இம்மரணச் சடங்குகள் முடிந்து எட்டாம் நாள் எட்டுச்செலவும் 31 ஆம் நாள் அந்தியேட்டிக் கிரியைகளும் நடைபெறுகின்றன. இதேவேளை அகாலமரணம் அடைந்தவர்களுக்கு 6 மாதத்தின் பின்பு தான் இவ் அந்தியேட்டிக் கிரியைகள் செய்யப்படுகின்றன. இவை தவிர ஒவ்வொரு மாதமும் இறந்தோர்களது தினத்தை ~மாசிகம்| என்ற பெயரில் நினைவு கூர்ந்து ஆண்டு திதிக்கு செய்வது போல சிலர் செய்கின்றனர். பலர் வருடாவருடம் ~சிரார்த்தம்| என்று மேற்கொள்கின்றனர். இதில் 31 ஆம் நாள் நடைபெறும் அந்தியேட்டிக் கிரியை நிகழ்விற்கு இன்று அழைப்பிதழ்கள் அடித்துக் கொடுக்கும் வழக்கமும் ஏற்பட்டுள்ளது.
ஆரம்ப காலங்களில் மரணவீடு நடந்த வீட்டுக்கு உறவினர்கள், அயலவர்கள், 31 ஆம் நாள் வரை 3 வேளைகளிலும் அவர்களுக்கு தம் வீட்டில் உணவு சமைத்துக் கொண்டு சென்று கொடுத்து ஆறுதல் கூறும் வழக்கம் காணப்பட்டது. உணவு சமைத்துக் கொண்டு செல்ல முடியாதவர்கள் உணவு சமைப்பதற்கு வேண்டிய அரிசி, மரக்கறி, உப்பு, தூள், தேங்காய் முதலான பொருட்களைக் கொண்டு சென்று கொடுப்பார். இன்று இம்முறைகள் பெருமளவிற்கு வழக்கொழிந்து வருகின்றன. அத்துடன் ஆரம்ப காலங்களில் அந்தியேட்டிக் கிரியைக்கு மிக நெருங்கிய உறவினர்கள், அயலவர்கள், உணவு கொடுத்தோர் போன்றோரையே அழைக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் இன்று மரணநிகழ்விற்கு வந்தோர் யாவருக்கும் சொல்லும் வழக்கம் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.