1926-02-15 ஆம் நாள் அராலி தெற்கு என்னுமிடத்தில் பிறந்தவர்.தனது ஆரம்பக் கல்வியை அராலி சரஸ்வதி வித்தியாசாலையிலும், அராலி இந்து ஆங்கிலப் பாடசாலையிலும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்று பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் சிறப்புக் கலைமாணிப் பட்டமும் முதுகலைமாணிப்பட்டமும் பெற்று கலாநிதிப்பட்டத்தினை லண்டன் ஒக்ஸ் போர்ட் பல்கலைக்கழகத்தில் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம், இலத்தீன், பாளி, சமஸ் கிருதம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஜேர்மன் ஆகியமொழிகளில் பயிற்சியுடைய இவர் உலக நாடுகளில் நடைபெற்ற ஆய்வுமுயற்சிகளில் மொழியியல்,தமிழாராய்ச்சி சார்பாக ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தவர். கொழும்பு, பேராதனைப் பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறைத் தலைவராய் பல ஆண்டுகள் பணியாற்றியவர்.கட்டுரைகள், நூல்கள் வெளியிடுவதோடு பழைய நூல்களையும் பதிப்பித்தார். பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் செல்வநாயகம், பேராசிரியர் வித்தியானந்தன் ஆகியோரின் மாணவரான இவர் மொழித்துறையில் சிறப்பாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவரது வாழ்க்கைப்பணி என்பது சுமேரியமொழி ஆராய்ச்சியாகும். இதனூடாக சுமேரிய மொழியானது ஆதித்தமிழ் அல்லது திராவிடம் என நிரூபித்து தமிழர்களின் தொல்பண்பாட்டு வரலாற்றுச் சிறப்பை உலகம் அறியவேண்டுமென்ற பெருநோக்கோடு செயற்பட்டவர். குமரிக்கண்டம் பற்றிய இவரது இன்னுமொரு ஆராய்ச்சியும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஈழத்துப் பூதந்தேவனார் காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை வாழ்ந்த தமிழ்ப் புலவர்களின் நூல்களும் பாடல்களும் ஏடுகளில் இருந்து அழிந்துவிடாமல் பாதுகாக்கும் நோக்கில் அவற்றைத்தேடி காலவகை யாகத்தொகுத்து தகுந்த விளக்கவுரைகளுடன் ஈழத்துக் கவிதைக் களஞ்சியம் என்ற பெயரில் செவ்விய வகையில் இலங்கை சாகித்திய மண்டல வெளியீடாக வெளிக்கொணர்ந்தமை இவரது மிகப்பெரிய தமிழ்ப் பணியாகும். 1988-07-01 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.