யாழ்ப்பாணத்தில் கிராமிய வறுமையை தணித்த பொருளாதார முறைமைகளில் அற்ஹோம் அல்லது (Athome) பணவரவுச் சடங்கு எனப்படும் பொருளாதார முறைமைக்கும் பெரும் பங்கு உண்டு. கிறிஸ்தவ மக்களின் வாழ்வில் பொருளாதார மறுமலர்ச்சியை ஒரு காலத்தில் ஏற்படுத்திய இப்பொருளாதார முறைமையையும் யாழ்ப்பாண நினைவுப் பக்கங்களில் நினைவு மீட்டிப் பார்க்கப்படவேண்டியதே. பொருளியல் அறிஞர்கள் நுண்பாகப் பொருளாதார முறைமை (Micro Economy system) என அழைக்கும் இவை எமது மக்களின் வாழ்வில் வெற்றிகரமானதாக இருந்திருக்கிறது. இருந்து வருகிறது.
மேற்குலகிலிருந்து புதிய புதிய பெயர்ச்சிகளில் இன்று கவர்ச்சிகரமாகக் கூறப்படும் பல கோட்பாடுகள் எமது பண்பாட்டிலிருந்து ஏற்கனவே தோற்றம் பெற்றுள்ளன. எமது வாழ்வியல் தேவைகளை நிறைவு செய்யும் இக் கோட்பாடுகள் எமது அடிப்படைத் தேவைகளின் தளத்திலிருந்தே தோற்றம் பெற்றுள்ளன. எமது பண்பாடு, காலநேரத் தேவைகளை இவை முழுமை செய்துள்ளன.
பணவரவுச்சடங்;கு பொருளாதார முறைமையானது காப்புறுதிக் கோட்பாட்டில் கூறப்படும் பகிர்தல் எனும் தத்துவத்தை அடியொற்றியதாகவே இம்முறை உள்ளது. சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். அது போல பலரிடம் உள்ள சிறியளவு பணம் ஒருவரிடம் சேர்ந்து பெரும் தொகையாகி உதவுகிறது. இந்து மத மக்களில் ஒரு பகுதியினர் தமது வறுமையின் பிடியிலிருந்து விடுபட பணச்சடங்கு என முன்னாளில் அழைக்கப்பட்ட பணவரவு பொருளாதார முறைமையை அறிமுகம் செய்தனர். அது போலவே கிறிஸ்தவ மக்களின் இம்முறையும் தொழிற்படுகின்றது. பணவரவுச்சடங்கு அல்லது அற்ஹோம் முறை ஆரம்ப காலங்களில் பல கடற்கரையோரக் கிராமங்களில் பணச்சடங்கு என அழைக்கப்பட்டது.
பின்னாளில் இது அற்ஹோம் என்ற பெயரைப் பெற்றது. குpராமிய பணப்பொருளாதார முறைமையில் இது செல்வாக்கு வகித்த காலத்தில் கரையோர சமூகங்களில் ஒரு மாதிரியாகவும் கரையோரமல்லாத சமூகங்களில் வேறொரு மாதிரியாகவும் கொண்டாடப்பட்டது. கரையோரப் பிரதேசங்களில் கடற்றொழிலுடன் பின்னிப் பிணைக்கப்பட்டதாக வாழ்வு இருக்கின்றது. அதனால் முன்னாளில் அற்ஹோம் நிகழ்வானது கரையோரக் கிறிஸ்த்தவக் கிராமங்களில் மாலை 6மணி முதல் இரவு 10 மணி வரையும் படுசுறுசுறுப்பாக இருக்கும். இரவில் தொழிலுக்குச் செல்வோர் விடிகாலை வந்து மீன்களை விற்று தமது உடல்க்களைப்பை எல்லாம் போக்கிய பின் மாலை நேரத்தில் தான் ஓய்வாக இருக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். உணவுப் பொருள்களின் விலைவாசி குறைவாக இருந்த காலத்தில் மதிய உணவு கொடுத்தே இந்நிகழ்வு நடைபெற்றது. பின்னாளில் மாலை நேரத்தில் கேக், வடை, றோல்ஸ், குளிர்பானம் என மாறியது. அதுவும் செலவு கூடியதாகப்போக இம்முறைமை தற்போது பெருமளவில் கேக். குளிர்பானம் எனச் சுருங்கிவிட்டது. அற்ஹோம் நிகழ்வால் கிடைக்கக் கூடிய பணத்தின் வரவை அதிகரிப்பதற்காகவே செலவுச் சுருக்கங்கள் வந்துவிட்டது.
