1921-11-03 ஆம் நாள் அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். உலகமறிந்த அருளாளரும் கவிஞருமான இவர் இசைச்சொற்பொழிவு, கவிதை, படைப்பிலக்கியம் என்பவற்றில் சிறந்து விளங்கியதுடன், எந்நேரமும் கவி பாடவல்ல ஆசுகவி. கதாப்பிரசங்கி, சோதிடம், தமிழும் இணைந்த புலமையுடையவர். அளவெட்டி நாகவரத நாராயணர் தேவஸ்தானத்தின் தலைவரும் ஸ்தாபகருமாவார். இவரது பாடல்கள் எவருக்கும் விளங்கத்தக்கவகையில் இலகுவான அருள் வார்த்தைகளாலானவை. ஆழமான தத்துவக் கருத்துக்கள், புதுமைநயம் மிளிரவைக்கும் பாணியில் அமைந்தவை. கந்தபுராண வசனகாவியம், வள்ளிநாயகன், செல்வச்சந்நிதிக்கந்தன் திருப்பாமாலை, அருள்மலர் மாலை, கூட்டுப்பிரார்த்தனைப் பாடல்கள், கண்ணன் கீதை உபதேசம் முதலான ஏராளமான நூல்களுக்கு ஆசிரியராவார். இவரால் பாடப்பெற்ற பாடல்கள் பெரும்பாலும் தெய்வீகம் சார்ந்தனவா கவும், தமிழ் இலக்கியம் சார்ந்தனவாகவும் காணப்படுகின்றன. இவரது அறிவுத்திறன் சமய சமூக சேவைகளினூடாக மக்களுக்கு பயனுடையதாய் இருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்திலே அருள் வழங்குகின்ற பல ஆலயங்களுக்கான ஊஞ்சற் பாடல்களைப் பாடியவர். இவருடைய சேவைகளைக் கௌரவிக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் “கௌரவமுதுகலைமாணி” என்னும் பட்டத்தினை வழங்கிப் பாராட்டப்பட்ட இப்பெரியார் 2005-12-11 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.