1939-04-01 ஆம் நாள் அளவெட்டி கும்பழாவளையில் பிறந்தவர்.ஆரம்பக்கல்வியை அளவெட்டி சதானந்தா வித்தியாசாலையிலும் பின் அருணோதயக் கல்லூரியிலும் பயின்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் சேர்ந்து லண்டன் ஏ.எல் படித்து சட்டக் கல்லூரியில் இணைந்து 41 வருடங்கள் சட்டத்தரணியாகப் பணியாற்றியதோடு 12வருடங்கள் நீதவானாகவும் மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சிறந்த பேச்சாளனாக, சட்டத்தரணியாக, நீதிபதியாக, கவிஞராக – விகடகவியாக ,ஆன்மீகவாதியாக, அரசியல் ஞானியாக எல்லாவற்றிலும் செயற்பட்ட ஒரு பன்முகச் செயற்பாட்டாளனாவார். நீதித்துறையில் தொழில் பார்த்தாலும் கலை இலக்கியத்துறையில் தன்னை ஆழ அகன்று கால்பதித்து நின்றார். பட்டிமண்ங்களானாலும் சரி, கவியரங்குகளானாலும் சரி இவரது கணீரென்ற குரலில் அரங்கமே அமைதியாகக் காணப்படும். விகடகவி என அழைக்கப் பட்ட இவர் யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகளில் சமூக நீதிகளையும் நியாயங்களையும் ஒழுக்கப் பிறழ்வுகளையும் தனக்கேயுரித்தான பாணியில் நாள்தோறும் வரைந்து நீதிமன்றத்துக்கு அப்பால் மக்களையும் சமூகத்தினையும் நல்வழிப்படுத்தும் தனது முயற்சியினை மேற்கொண்டு வந்தார். உதயன் பத்திரிகை இவருக்கான களத்தினை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. உதயன் பத்திரிகையில் விகடகவியின் கவிதைகள் என்ற தலைப்பில் நாள்தோறும் வெளிவருவதுடன், இவ்வாறு வெளியாகிய கவிதைகளைத் தொகுத்து விகடகவியின் கவிதைகள் என்ற கவிதைத் தொகுப்பினை 2012 ஆம் ஆண்டு வெளியிட்டார். உண்டி, களவு, நல்லைத்திருப்பள்ளி எழுச்சி, நவீன திருவெம்பாவை, நாட்டுநடப்பு சொல்வதிலும் கவனம் வேண்டும், இப்படியும் ஓர் கண்ணீர் அஞ்சலி, மண்ணில் போரும் ஓய்வும், கண்ணா கண்ணையேன் மூடிவிட்டாய், ஏன் இந்த விவாக இரத்து, அக்கரை நாகரிகம், நடுத்தெருச் சீதனமோ, கனடா மாப்பிள்ளை, எயிட்ஸ் யமன், தந்தை செல்வா, ஆண்களையும் வாழவிடுங்கள், போதை, கசிப்பு மான்மியம், நவீன ஆத்திசூடி, ஒரு மரண அறிவித்தல் என்பன போன்ற இவரது பாடல்கள் என்றும் நெஞ்சை விட்டகலாதவை. 2014-11-09 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.