அறிமுகம்
யாழ்ப்பாணத்துச் சுவாமி என பலராலும் அழைக்கப்பட்ட அருளம்பலம் சுாமிகள் “பாரதியின் ஞானகுரு“ எனப்போற்றப்பட்டவர். யாழ்ப்பாணம் வடமராட்சியின் வியாபாரிமூலை என்னும் இடத்தில் பிறந்த அருளம்பல சுவாமிகள் என அழைக்கப்படும் மௌனகுருசுவாமிகள் 1880 ஆம் ஆண்டு மே மாதம் 07ஆம் திகதி பிறந்தார். மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாசாலையில் கல்வி பயின்ற இவர் சதாவதானி கதிரவேற்பிள்ளை அவர்களின் மாணாக்கரும் ஆவார். 5ஆம் வகுப்பு வரை மட்டும் கற்றிருந்த இவர் பழம் தமிழ் இலக்கியங்களான இராமாயணம் மகாபாரதம், திருக்குறள் என்பவற்றுடன் பட்டினத்தார் பாடல்கள், அருணகிரிநாதர் பாடல்கள் என்பவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தார். 1910 ஆம் ஆண்டளவில் இந்தியா சென்று நாகை நீலவேணி ஆலயத்தில் நிஷ்டை நிலை கற்றார். 1910 முதல் 1914 வரை நான்கு ஆண்டுகள் உணவு மறுத்து கடுமையான நிஷ்டையில் ஆழ்ந்தார். நிஷ்டையில் இருந்த நேரத்தில் இவரது உண்மையான ஞானநிலையைப் புரியாத ஆலய நிர்வாகி போலிக் குற்றச்சாட்டுச் செய்த பொழுது பொலிஸார் இவரை ஒரு அறையில் அடைத்து வைத்தனர். சற்று நேரத்தில் பார்த்தபொழுது அறை பூட்டிய படியே இருக்க அவர் காணாமல் போயிருந்தார். தேடிய பொழுது கடற்கரையில் நி~;டையில் இருப்பதைக் கண்டனர். இதைக்கண்ட நீதிபதி அவரது ஆன்மீக மகிமையை உணர்ந்து எவரும் அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என ஆணையிட்டதாகத் தெரிகின்றது. இவ்வாறு சித்தவல்லமை பெற்ற யோகர் சுவாமிகள் வரப்போவதை எதிர்வுகூறல், மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல், ஒருநேரத்தில் பல இடங்களில் தன் உருவம் காட்டல் போன்ற பலவற்றைச் செய்யும் ஆற்றல் பெற்றிருந்தார் ஆனாலும் சித்து வேலைகளில் அதிக நாட்டம் கொண்டதில்லை. சித்தராகவும் கலைஞனாகவும் ஓவியனாகவும் தன்னை வெளிப்படுத்திய அருளம்பல சுவாமிகள் தன்னை கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் வெளிப்படுத்தத் தவறவில்லை. நீண்ட காலம் தமிழ் நாட்டிலுள்ள புதுவையில் வாழ்ந்jவர். இவர் புதுவையில் வாழ்ந்த காலம் மகாகவிபாரதியார் புதுவையில் மறைந்திருந்த காலத்திலே அருளம்பல சுவாமிகளைச் சந்தித்துள்ளார். இவரை தனது ஞானகுருவாக ஏற்றுள்ளார்.
அருளம்பலம் சுவாமிகளால் பதிப்பிக்கப்பட்ட நூல்கள்
1924 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் “அருளம்பலம் சந்தேக நிவர்த்தி” எனும் தமது நூலினை புதுவை ஜெகநாதம் அச்சுக்கூடத்தில் பதிப்பித்துள்ளார்.
1926 ஆம் ஆண்டு இவர் “கற்புநிலை” என்ற தமது நூலை புதவை கலாநிதி அச்சுக்கூடத்தில் பதிப்பித்துள்ளார்.
1927 ஆம் ஆண்டு இவர் “அருவாச தேவ ஆரம்”, “சீவதரிசி” எனும் இரு நூல்களையும் புதுவை கலாநிதி அச்சுக்கூடத்தில் பதிப்பித்துள்ளார்.
1928 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் நாகை நீலலோசனி அம்மன் பேரில் “தோத்திரம்”, “ஊஞ்சல்” எனும் இரு நூல்களையும் ஜனனோபகார அச்சுக்கூடம் – நாகபட்டணத்தில் பதிப்பித்துள்ளார்.
1929 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் “கற்புநிலைச் சுருக்கம்” எனும் நூலை ஜனனோபகார அச்சுக்கூடம் – நாகபட்டணத்தில் பதிப்பித்துள்ளார்.
1931ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் “பழை வேற்பாட்டுடன் படிக்கை” எனும் நூலினை ஜனனோபகார அச்சுக்கூடம் – நாகபட்டணத் தில் பதிப்பித்தார்.
