Sunday, February 9

தம்பிராசா திருநாவுக்கரசு (நாவேந்தன்)

0

 

1932.12.14 ஆம் நாள் புங்குடுதீவு என்ற இடத்தில் பிறந்த இவர் இல.70ஃ1,வைமன் வீதி, நல்லூரில் வாழ்ந்தவர். பயிற்றப்பட்ட ஆசிரியராய் பணிபுரிந்த போதிலும் தனது பதினைந்தாவது வயதில் இந்துசாதனம் பத்திரிகையின் மூலமாக எழுத்துலகில் பிரவேசித்தவர். நாவேந்தன் என்ற புனைபெயரில் இலக்கிய வட்டத்தினுள் மிகவும் ஆழமாய் அறிமுகமானவர். தினகரன், வீரகேசரி, ஈழகேசரி, சுதந்திரன் ஆகிய பத்திரிகைகள் இவரது சிறுகதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தன. சிறுகதை, நாவல், திறனாய்வு, கவிதை, கட்டுரை, இதழியல், மேடைப் பேச்சு போன்ற பல துறைகளில் தடம்பதித்ததோடு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மேடைகளில் சிறந்த பேச்சாளராக வும் விளங்கியவர். தியாகம், அகலிகை, வாழத்தெரிந்தவள், தண்டனை, பிச்சைக்காரி, சகோதரி, போட்டி ஒழிந்தது, கள்ளத்தோணி, அவள்சாட்சி, எக்ஸ்ரா ரீச்சர், வெள்ளிக்கிழமை, அழியாதது, பட்டமரம், கொலைகாரி, நம்பிக்கை, துறவியின் காதல், உழைப்பு, சலனம், விழிப்பு, வாழ்வு, ஒருசொட்டுக்கண்ணீர், ஆசை மயக்கம், பெண், காதல் வென்றது, தவறு, சுடலையாண்டி முதலான சிறுகதைகளை எழுதி வாசகர் களிடையே நன்மதிப்புப் பெற்றவர். இச்சிறுகதைகளில் சிலவற்றினைத் தொகுத்து வாழ்வு, தெய்வமகன் என்கின்ற பெயர்களில் சிறுகதைத் தொகுப்பு நூல்களாக வெளியிட்டுள்ளார். யாழ். இலக்கிய வட்டம் இவருடைய ஞாபகார்த்தமாக வருடாவருடம் சிறந்த சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு பரிசளித்து வருவது குறிப்பிடத்தக்கது. இலக்கிய உலகில் தனக்கென்றொரு இடத்தினைப் பிடித்த நாவேந்தன் அவர்கள் 2000.07.10 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

மேலதிக தகவல்களை நிரப்புங்கள்

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!