மடங்கள்
மடம் என்பது முனிவர்கள் வாழுமிடம் அத்துடன் அறியாமையை போக்குமிடம் என்ற அடிப்படையில் பொருள் கூறலாம். இந்திய வரலாற்றில் துறவிகளின் வாழ்விடங்களாகவே மடங்கள் காணப்பட்டிருந்தன. ஆனால் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாண பண்பாட்டில் மடங்கள் துறவி வாழ்விடங்களாக மட்டும் காணப்பட்டிருக்கவில்லை.
யாழ்ப்பணப் பண்பாட்டில் மடங்கள் பல்கிப் பெருக சமூக பண்பாட்டுப் பின்புலம் மற்றும் சமய மறுமலர்ச்சி ஆகியன காரணமாகியதுடன்; ஆரம்ப காலங்களில் இளைப்பாறு மையங்களாக மடங்கள் காணப்பட்டன. பின்னர் ஏற்பட்ட சமய மறுமலர்ச்சி காரணமாக சமய ரீதியாக மடங்கள் தோற்றம் பெற்றன. மடங்களினை
- சமயம் சார் மடங்கள் 2. சமயம் சாரா மடங்கள்
என இருவகையாக பிரிக்கலாம். மடங்களோடு இணைந்த வகையில் கிணறு அல்லது கேணி, நீர்த்தொட்டி, ஆவுரஞ்சிக்கல், சுமைதாங்கிக்கல் என்பனவும் முக்கியமான அம்சங்களாகும். வழிப்போக்கர்களும் அவர்களுடன்; செல்லும் ஆவினங்கள் நீர் அருந்தவும் ஏதுவாக சாய்வான படிகளையுடைய கேணிகள் அமைக்கப்பட்டிருக்கும். இதனுடன் பளிங்கு கல்லாலான ஆவுரஞ்சிக் கல்லும் சுமைகளை இறக்கி வைப்பதற்கேற்ப நீள்சதுர படிமுறை உயரத்தினையுடைய சுமை தாங்கி கல்லும் அமைக்கப்பட்டிருக்கும்.
“சிறாப்பர்”மடம்.
யாழ்ப்பாண வரலாற்று போக்கில் மடங்கள் சமூக மற்றும் சமய தேவைகளுக்காக தோற்றம் பெற்றன. சமூகத்தின் சமய கலாசார தேவைப்பாடுகளின் அடிப்படையில் கீரிமலை பிரசேத்தில் பதின்மூன்று மடங்கள் காணப்பட்டுள்ளன. அவற்றில் இலங்கையில் இன்று வரை நிலைத்து நிற்கும்; புராதன மடங்களில் பெரியமடமாக “சிறாப்பர்”மடம் காணப்படுகின்றது.
ஈழத்தின் ஐந்து ஈச்சரங்களில் ஒன்றான நகுலேஸ்வரத்தின்; வடக்குப் பக்கமாக சைவப் பாரம்பரிய கலை அம்சங்களை வெளிப்படுத்தும் முகமாக அமையப் பெற்றமடமே “சிறாப்பர் மடம்” ஆகும். இம்மடமானது “நகுலேஸ்வர சுவாமிகள் தண்ணீர் பந்தல்” எனும் பெயரில் 1870 களின் பிற்பகுதியில் சுப்பிரமணியம் கதிரவேல் என்பவரினால் அமைக்கப்பட்டது. அக்காலத்தில் உயர் நிலையில் காணப்பட்ட பதவிகளில் ஒன்றான சிறாப்பர் பணியினை மேற்கொண்டமையினால் இம்மடமானது “சிறாப்பர் மடம்” எனவும் அழைக்கப்படுவதுடன் இன்றுவரை இப்பெயர் மக்கள் மத்தியில் நிரந்தரமாக நிலைபெற்றுள்ளது.
சிறாப்பர் மடமானது வடக்கு மற்றும் தெற்கு புறங்களில் சாலகாரகோபுரங்களுடன் நாற்சார் கட்டிடமரபில் மடகட்டடக்கலையின் தனித்துவத்தினை எடுத்துக்காட்டுவதாக காணப்படுகின்றது. வாயிற்கோபுரத்தில்; காணப்படும் சிற்பங்கள் யாழ்ப்பாண வரலாறு, பண்பாடு, வீரசைவமரபு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி போன்றவற்றை பிரதிபலிக்கும் அடையாளங்களாக காணப்படுவதுடன் காலம் கடந்தும் மடம் அமைக்கப்பட்ட கால வரலாற்றினை எடுத்துக் காட்டுபனவாக திகழ்கின்றன.
