1946-11-08 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அரியாலை என்ற இடத்தில் பிறந்து இல.07, பூமகள் வீதி, அரியாலை மேற்கு என்ற முகவரியில் வாழ்ந்து வந்தவர். கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகியவற்றில் ஈடுபாடுடைய இவர் மட்டக்களப்பைச் சேர்ந்த இரா. நாகலிங்கம் (அன்புமணி) அவர்களிடம் இத்துறை சார்பான அறிவினையும், ஆற்றலையும் கற்றுக்கொண்டதாக பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் தனது ஆக்கங்களை வெளிப்படுத்தி வந்துள்ளார். அரியாலை புவனேஸ்வரி அம்பாள் பாமாலை, கோண்டாவில் வல்லிபுரநாதர் திருப்பொற்சுண்ணம், அரியாலை புறக்கோட்டை ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருவூஞ்சல் ஆகிய தெய்வீக பாமாலைகளை இவர் எழுதியுள்ளார். 1992 ஆம் ஆண்டு “பாவாணர்” என்ற சிறப்புப் பட்டம் பெற்ற இக்கவிஞர் நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவையின் 2008 ஆம் ஆண்டிற்கான நிர்வாகத்தின் செயலாளராகப் பணியாற்றியவர். இப்பேரவையினால் கலைஞானச்சுடர் விருது வழங்கியும் கௌரவிக்கப்பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2011-04-09 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.