பழமையே நமது முதுசம்
பாரம்பரியமுடைய விவசாய நடவடிக்கைகளில் எம்மவர்கள் பண்டுதொட்டு இன்று வரை ஈடுபட்டு வருகின்றனர். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி வாழ்ந்த இம்மண்ணில் அவர் சிந்தையில் உருவான ஆயிரமாயிரம் எண்ணங்களில் ஒன்று இருக்கின்ற வளத்தினை பயன்படுத்தி உயர்நிலை அடைதல் என்பதாகும். எம்முன்னோர்களிடம் தொழில்நுட்ப அறிவு நிறையவே மேலோங்கியிருந்தது என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள் காணப்படு கின்றன. வெறுமனமே இலக்கியம், பண்பாடு என்று மட்டும்நின்று விடாமல் தொழில் நுட்பத்திலும் கைதேர்ந்தவர்களாக இருந்துள்ளார்கள். அவற்றில் பல இன்றைய நிலையிலே பராமரிப்பற்ற நிலையிலும் இன்றைய சந்ததியினரால் பாவனைப்படுத்த முடியாமலும் அறியாமலும் அழிவடைந்துபோயுள்ளன. அத்தகைய பழமை மூலதனச்சொத்து அல்லது மரபுரிமை எச்சமாக காணப்படுகின்ற சூத்திரவாளிக் கிணறும் அதன் தொழில்நுட்பமுமாகும்.
ஆரம்ப காலங்களில் விவசாயிகள் தமது தோட்ட நிலங்களுக்கு நீரினை பாய்ச்சுவதற்கு பட்டகொடி(பட்டை), துலா இறைப்பினை மேற்கொண்டு வந்துள்ளனர். பனை ஓலைகளால் மிகவும் இறுக்கமாகப் பின்னப்பட்ட நீர் ஒழுகிவிடமுடியாதவாறான நீர்கோலிகளை பயன்படுத்தி பயிர்களுக்கு நீரினை பாய்ச்சினார்கள். இதனை பட்டை என்று அழைத்தார்கள். இவை கடகத்தினை ஒத்த அமைப்புடையதாகும். கடகம் நான்கு முனைகளை உடையது இதற்கு ஒரு முனையே காணப்படும். பின்னர் கடகங்களுக்குப் பதிலாக இரும்பு வாளிகளை பயன்படுத்தி தமது வயல் நிலங்களுக்கு நீரினை பாய்ச்சினார்கள்.
இதன் பிற்பாடு துலா முறையினை எமது முன்னோர்கள் பயன்படுத் தினார்கள். வடமாகாணத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட நீர்ப்பாசன முறைகளுள் ஒன்றாக துலா இறைப்பு முறை காணப்படுகிறது. இன்று ஒரு சில இடங்களில் தான் இதனைக் காணக்கூடியதாகவுள்ளது. சிறிய கிணறுகள் மற்றும் ஆழமான கிணறுகளில் துலா முறை பயன்பாட்டில் இருந்துள்ளது. துலா முறையினை மேற்கொள்வதற்கு இருவர் தேவைப்படுகிறார்கள். ஒருவர் துலா மீது ஏறிநின்று மிதிக்க மற்றையவர் கிணற்றினுள் உள்ள நீரினை வாளி மூலமாக கோலவேண்டும். பிற்பட்ட காலங்களில் ஒருவரே தனியாக மேற் கொள்ளக்கூடிய வகையில் பாரதூக்கியாக கற்களைப் பயன்படுத்தினார்கள். பெரும்பாலான வீடுகளில் இப்பொறிமுறை தான் ஆரம்ப காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பிற்பட்ட காலங்களில் துலாக்களுக்கு பயன்படுத்தப்பட்ட மரங்களை தமது விறகுத் தேவைகளுக்காக பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதனால் இன்று துலாக்கிணறுகள் பெரிதும் வழக்கொழிந்து விட்டன. ஒரு சில இடங்களில் மாத்திரம் தான் பயன்பாட்டிற்கு உரியனவாகவுள்ளது.
