகொண்ட பத்திரிகைகள் தமது பணியில் அமர்த்திக் கொண்டன. புலவரவர்கள் காதலும் கருணையும், இருவேறு உலகம், இரண்டுவரம் வேண்டும், இன்னும் இருதிங்கள், பசிப்பிணி மருத்துவன், மானங்காத்த மறக்குடி வேந்தன் என்னும் கவிதை நூல்களையும், தமிழ்ச்செல்வம் என்னும் இலக்கியக் கட்டுரை நூலையும் வெளியிட்ட பெருமைக்குரி யவராவார். சாதாரண துவிச்சக்கரவண்டியில் உலாவி பிறரை வருத்தாது வாழ்க்கை நடத்திய பண்பாளன். கல்வி என்பது பெரிய அறிவு மூட்டையைச் சுமப்பது அல்ல. பண்போடு வாழ்வது தான் கல்வி என்பதன் இலக்கணமாக வாழ்ந்துவந்த அறிஞர். புலவரவர்களை கவிஞராகவே பெரிதும் பார்த்திருந்தவர்களுக்கு அவரால் வெளியிடப்பெற்ற தமிழ்ச்செல்வம் என்ற நூலின் மூலம் அவர் ஒரு மிகச்சிறந்த கட்டுரையாளர், சிந்தனாவாதி என்பதையும் வெளிக்காட்டுவதாக அமைகின்றது. நாவலர்பெருமானின் தமிழ்நாட்டின் சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலையில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றகாலத்தில் தமிழ் நாட்டின் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுடன் நெருங்கிய நட்புப்பெற்றிருந்தவர். உரையாசியரும், ஈழமண்டலச்சதகம் என்னும் இனிய நூலைத் தந்தவருமான மட்டுவில் ம.க.வேற்பிள்ளையவர்களின் பேரனும், ஈழத்து இலக்கியப்பரப்பில் இன்றும் பரீட்சை எடாப்பண்டிதர் என்றும் நினைவிற் கொள்ளப்படுகின்ற குருகவி மகாலிங்கசிவம் அவர்களின் புதல்வனுமாவார். ஈழத்தின் வளமானதொரு இலக்கியப் பாரம்பரியத்தின் வழித்தோன்றலான புலவரவர்கள் வித்துவ சிரோன்மணி பொன்னம்பலபிள்ளையவர்களால் உரையாசிரியர் என்ற விருதும், சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களால் இலக்கிய மேதை என்ற விருதும், வலிகாமம் வடக்கு கலாசாரப் பேரவையினரால் கலைச்சுடர் என்ற விருதும், வடக்கு மாகாண ஆளுநர் விருதும், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாபூ~ணம் விருதும் வழங்கப்பெற்றவர்.
