1888 ஆம் ஆண்டில் ஆறுமுக நாவலரின் முயற்சியால் உருவான யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை, தனது நோக்கங்களில் ஒன்றாக இந்து சமயச் சூழலில் ஆங்கில வழிக் கல்வி புகட்டும் பாடசாலைகளை உருவாக்கும் எண்ணத்தை வெளியிட்டிருந்தது. எனினும் கிறித்தவ மிசன்களின் எதிர்ப்புக் காரணமாக இவ்வாறான பாடசாலைகளை அமைப்பது இயலாத ஒன்றாக இருந்தது.
1887 ஆம் ஆண்டில் வில்லியம் நெவின்சு முத்துக்குமாரு சிதம்பரப்பிள்ளை என்னும் யாழ்ப்பாணத் தமிழ்க் கிறித்தவர் ஒருவர் தேசிய நகர உயர் பாடசாலை(Native Town High School) என்னும் பெயரில் ஆங்கிலப் பாடசாலை ஒன்றைக் கிறிஸ்தவ மிசன் தொடர்புகள் ஏதுமின்றித் தனியாகவே தொடங்கினார். இப் பாடசாலை யாழ்ப்பாணத்தின் கிறித்தவப் பெரும்பான்மைப் பகுதியான பிரதான வீதிப் பகுதியிலேயே அமைக்கப்பட்டது. எனினும் இதனை நடத்துவதில் உள்ள பொருளாதாரப் பிரச்சினை காரணமாக, அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெயர் பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவரும், பணவசதி படைத்தவருமான எஸ். நாகலிங்கம் என்பாரின் துணையை சிதம்பரப்பிள்ளை நாடினார். அதனை ஏற்றுக்கொண்ட நாகலிங்கம், அதன் காப்பாளராக இருந்து அதன் நடவடிக்கைகளில் மிகுந்த அக்கறை காட்டிவந்தார். 1889 ஆம் ஆண்டில் பாடசாலையை நாகலிங்கம் அவர்களிடம் முழுதாகவே ஒப்படைத்தார் சிதம்பரப்பிள்ளை. பாடசாலையின் புதிய உரிமையாளரான நாகலிங்கம், பாடசாலையை உள்ளுர் இந்து மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த வண்ணார்பண்ணைப் பகுதிக்கு நாகலிங்கம் நகர உயர் பாடசாலை(Nagalingam Town High School) இடம் மாற்றினார். நாகலிங்கம் இந்து சமயத்தவர். சைவ பரிபாலன சபையை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர். இதனால் அவர் தனது பாடசாலையைச் சைவ பரிபாலன சபையின் மேலாண்மையின் கீழ்க் கொண்டுவர விரும்பினார். இதற்கிணங்க 1890 ஆகஸ்ட் 19 ஆம் தேதி சபையின் தலைவர் தா. செல்லப்பாபிள்ளை என்பவரின் தலைமையில் கூடிய சபையின் செயற்குழு பாடசாலையைப் பொறுப்பேற்க முடிவெடுத்தது. பாடசாலையின் பெயரும் அவ்வாண்டிலேயே இந்து உயர் பாடசாலை (Hindu High School) என மாற்றப்பட்டு தற்போதுள்ள இடத்தில் ஒரு தற்காலிக கட்டடத்துக்கு இடம்பெயர்ந்தது. நாகலிங்கம் அவர்களே இதன் முதல் மேலாளராகவும் பொறுப்பேற்றார். 1892 இல் வில்லியம் சிதம்பரப்பிள்ளையின் மகன் என். செல்வத்துரை இதன் தலைமை ஆசிரியரானார்.