1938.08.17 ஆம் நாள் பருத்தித்துறையில் பிறந்து யாழ்ப்பாணம் -அளவெட்டி என்னும் இடத்தில் நிரந்தரமாக வாழ்ந்தவர். பல்லவி என்னும் பாடத்தினை நாதஸ்வரத்தில் சிறந்தமுறையில் வாசிக்கும் ஆற்றலுடையவராதலால் பல்லவி இராஜதுரை என்ற அடைமொழியால் அழைக்கப்படலானார். அநேகமான கச்சேரிகளில் கலைஞர்கள் ஒருவரை ஒருவர் மடக்குவதற்காக போட்டி போட்டு வாசிப்பதுண்டு. இத்தகைய ஒரு நிலையினை நாதஸ்வர இசையின் மூலம் உருவாக்கி பல்லவி என்ற வாசிப்பினை ஏற்படுத்திய இவர் அமரர்களான என்.கே.பத்மநாதன், வி.தட்சணாமூர்த்தி, குமரகுரு போன்ற புகழ்பூத்த கலைஞர்களுடன் இணைந்து நாதஸ்வரம் வாசித்த பெருமைக்குரியவர். குறிப்பிட்ட பல வருடங்களாக இசைப் பணியாற்றிய இவர் தனது புதல்வர்களில் ஒருவரை தவில் கலையிலும் இன்னொருவரை நாதஸ்வரக்கலையிலும் பயிலவைத்து இக்கலைக்கான தனது பரம்பரைத் தொடர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளார். 1978.10.10 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
