இவ் ஆலயம் சுமார் 200 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. கும்பி மணல்பரப்பில் விருட்சமான ஆலமரத்தின் அருகில் சிறு கொட்டிலாக மூலஸ்தானத்தில் அம்மன் அமர்ந்து இருந்து இவ்வூர் மக்களுக்கு அருள் பாலித்து வந்தார். இவ் ஆலயத்தினை பொது மக்களின் ஆதரவுடன் கந்தர் என்பவர் ஆலய தர்மகர்த்தாவாகவும் பரிபாலித்து வந்தார். பின்னர் முத்தர் கந்தையாவாலும் அவர் இறந்த பின்பு அவரின் மகன் னுச.அருளானந்தம் அவர்களாலும் பரிபாலிக்கப்பட்டது. பின்பு 1984 .ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் கூடி நிர்வாகம் தெரிந்து நிர்வகிக்கப்பட்டது. வருடாவருடம் வரும் சித்திரா பௌர்ணமி தினம் வெகுசிறப்பாக முதல் 10 நாட்களும் விஷேட பூசைகள் நடைபெற்று கும்பி மணல் பரப்பில் பெண்கள் வயது வேறுபாடின்றி அம்மனின் பாடல்களைப்பாடி கும்மி அடிப்பார்கள். பின்பு இளைஞர்களால் உடுக்கு அடித்து பஜனைப் பாடல்கள் பாடப்படும். இதுபோல் நவராத்திரி, அம்மனின் ஆடிப்பூர நிகழ்வும் சிறப்பாக நடைபெறும்.இங்கு சித்திரா பௌர்ணமி தினத்தன்று நேர்த்திக்காக கரகம், காவடி, துலாக்காவடி எடுத்து இவ்வாலயத்தையும் இவ் ஊரில் உள்ள ஆலயங்களினையும் சுற்றி வருவர். பிற்பகல் இளைஞர்கள் பழனிக்கரகம் எடுத்து ஆடி வருவார்கள். நாள் பானை என்று 10 நாட்களுக்கு முன்னதாகவே வாங்கி விஷேட பூசை செய்து வைக்கப்படும். இறுதிநாள் அப்பானையில் பொங்கல் செய்து படைப்பார்கள். ஊர்மக்கள் பொங்கி சித்திரைக்கஞ்சி என தயிர், மோர் போட்டு அம்மனுக்குப் படைப்பார்கள். அன்றைய தினம் ஊர்மக்கள் அனைவரும் இக்கோயிலைச் சுற்றியே இருப்பர். இரவு அம்மனுக்குப் பிடித்த காத்தவராஜன் நாடகம் மேடையேற்றப்படும்