அல்லாரை தெற்கு, சாவகச்சேரி என்னும் இடத்தில் 1946-01-14 ஆம் நாள் பிறந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1971 இல் இளங்கலைமாணிப் பட்டத்தினையும்,1974 இல் முதுமாணிப் பட்டத்தினையும், 1980 இல் கலாநிதிப் பட்டத்தினையும் பெற்று தமிழ் இலக்கியத்துறையில் ஆற்றிய பணிகள் கணக்கிடமுடியாதவையாகவுள்ளன. இலங்கை, இந்திய பல்கலைக்கழகங்களில் நாற்பது வருடங்கள் விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி தமக்கென நீண்ட மாணவர் பரம்பரையொன்றினை உருவாக்கியுள்ளார். இவர் இலங்கையில் பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், தென் இந்தியாவின் கேரள மற்றும் சென்னைப் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரநாத் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் எம்.ஏ, எம்பில்,பி. எச்.டி பயிலும் மாணவர்களுக்கு பரீட்சகராகவும், ஆய்வுக்கட்டுரை மேற்பார்வையாளராகவும் பணியாற்றினார். இவருடைய தமிழ்ப் பணியின் மூலமாக பதினைந்திற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களும், ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 1948 இல் பாரதியார் சிந்தனைகள். 1992 இல் சுவாமி விபுலாநந்தரின் சமயச் சிந்தனைகள், 1994 இல் காலக்கண்ணாடி யும், இலங்கையில் மலையகத் தமிழ் இலக்கியமும், 1997 இல் இலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள், 1998 இல் இளந்தலைமுறையினரும் கல்வியும், தமிழகத்தில் இந்துமதமும் சமண மதமும், 1999 இல் இலங்கையில் மலையகத் தமிழ் நாவல்கள் ஓர் அறிமுகம். 2000 இல் தமிழ் வரலாற்று நாவலின் தோற்றமும் வளர்ச்சியும், 2010 இல் சாதனையாளன் சாரல் நாடன், 2012 இல் இலக்கியக் கட்டுரைகள், ஈழத்துத் தமிழ்க் கவிதை வளர்ச்சி, 20 ஆம் நூற்றாண்டத் தமிழ் இலக்கியம், ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் (1925-1965) ஆகிய நூல்களை வெளியிட்டார். இவருடைய இலக்கியப் பணிகளுக்காக 1995,1997,1999 ஆகிய ஆண்டுகளில் கலைக் கழகம், இந்து கலாசார அமைச்சு தேசிய சாகித்திய விருதினையும், 1980 இல் பேராதனைப் பல்கலைக்கழகம் பொன்னம்பல முதலியார் ஞாபகார்த்த விருதினையும், 1994,2000 ஆகிய ஆண்டுகளில் மத்திய மாகாண கல்வி கலாசார அமைச்சு மாகாண சாகித்திய விருதினையும். 2011 இல் பேராதனைப் பல்கலைக்கழகம் அருணம் என்ற விருதினையும், 2012 இல் கலாசார அமைச்சின் சாஹித்தியரத்னா என்ற விருதினையும் வழங்கிக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.2015-04-28 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.