1931.06.06 ஆம் நாள் கைதடியில் பிறந்து இணுவில் இந்துக் கல்லூரியில் பயின்றவேளை தனது ஒன்பதாவது வயதில் இணுவில் கிருஸ்ணமூர்த்தி அவர்களிடம் ஆரம்ப இசைப் பயிற்சியையும் யாழ்ப்பாணம் சின்னத்துரை இராஜகோபால் அவர்களிடம் சிறிதுகாலம் பயின்று 12 ஆவது வயதில் இந்தியா சென்று திருச்சேலை முத்துக்குமாரசாமிப்பிள்ளை, இலட்சுமணன், கொர்நாடு பழனிவேல்ப் பிள்ளை ஆகியோரைத் தமது குருவாகக் கொண்டு தவில் வாசிப்பில் தனித்துவமுடைய வராகத் திகழ்ந்தார். இணுவில் கந்தசுவாமி கோவிலில் முதன்முதலாக தவில் வாசிக்கத் தொடங்கினார். நாதஸ்வரமேதை காரைக் குறிச்சி அருணாசலம்பிள்ளை அவர்களுடன் இணைந்து ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழாவிலே வாசித்த பெருமையுடையவர். 1967 மார்கழி 30 இல் தமிழ் இசைச் சங்கத்தின் ஆதரவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாதஸ்வர மேதை குழிக்கரை எஸ்.பிச்சையப்பா அவர்களின் நாதஸ்வரக் கச்சேரியில் தவில்மேதை வட பாதிமங்கலம் தெட்சணாமூர்த்தி அவர்களுடன் இணைந்து தவில் வாசித்தார்.1968 மார்கழி 20 இல் உலகப் புகழ்பெற்ற நாதஸ்வரமேதை N~க்சின்னமௌலானா அவர்களது கச்சேரியில் தவில்மேதை முத்துக் குமாரசாமிப்பிள்ளையுடன் இணைந்து வாசித்தார். இந்தியா, இலங்கை மட்டுமன்றி சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் வாசித்த பெருமையுடையவர். 35 தங்கப்பதக்கங்களைப் பெற்றுக் கொண்ட இவர் எம். பஞ்சாபிகேசன், என்.கே.பத்மநாதன், எம்.பி. பாலகிருஸ்ணன், கோண்டாவில் பாலகிருஸ்ணன், என்.ஆர்.கோவிந்தசாமி, பல்லவி இராஜதுரை, பி.எஸ்.ஆறுமுகம் பிள்ளை, அப்புலிங் கம், சண்முகம், வெள்ளைச்சாமி, சுந்தரமூர்த்தி, வி.கே.கானமூர்த்தி, வி.கே.பஞ்சமூர்த்தி முதலிய பிரபல நாதஸ்வரர் வித்துவான்களுக்கு தவில் வாசித்த பெருமையும் வி.தட்சணாமூர்த்தி, இராஜகோபால், கணேசபிள்ளை, என்.ஆர்.சின்னராசா, புண்ணியமூர்த்தி முதலிய பிரபல தவில் வித்துவான்களுடன் இணைந்து தவில் வாசித்த பெருமையும் இவருக்கு உண்டு. இவரது கலைத்திறமையைப் பாராட்டி லயநாத குபேரபாரதி, கரவேகநாதசிம்மம் என்ற பட்டத்தினையும், இலங்கை அரசின் கலாசார அலுவல்கள் திணைக்களம்கலாபூஷணம் விருது வழங்கியும் கௌரவிக்கப்பெற்றவர். 2001.01.27 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.