கவிஞராக,சமூகப்பணியாளனாக ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவராக அறியப்பட்ட இவர் யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 1953-09-17 ஆம் நாள் பிறந்தவர். கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ் அரவிந்தன் என அழைக்கப்பட்ட இவர் பிரான்சு மொந்தினியை வசிப்பிடமாகக் கொண்டார். 1972ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல் சாசனத்திற்கெதிரான துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டமைக்காக கைது செய்யப்பட்ட மூவரில் இவரும் ஒருவர். புலம்பெயர் கவிஞராக அறியப்பட்ட கி.பி.அரவிந்தன் ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் முக்கியமானதொரு இடத்தை வகிக்கின்றார். இவரது கவிதைகள் புலம்பெயர் வாழ்வையும் அதன் முகங்களையும் ஈழப்போராட்டத்தின் நியாயங்களையும் எடுத்துரைப்பனவாக அமைகின்றன. தமிழ், புதினப்பலகை என்ற இணையத்தளங்களை நடத்திய தோடு பரதேசிகளின் பாடல் என்ற பெயரற்ற புலம்பெயர் கவிதைகள் வெளிவருவதற்குக் காரணமாகவும் இருந்தவர். முதன்முதலில் சயனைட் அருந்தி உயிர்த்தியாகம் செய்த ஈழப்போராட்ட முன்னோடியான பொன் சிவகுமாரனுடன் செயற்பட்டவர். பி.பி.சி தமிழோசையின் பாரிஸ்நகர செய்தியாளராகப் பணியாற்றிய தோடு ஐரோப்பிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்தவர். பிரெஞ்சு மொழிபெயர்ப்புக் கவிதைத்தொகுப்பில் இவர் பல கவிதைத் தொகுதிகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். இவரது கவிதைகளின் பிரெஞ்சு மொழித் தொகுப்பு(“Le messager de I’hiver”) “ஓர் உறைபனிக் காலக் கட்டியக்காரன் “ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இனி ஒரு வைகறை, முகம்கொள், கனவின் மீதி ஆகிய கவிதைத் தொகுப்புக்கள் அவரது தமிழபிமானத்தைப் பறைசாற்றும் படைப்புக்களாகும். 2015-03-08 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.