அப்துல் அசீஸ் யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணையில் சுலைமான் முகைதீன் முகம்மது அபூபக்கர் என்பவருக்கும், மீராமுகைதீன் நாச்சியா என்பவருக்கும் 1911-10-04 ஆம் நாள் பிறந்தவர். தந்தை யாழ்ப்பாண நகரசபை உறுப்பினராக இருந்தவர். தனது ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணம் அல்லாபிச்சை பள்ளி, யாழ். வைத்தீஸ்வர வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் பெற்றார். 1929 இல் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் கற்று இளங்கலை சிறப்புப்பட்டம் பெற்றார். 1933 இல் கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பைத் தொடருவதற்காக இங்கிலாந்து சென்றார். உம்மு குல்தூம் என்பவரைத் திருமணம் புரிந்தார். அசீஸ் 1940 ஆம் ஆண்டில் இலங்கை நிருவாக சேவையில் சேர்ந்தார். கல்முனை, கண்டி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகப் பணியாற்றினார். 1948 முதல் 1961 வரை கொழும்பு சாகிரா கல்லூரியில் அதிபராகப் பணியாற்றினார். 1950 மற்றும் 1960களில் செனட்சபை உறுப்பினராகவும், பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். 1950 ஆம் ஆண்டில் அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சங்கப் பேரவை (வை. எம். எம். ஏ) அமைப்பைத் தோற்றுவித்தார். இலங்கையில் இஸ்லாம், அரபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ், மொழிபெயர்ப்புக் கலை, மிஸ்ரின் வசியம். கிழக்காபிரிக்கக் காட்சிகள், ஆபிரிக்க அநுபவங்கள், தமிழ் யாத்திரை ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ள இவர் 1973.11.24 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.