பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு முன்னால் அமைந்துள்ளதால் கோட்டுவாசல் அம்மன் எனப்படும். இவ்வாலயத்தினை சண்டிகா பரமேஸ்வரி கோவில் சாமுண்டீஸ்வரி ஆலயம் எனவும் அழைப்பர். இக் கோயிலின் தலவிருட்சம் கொன்றை மரம். இதனால் பக்தர்கள் கொன்றை மரத்தாள் எனவும் அழைப்பர்.அம்மன் நோயால் பீடிக்கப்பட்டவர்கள் இக்கொன்றை மரத்தாளிற்கு குளிர்த்தியோ, அபிN~கமோ செய்வதனூடாக அம்மனை குளிர்மைப்படுத்தி நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு குணமடைவதாக பக்தர்கள் நம்புகின்றார்கள். இக்கொன்றை மரத்தின் அருகில் இக்கொன்றை மரத்தினை வழிபட்டு அருள்பெற்ற சித்தரது சமாதி உள்ள தாகவும் கூறப்படுகின்றது. 19 ஆம் நூற்றாண்டில் 1800 களில் உயிர் பலியிட்டு ஆட்டுக்கடா பலியிட்டு தமது வேண்டுதல்களை நிறைவேற்றினர். ஆயினும் 1950க்குப் பின் சாமுண்டீஸ்வரி என்ற பெயருடன் உக்கிரம்கூடிய தெய்வம் இயந்திரத் தகட்டில் அதன் அகோரம் குறைத்து சண்டிகா பரமேஸ்வரியாக வழிபடப்படுகின்றாள். கோட்டுவாசலில் அமைந்துள்ளதால் முன்னைய காலத்தில் குற்றம் செய்யோம் எனசத்தியம் செய்யப்பட்ட ஆலயமாக விளங்கியதாகவும் கூறுகின்றனர். சித்திரை பூரணையை தீர்த்தமாகக் கொண்ட பத்து நாள் உற்சவம் இடம் பெறும். 1983க்கு முன் கொட்டடிப்பிள்ளையார்தெற்பக்கேணியில் தெற்ப உற்சவம் இடம் பெற்றது. தற்போது கொட்டடிக் கடற்கரையில் இவ் உற்சவம் இடம்பெற்று வருகின்றது. இங்குள்ள 3ஆம் வீதியில் தேர்முட்டியின்அருகில் காத்தவராஜன் அமைந்துள்ளது.