1935 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துச் சுவாமிகளின் “ஆதிபுராணம்” எனும் நூல் காமினி அச்சுக்கூடம் – கண்டியில் பதிப்பிக்கப்பட்டது.
1940 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் “ஆதி நீதி” எனும் நூலை ஜனனோபகார அச்சுக்கூடம் – நாகபட்டணத்தில் பதிப்பித்தார்
யாழ்ப்பாணத்து சுவாமிகளின் அற்புதங்களும் சித்துக்களும்.
1.சுவாமிகள் பொலிகண்டி கடல் நீர்ப்பரப்பில் பல்வேறு இடங்களிலும் நின்று காட்சி கொடுத்தார்கள்.
2.நாகை நீலலோசனி அம்மன் ஆலய வாசலில் நிஷ்டையின் பின் 41 நாட்கள் வாயூறு தண்ணீரில் இருந்தார்கள்.
3.தீயிற் காய்ச்சிய இரும்பினை இவரது பாதத்திற் சுட்டபோது சுவாமிகள் மௌனமாக இருந்தார்கள். பொலிசார் சுவாமிகளை அறையில் விட்டுப் பூட்டிவைத்தனர். சிறிது நேரத்தில். அவர் அறையில் இல்லாமல் கடற்கரையோரத்தில் நிஷ்டையில் இருந்தார்கள்.
யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த சுவாமிகள் தமிழ்நாட்டின் புதுவை மாநகரத்தில் நீண்ட காலம் வாழ்ந்தவர். இங்கிருந்து அவர் நிறைந்த அருட்பணிகளை செய்தார் என்பதற்கு பல்வேறு சான்றுகளும் ஆதாரங்களும் காணப்படுகின்றன. அவர் செய் அற்புதங்களும், வெளியிட்ட நூல்களும் காணப்படுவதுடன் யாழ்ப்பாணத்து அறிஞர்கள் பலரும் இவற்றினை ஆதாரமாகக் கொண்டு அருளம்பலம் சுவாமிகளே யாழ்ப்பாணத்துச் சுவாமி எனவும் பாரதியாரின் ஞானகுரு எனவும் ஆதாரமாகச் சான்று பகர்ந்துள்ளனர்.
1929 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் நாகபட்டணத்திலிருந்து இலங்கைக்குத் திரும்பி வந்து வியாபாரிமூலையிலும், வதிரியிலும் தங்கினார்கள்.
1930 ஆம் அண்டு யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் மீண்டும் நாகபட்டணம் சென்றார்கள்.
வியாபாரிமூலை செல்வந்தரான வெ.க.சிவப்பிரகாசபிள்ளை அவர்கள் நாகபட்டணத்தில் காணி வாங்கி மடம் கட்டி யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் தங்க வசதி செய்து கொடுத்தார்.
இவற்றில் இருந்து 1914 ஆம் ஆண்டிலிருந்து 1927 ஆம் ஆண்டு வரையும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் புதுவையில் இருந்தார்கள் என்பது தெளிவு.
1943 : நாகபட்டணம் அக்கரைகுள ரோட்டில் ஸ்ரீலஸ்ரீ மௌன சுவாமிகள் மடாலயத்தில் சித்திரபானு வருஷம் தை மீ.3உ (16.01.43) இல் நடந்தேறிய குருபூசையன்று ஸ்ரீலஸ்ரீ அருளம்பல சுவாமிகள் பேரில் ஆனந்தக்களிப்பு பாடி அளிக்கப்பட்டது.
1961 : திரு.அ.ந.கந்தசாமி என்பார் ஸ்ரீலங்கா ஆகஸ்ட் இதழில் “ஞானம் வளர்த்த புதுவை” எனும் கட்டுரையில் பாரதி கூறும் யாழ்ப்பாணத்து சுவாமிகள் யார்? என்னும் வினாவினை எழுப்பினாரே தவிர யார் என எவரையும் இனங்காணவில்லை.
1962 : யாழ்ப்பாணத்து சுவாமிகளது அன்பரான திரு.பொ.சபாபதிப்பிள்ளை அவர்கள் ஸ்ரீலங்கா 04.1962 இல் எழுதிய கட்டுரையில் யாழப்பாணத்து சுவாமிகளே அருளம்பல சுவாமிகள் எனக் கூறியிருக்கின்றார்.
1963 : 07.05.1963 இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் “அருளம்பல சுவாமிகளே பாரதியாராற் போற்றப்பட்ட யாழ்ப்பாணத்துச் சுவாமி” எனக் கொண்டு எடுக்கப்பட்ட விழாவில் சமாதி ஆலயத்தருகில்” பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் நினைவாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிறுவியது எனும் வாசகம் பொறித்த நடுகல் நாட்டினர். இவ் விழாவினை முன்னிட்டு அன்றைய தினகரன் பத்திரிகையில் பேராசிரியர் களான பொ. கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றோரின் கட்டுரைகளும், யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் புதுவையில் வெளியிட்ட “காற்றை நிறுத்தக் காணுவன் விடையை” எனும் துண்டுப்பிரசுரமும் வெளியிடப்பட்டன.
