வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சுவாமிகள் யாழ்ப்பாணம், திருநெல்வேலி சிவகுருநாத பீடம் என அழைக்கப்படும் வேதாந்த மடத்திலிருந்து 40 ஆண்டுகள் சிவத்தொண்டாற்றிய வர். ஞானதாகம் கொண்டமைந்த இராமலிங்க சுவாமிகள் 1924 ஆம் ஆண்டில் வேதாந்த மடத்தை அடைந்து மகாதேவ சுவாமிகளால் நடத்தப்பட்டு வந்த வேதாந்த வகுப்புகளில் இணைந்து கற்று வந்தார். 1942 ஆம் ஆண்டில் ஆவணி மாத மிருகசீரிட நட்சத்திரத்தில் நடைபெற்ற பெரியசுவாமிகளின் குருபூசை முடிவுற்ற பின்னர் மகாதேவ சுவாமிகளால் இவருக்கு உருத்திராட்சமாலை அணிவித்து குருபீடத்தின் பொறுப்பை ஒப்படைத்தார். மகாதேவ சுவாமிகளின் சமாதி நிலைக்குப் பின்னர் குருபீடத்தின் சகல பொறுப்புக்களையும் ஏற்று நடத்தி வந்தார். 26 வருடங்கள் வேதாந்த மடத்தின் ஒளிவிளக்காகத் திகழ்ந்த சுவாமிகள் 1968-06-14 ஆம் நாள் ஆனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் மகாசமாதியடைந்தார்.