1949-12-15 ஆம் நாள் யாழ்ப்பாணம் மாவை கொல்லங்கலட்டி என்ற இடத்தில் பிறந்தவர்.தனது ஆரம்பக்கல்வியை மாவை கொல்லங்கலட்டி சைவத்தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியிலும் கற்று காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் 1970 ஆம் ஆண்டு பாதுகாப்பு உத்தியோகத்தராக இணைந்து பின்னர் சில்லறை விற்பனைப் பகுதிப் பொறுப்பாளராகவும், காசாளர் சேமநல உத்தியோகத்தராகவும் பதவியுயர்வு பெற்று பணியாற்றினார்.1958 இல் பாடசாலையில் குருளைச் சாரணியத்தில் இணைந்த போஜன் அவர்கள் சாரணியத்திற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தவர். கனிஸ்ட, சிரேஸ்ட, திரிசாரணனாக வளர்ந்து காங்கேசன்துறை மாவட்ட சாரணர் ஆணையாளராகி ஏனைய மாவட்டங்களை விட அதிகளவிலான சாரணர்களையும், இத்துறை சார்ந்த பல உத்தியோகத்தர்களையும் உருவாக்கி பலம் கொண்ட மாவட்டத்தினை கட்டியமைத்தார். இவரால் உருவாக்கப்பட்டவர்களே இன்று சாரணியத்தினை வடக்கில் செயற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 1987-2006 வரை தேசிய பயிற்சிக் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றி 2006 இல் வடமாகாண சாரண ஆணையாளராகவும், 2011 இல் சாரணர் அபிவிருத்திக்கான உதவிப் பிரதம சாரண ஆணையாளராகவும் பணியாற்றியவர். 1972 இல் மகாதேசாதிபதி வில்லியம் கோபல்லாவ அவர்களால் பேடன்பவல் விருது வழங்கப் பெற்றவர். சாரணியத்தின் தொடர் சேவைக்கான பிரதம ஆணையாளரது விருதினையும் சேவைப் பதக்கத்தினையும் பெற்றதுடன், 1976 இல் குருளைச்சாரணர், சாரணர்களுக்கான தரு சின்னத்தினையும், 1975 இல் திரிசாரணர்களுக்கான கலைக்கூறு பயிற்சி மூன்றினையும், 1979 இல் உதவிப் பயிற்றுநர் தலைவர் பயிற்சியினையும் 1990 இல் பயிற்றுநர் தலைவர் பயிற்சியினை தாய்வானிலும் பெற்றுக் கொண்டவர். 1987-09-03 இல் இந்தியாவின் ஹைதராபாத்திலும், 1989 இல் பங்களாதேஸ் டாக்காவிலும், 1990-09-03 இல் இந்தியாவின் போபால் மாநிலத்திலும் நடைபெற்ற சர்வதேச ஐம்போரிகளில் இலங்கையின் அணிகளை தலைமை தாங்கி வழிநடத்திய பெருமைக் குரியவர். காங்கேசன்துறை மாவட்டச் சாரணர் கிளைச்சங்க உருவாக்கத்தின் ஆரம்ப கர்த்தாக் களில் ஒருவரான இவர் சாரணர்களால் அன்பாக பேடன்பவல் என அழைக்கப்பட்டார். சாரணியம் மட்டுமன்றி பரியோவான் முதலுதவிப்படையணியின் பிரதேச ஆணையாளராகவும் செயற்பட்டவர். கிராமத்தில் பல்வேறு சங்கங்களில் அங்கத்தவராகவும், தலைவராகவும் சேவையாற்றினார். இவரது இத்தகைய சேவைகளை மதித்து இலங்கையின் நீதி அமைச்சினால் நாடுமுழுவதிற்குமான சமாதான நீதிவானாக நியமித்துக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. தன் இள வயதிலிருந்து சாரணியத்தில் ஆழமான பற்றுடன் வாழ்ந்து 2011-12-16ஆம் நாள் சாரணனாகவே தன்வாழ்வை நீத்து நிலையுலகம் சென்றார்