1855 ஆம் ஆண்டு சித்தன்கேணியில் பிறந்தவர். ஆறுமுகநாவலரவர்களிடம் அபிமானமும் பக்தியுமுடையவராகவும் திரிகரணசுத்தியுடன் நாவலரவர்களைப் பின்பற்றி வாழ முயன்ற ஞானபரம்பரையைச் சேர்ந்த இவர் நாவலரது பணிகளை முன்னெடுத்துச் சென்று நாவலரின் பாதசேகரர் என்ற சிறப்புப்பெயரைப் பெற்று வாழ்ந்தவர். திருவாவடுதுறை ஆதீனத்தில் ஆற்றிய சொற்பொழிவினை வியந்த திருப்பெருந்துறை அம்பலவாணதேசிகரவர்கள் நாவலர் என்ற பட்டத்தினை சூட்டினார்.நாவலர் சற்குரு மணிமாலை,பிரம்ம தர்க்க ஸ்தவம், பௌஸ்கராகம சங்கீத பா~;யம், அகோரசிவாசாரியார் பத்ததி, அருணாசல மான்மியம், திருவாதிரைத்திருநாள்,திருச்சுழியற் புராணம்,சண்முகசடாட்சரப் பதிகம் என்னும் நூல்களை வெளியிட்டவர். இவரது உரைநடையானது சமஸ்கிருத மொழிப்புலமை காரணமாக பிரவாளநடையாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி என அழைக்கப்படும் பாடசாலையானது இவரால் சைவ வித்தியாசாலை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டதாகும். நல்லூர் ஞானப்பிரகாசர், சபாபதி நாவலர், சுவாமிநாத பண்டிதர், செம்பிறைச்சிதம்பர சுவாமிகள், உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளை, முத்துக்குமாரத்தம்பிரான் முதலியவர்கள் சிதம்பரத்திலே இறுதிக் காலத்தினைக் கழித்து சமாதியடைந்தவர்கள். அவர்களைப் போன்றே சிதம்பரத்தில் திருஞானசம்பந்த சுவாமிகள் திருப்பணி மடம் ஒன்றினை அமைத்து அங்கேயே இறுதிக்காலம் வரை வாழ்ந்த அம்பலவாண நாவலரவர்கள் 1932 ஆம் ஆண்டு சமாதி அடைந்தார்.