09.05.1963 இல் ஈழநாடு தனது பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தில் பாரதியாரின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சுவாமிகளே” என செய்தி வெளியிட்டிருந்தது. 15.05.1963 இல் வெளியான ஆத்ம ஜோதி மாத சஞ்சிகையின் அட்டையில் அருளம்பல சுவாமிகளின் படம் பிரசுரிக்கப்பட்டு “பாரதியின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சுவாமிகள்” என வெளிவந்தது. ஆதன் ஆசிரியரான க.இராமச்சந்திரன் அவர்கள் அருளம்பல சுவாமிகளே யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
1979 : திரு.பொ.சபாபதிப்பிள்ளை அவர்கள் “புற்றளைக்கரசே” என்னும் அவரது நூலில் அருளம்பல சுவாமிகள் மீது பாடிய மூன்று பாடற் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம் மெய்கண்டார் ஆதீன முதல்வர் ஸ்ரீமத் ஞானப்பிரகாச தம்பிரான் சுவாமிகள் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் ஆலயச் சூழல்களில் கவரப்பட்டு பஜனையும் வேதாந்த வகுப்புகளும் தமது இறுதி பரியந்தம் வரை நடத்தி வந்தார்கள்.
1981 : திரு.சி.மு.தம்பிராசா அவர்கள் “பாரதி வர்ணித்த ஜகத்தினிலோர் உவமையில்லா யாழ்ப்பாணத்துச் சுவாமி அருளம்பல சுவாமிகளே” என 22.11.1981 இல் வீரகேசரியில் அருளம்பல சுவாமிகள் குருபூசையை முன்னிட்டு எழுதி வெளியிட்டுள்ளார். திரு.சி.நா.சொக்கநாத பிள்ளை அவர்கள் சிவஞானப்பிரகாச சபைக்கூடாக யாழ்ப்பாணம் மேலைப் புலோலி சைவப் பிரகாச வித்தியாலயத்தில் யாழ்ப்பாணத்துச் சுவாமிகளது நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடினார்கள்.
1982 : திரு.ஆ.சபாரத்தினம் அவர்கள் 31.01.1982 இல் தினகரன் வாரமஞ்சரியில்‘ தமிழ்க் கவிதை வரலாற்றில் பாரதிக்கு முன்னும் பின்னும்’ என்னும் கட்டுரை யில் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் அருளம்பல சுவாமிகளே எனக் குறிப்பிட்டிருந்தார்.
1982 : திரு.க.அம்பிகைபாகன் அவர்கள் 07.02.1982 இல் வீரகேசரியில் ‘பாரதி பாடிய யாழ்ப்பாணத்துச் சுவாமியே அருளம்பல சுவாமிகள்’ என யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் நிஷ்டையில் இருந்து எழுந்தவுடன் எடுத்த படத்துடன் வெளியிட்டிருந்தார்.
1990 : இந்து கலைக்களஞ்சியத்தில் திரு.பொ.பூலோகசிங்கம் அவர்கள் பாரதி போற்றிய யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் வியாபாரிமூலையைச் சேர்ந்த அருளம்பலமோனம் சுவாமிகளே என ஆதாரங்கள் நிலை நாட்டியுள்ளனர்.
புதுவையில் தங்கியிருந்த சுவாமியவர்கள் 1942 நவம்பர் மாதம் வெ.க.சிவப்பிரகாசபிள்ளை அவர்களுடன் யாழ்ப்பாணம் மீண்டு அல்வாய் வடக்கு திருமகள் வாசம் எனும் அவரது இல்லத்தில் தங்கியிருந்தார்.
1942 மார்கழி மாதம் 3 ஆம் திகதி அத்த நட்சத்திரத்தில் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் அவரது முதல் சிஷ்யரான திரு.வெ.க.சிவப்பிரகாசபிள்ளை அவர்கள் இல்லத்தில் மகா சமாதி அடைந்தார்.
1942 மார்கழி 5 ஆம் திகதி வியாபாரிமூலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி சமேத வீரபத்திரர் ஆலயத்தின் மூன்றாம் வீதியின் ஈசான மூலையில் சமாதி வைக்கப்பட்டு செப்பனிடப்பட்ட வைரக்கற்களால் திருமந்திரத் தின் படி கோவில் கட்டப்பட்டது. திரு.ச.கணபதிப்பிள்ளை ஆகிய வேற்சாமியார் 1942 இல் இருந்து நித்திய பூசைகளைப் பொறுப்பேற்று தமது இறுதிக்காலம் வரை செய்து வந்தார். தொடர்ந்து நித்திய பூசைகளும், குரு பூசைகளும் நடைபெற்று வருகின்றன.