1906.05.24 ஆம் நாள் இணுவிலில் காசிநாதர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இணுவிலில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்களால் தாபிக்கப்பட்ட அம்பிகைபாக சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியை ஆரம்பித்து வைத்தனர்.ஆறாம் வகுப்புடன் தனது கல்வியை நிறுத்திக்கொண்ட வடிவேல் சுவாமிகள் யோகர் சுவாமிகளது அருள்வாக்கின்படி வேதாந்த மடத்திற்குச் சென்று குருகுலக் கல்வி மூலம் தேவாரம், பண்ணிசை, புராணம், இதிகாசம், ஆன்மீகநெறி என்பவற்றினை விருப்புடன் கற்றார்.வேதாந்த மடத்தில் குருமூர்த்தியாக விளங்கிய மகாதேவ சுவாமிகளிடம் சரண்புகுந்து சீடரானார். இறைபணியில் பண்ணிசையுடன் கூடிய பிரசங்கம் செய்வார். இணுவில் கந்தப்பெருமான் மீது வேல்விருத்தம் இயற்றிப் பாடியுள்ளார். தவத்திரு யோகர் சுவாமிகளால் நிர்வாண தீட்சை பெற்ற வடிவேல் சுவாமிகள் குருநாதரின் கட்டளையை ஏற்று கிளிநொச்சி சென்று உருத்திரபுரம் சிவன் கோயிலை புனர்நிர்மாணம் செய்து மக்களுக்கு சிவசிந்தனையூட்டினார்.1952 ஆம் ஆண்டு ஜெயந்திநகரில் தமது குருமூர்த்தியான மகாதேவ சுவாமிகள் பெயரில் தவக்குடில் அமைத்து மகாதேவ ஆச்சிரமம் எனப்பெயரிட்டார்.ஆதரவற்ற சிறுவர்கள், முதியவர்கள், அநாதைகள் யாவரும் இவரது சிவப்பணியால் அரவணைக்கப்பட்டனர்.இப்பணிக்கு வித்திட்டவர் வடிவேல் சுவாமிகளாவார்.
இவரால் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட மகாதேவ ஆச்சிரமம் இன்று ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி நிற்பதனைக் காணலாம். 1990.06.26 ஆம் நாள் ஆயிலிய தினமன்று மகாசமாதியடைந்தார்.