ஆரம்ப காலங்களில் விவசாயிகள் கால் ஏக்கர் (குவாட்டரேக்கர்) என்று பயிர்களைச் செய்தார்கள். ஆயிரம் கன்று தறை என்றும் இதனைக் கூறுவார்கள். இத்தகைய முறைகளுக்கு பட்டை, துலா முறை போதுமானதாக இருந்துள்ளது. பின்னர் விவசாயிகள் தமது உற்பத்திகளை அதிகரிக்க முற்பட்ட வேளைகளில் பட்டகொடி (பட்டை) மற்றும் துலா இறைப்பு முறை போதுமானதாக இருக்கவில்லை. இதன் விளைவாக கண்டுபிடிக்கப்பட்டது தான் சூத்திரம் வளைத்து நீர் இறைத்தல் முறை. அதாவது நவீன நீர் இறைக்கும் பம்பிகள் வருவதற்கு முற்பட்ட காலத்தில் யாழ்ப்பாண விவசாயிகளால் தோட்ட நிலங்களுக்கு நீர்பாச்சுவதற்காக பயன்படுத்தப்பட்ட முறையே சூத்திரவாளிக்கிணறு அல்லது சூத்திரம் வளைத்து நீர் இறைக்கும் முறையாகும். உள்ளுர் வளங்களையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி முற்று முழுதாக எம்மவர்களது சிந்தனையிலும் கைவண்ணத்திலும் உருவான ஓர் நிரிறைப்பு முறையே சூத்திரவாளி முறையாகும்.
சூத்திரக்கிணறு என்பது செக்கு போன்ற ஒரு அமைப்பில் அடி அச்சில் சக்கரங்களும் அந்தச் சக்கரங்களின் சுழற்சிக்கு ஏற்ப மேலும் கீழும் சென்று வரத்தக்கதாக இரும்புப்பட்டை வாளிகளும் பொருத்தப்பட்டிருக்கும். நடு அச்சிலிருந்து நீண்டு செல்லும் நுகத்தடியில் முனையில் மாடுகள் பூட்டப்பட்டிருக்கும்.
இந்த மாடுகள் சுற்றும்போது சக்கரங்கள் அசைந்து கீழே கிணற்றுக்குள் சென்று நீரினை அள்ளிக்கொண்டு வந்து கால்வாய்களுக்குள் ஊற்றும். இங்கு பெரிதும் மாட்டினது வலு தான் அதிகமாகத் தேவைப்படுகிறது. இதனைப் பார்ப்பதற்கு இன்றையதலைமுறையினருக்குக் கொடுத்து வைக்கவில்லை. இதற்கு இரண்டு மாடுகளும் அதை ஓட்டுவதற்கு ஒருவரும் நீரினை அணைகட்டுவதற்கு ஒருவரும் தேவைப்பட்டார்கள்.
சூத்திர கிணற்றுக்குள் பயன்படுத்துகின்ற வாளிகளை பிரதானமாக இரு வகைகளாக வகைப்படுத்துகின்றனர். ஒன்று பல வாளிச் சூத்திரக்கிணறுகள் என்று கூறுவோம். இவை 30-32 வாளிகளையுடையதாகக் காணப்படும். மற்றையது இரு வாளிச் சூத்திரக்கிணறு என்பது இரண்டு வாளிகளை உடையதாகக் காணப்படும். இவை 30-35 லீற்றர் கொள்வனவு உடையதாகக் காணப்படுகிறது. நீர்வேலிப் பிரதேசத்தில் 42 வாளிகளையுடைய சூத்திர வாளி அமைப்பு முறை இருந்ததாக அறியமுடிகின்றது. இச்சூத்திரக் கிணறுகளானது அளவெட்டி, ஏழாலை, கட்டுவன், நீர்வேலி, கோப்பாய், உரும்பிராய் போன்ற பிரதேசங்களில் காணப்பட்டது. 2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் ஆசியாவையே உலுக்கிய நிசாப்புயல் யாழ்ப்பாணத் திலுள்ள வரலாற்றுடன் தொடர்புடைய பாரிய விருட்சங்களை அடியோடு சாய்த்துவிட்டது. இவற்றுள் சூத்திரக்கிணறானது பாரிய அழிவுகளை எதிர் கொண்டுவிட்டது. இதனால் அவை பயன்பாட்டுக்கற்றவையாகிவிட்டன. இன்று இவற்றின் எச்சங்களை ஓர் சில இடங்களில் மாத்திரமே காணக் கூடியதாகவுள்ளது. குறிப்பாக அளவெட்டிப் பிரதேசத்தில் இறால் மடம் எனும் கிராமத்தில் இதன் எச்சத்தினை இன்றும் காணக்கூடிய தாகவுள்ளது. இச் சூத்திரக்கிணறுகளானது இரும்புகளால் ஆக்கப்பட்டுள்ள மையினால் குறித்த நில விவசாயிகள் இதனை கழற்றி விற்றுவிட்டனர். எமது பொக்கிசங்களை நாங்களே பணத்திற்காக விற்பது என்பது வேதனைக்குரிய விடயமாகும்.