இடைக்கால இந்து ஆலயங்கள் வழிபாட்டு இடங்களாக மட்டுமன்றி சமூகநிறுவனங்களாக செயற்படக் கூடியவகையில் மடகட்டிட அமைப்புக்களுடன் இணைந்து அமைந்திருந்ததை காணமுடிகின்றது. அவற்றை நினைவுபடுத்தும் ஒன்றாகவே சிறாப்பர் மடத்தின் கட்டிட அமைப்பும் காணப்படுகின்றது. இங்கே திண்ணை, பொதுமண்டபம், அறைகள், பண்டகசாலை, தண்ணீர்ப் பந்தல், சமய கூடம், நூலகசாலை, பொழிந்தகற்களால் வடிவமைக்கப்பட்ட கிணறுகள், நீர்த்தொட்டி, ஆவுரஞ்சி மற்றும் சுமைதாங்கி என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி காணப்படுகின்றது. இம்மடமானது சுண்ணாம்புக்கற்கள், செங்கற்கள் மற்றும் முருகைக்கற்களை பயன்படுத்தி சுண்ணாம்பு மற்றும் சுதை கொண்டு கட்டப்பட்டுள்ளதுடன் பனைமரம் மற்றும் பர்மா தேக்கினால்; ஊசிக்கால் கூரைவடிவத்தில் வளைவு கொண்ட ஓடுகளால் வடிவமைக்கப்பட்டதாகவும் காணப்படுகின்றது.
அமைக்கப்பட்டதன் நோக்கங்கள் :
1- வருடத்தின் எல்லா நாட்களும் தண்ணீர், மோர் என்பவற்றைத் தானமாக வழங்குவது.
2- அன்னதானம் வழங்குவது.
3- உள்நாட்டு வெளிநாட்டு இந்து யாத்திரிகர்களுக்கான இலவச தங்குமிட வசதிகளை வழங்கல்.
4-கந்தபுராணம் மற்றும் ஏனைய புராணங்களை பாராயணம் செய்தல்
5-இந்துசமயம் சார் கருத்தரங்குகள், விழாக்கள் மற்றும் சமய நிகழ்வுகளை நடாத்துதல்.
6- ஆன்மீக தேடல்களுக்கான நூலகவசதி
இம்மடத்தின் செயற்பாடுகள் வினைத்திறனாக இடம்பெறும் வகையில் ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் பொருத்தமானவர்கள் நியமிக்கப்பட்டு நிர்வாககட்டமைப்பு சிறப்பாக காணப்பட்டது. கீரிமலைப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் 1987 இற்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால்; இடப்பெயர்ந்ததன் காரணமாக மடத்தினை பாராமரிப்பதில் பல இடர்பாடுகள் எற்பட்டன. மடத்தின் செயற்பாடுகள் முற்றாக தடைப்பட்டதுடன் கட்டிடத்தின் பலபகுதிகள் இயற்கை மற்றும் மனிதசெயற்பாடுகளினால் சிதைவடைந்து காணப்பட்டது.
தொல்லியல் திணைக்களத்தினால் 2011ம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அரசவர்த்தகமானியில் (இலக்கம் 1739) பிரகடனப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாண தமிழர் மட கட்டிடக்கலையின் தனித்துவத்தினையும் சிறப்பினையும் உலகிற்கும் எமது எதிர்கால சந்ததிக்கும் எடுத்துக் காட்டுவதாக காணப்படும் இம் மடத்தின் செயற்பாடுகளை தொல்லியல் திணைக்கள விதிமுறைகளுக்கு அமைவாக “சிறாப்பர்” குடும்ப நேரடி வாரிசுகள் முன்னெடுத்து வருகின்றனர்.
மூலம் : பாலசுப்பிரமணியம் கபிலன், தொல்லியல் திணைக்களம்,யாழ்ப்பாணம்.
தொடர்புடைய நூல் – மடமும் மடக் கட்டடக் கலையும் – குமுதா சோமசுந்தரக்குருக்கள், யாழ்ப்பாணம்.