இன்று நாம் தொழில் நுட்ப உலகில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இந்த தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக மின்சாரம் மூலமான நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் எரிபொருள் மூலமான இயந்திரங்களது வருகையினால் எம்மவர்கள் மிக இலகுவாக பயிர்களுக்கு நீர்பாய்ச்ச முடிகிறது. இது ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. இவற்றின் வரவினாலும் சூத்திரக்கிணற்றுப் பொறிமுறையினை வழக்கிழக்கச் செய்துள்ளது. விவசாயிகள் பயிர்களுக்கு நீரினை போட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் சென்றுவிடுவார்கள். அவர்கள் சென்று வருவதற்குள் கிணற்றுக்குள் இருக்கின்ற நிலத்தடி நீர் முற்று முழுதாக உறிஞ்சப்படுகிறது. இவை மாத்திரமின்றி அளவுக்கதிகமாக நீர் பாய்ச்சப்படுவதனால் பயிர்கள் அழிவுக்குள்ளாக வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. சூத்திரக் கிணற்று நீர்ப்பாசன முறை மூலம் போதியளவு நீரே பயிர்களுக்குப் பாய்ச்சப்படுகிறது. அத்துடன் நீர் முற்று முழுதாக வற்றிப்போவதற்கான சந்தர்ப்பங்கள் இங்கு இல்லை. நீர் ஊறிக்கொண்டே இருக்கும். ஆனால் மின்சார மற்றும் எரிபொருள் இறைப்பின் மூலம் நீர் முற்றாக உறிஞ்சப்படுவதனால் மறு நாட்களும் பயிர்களுக்கு நீர் பாய்ச்சவேண்டிய தேவை ஏற்படுகிறது. இவை நாம் கண்முன்னே காணுகின்ற காட்சிகளாகும்.
இச்; சூத்திரக்கிணறுகளை மீண்டும் இயங்கு நிலைக்கு கொண்டுவருவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை தோல்வியிலேயே முடிந்தன. இதனைத் திருத்துவதற்கு பல இலட்சங்கள் தேவைப்படுகின்றன. பழுதடைந்து போயிருக்கக்கூடிய சூத்திரக் கிணறுகளை மாற்று முறைகளைப் பயன்படுத்தி இயங்கு நிலைக்கு கொண்டுவருவோமாயின் தமிழர்களின் அழியாப்பொக்கிசங்களுள் ஒன்றாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
இன்றைய இக்கட்டான காலநிலைகளில் மீண்டும் பழுதடைந்து போயிருக் கக்கூடிய சூத்திரக் கிணறுகளை செம்மைப்படுத்தி இயங்கு நிலைக்கு கொண்டுவந்து அவற்றின் மூலம் விவசாயத்திற்குத் தேவையான நீர்ப்பாசனத்தை மீண்டும் ஆரம்பித்தால் இன்றைய சந்ததியினரும் விவசாயத்தில் புரட்சியாளர்களாக அடையாளப்படுத்தப்படுவது மாத்திர மின்றி நாட்டின் எரிபொருள் பற்றாக்குறைக்கு விவசாயம் விதிவிலக்கானது என்பதை வெளிக்கொணர முடியும் என்பதே வெளிப்படையான உண்மை.