அற்ஹோம் அழைப்பிதழில் கொண்டாட்டம் 3 நாள்கள் வரையும் நடைபெறுமென அச்சிடப்பட்டிருந் தால் அந்த 3 நாள்களும் சென்று தமது பணக் கொடுப்பனவைச் செலுத்தலாம். அவ்வாறு 3 நாள்களெனப் போடாவிட்டால் அந்த ஒரு நாள் மட்டும் பிரதான கொண்டாட்டமாக நிகழும். நிகழ்வில் பணம் வாங்குவதற்கு கொப்பி ஒன்று எழுதப்பயன்படுத்தப்படும். இதில் பெயர், முகவரியுடன் கொடுக்கப்படும் தொகையை பழையது, புதியது எனக் குறிப்பிட்டுப் பதிவார்கள். பழைய தொகையெனக் குறிப்பிட்;ட பணத்திற்கு 10வீத வட்டி போட்டுச் செலுத்தும் முறையுமிருந்தது. புதிதாக வழங்கப்படும் காசை பழைய தொகையைச் சமப்படுத்தும் விதமாகவோ, அல்லது அதிகமாவோ வழங்குவார்கள். வடமராட்சிப் பிரதேசத்தில் பணவரவுப் பொருளாதார முறைமையில் உள்ளது போல ஆண்களுக்கு தனியான கொப்பி வைத்து எழுதும் முறையும் பெண்களுக்குத் தனியாகவும் அற்ஹோம் முறைமையில் இருந்தாக அறியப்படவில்லை.
ஆரம்ப காலங்களில் வாங்கும் பணத்தை சாரக் கட்டினுள்வாங்கிப் போடும் முறைமை சில இடங்களில் இருந்ததாக அறியப்படுகின்றது. பின்னாட்களில் £ட்கேஸ், தோல்பை போன்றவற்றில் பணத்தை வைக்கும் பழக்கம் உருவாகி இப்போது நிலை பெற்று வருகின்றது.
கரையோரக் கிராமங்களின் தேவாலயத்திருவிழா கால மாதத்திலும் கிறிஸ்மஸ்வரும் டிசம்பர் மாதத்திலும் அற்ஹோம் வைக்கும் முறைமை நடைபெற மாட்டாது. உள்க்கிராமங்களில் பந்தல் போட்டு இம்முறை கொண்டாடப்படும். கரையோரக் கிராமங்களில் வீடுகள் மிகச் சிறிய நிலப்பரப்பில் இருக்கும். இதன் காரணமாக அற்ஹோம் கொண்டாட வீதிகளின் குறுக்கே பந்தல் போடப்படும். ஸ்பீக்கர்கள் பெரிய சத்தத்தில் அந்தக் காலத்திற்குரிய பிரபலமான பாடலை ஒலித்துக்கொண்டிருக்கும்.
இவ்வழக்கம் இப்போதும் சில கரையோரக் கிராமங்களில் காணமுடிகின்றது. கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் அற்ஹோம் முறைமைக்கான திகதிகளை வழங்கும் முறை பல கரையோரக் கிராமங்களில் உள்ளதை மரபாகக் காணமுடிகின்றது. அற்ஹோம் வைத்துப் பணத்தைப் பெற்ற ஒரு குடும்பம் பெற்ற பணத்தில் கணிசமான பகுதியை மீளளித்த பின்னர் தான் மீளவும் வைக்க முடியும். ஆனாலும் திருமணம், புதுமனைப்புகுவிழா, மங்கைப்பருவ மங்கல நீராட்டுவிழா, பிறந்த தின விழா போன்றவற்றை அற்ஹோம் போல வைத்துப் பணம் வாங்கும் முறைமை அப்போதும். இப்போதும் இருப்பதைக்காண முடிகின்றது. கரையோரக் கிராமங்களில் இந்நிகழ்வை அற்ஹோம் போல நடத்துவதாயின் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு அறிவித்தல் கொடுப்பது அவசியமாகின்றது. கடற்கரையோரக் கிராமங்களைப் பொறுத்தவரையில் ஒரு காலகட்டத்தில் ஏழைக் கடற்றொழிலாளி ஒருவர் சொந்தமாகப் படகு வாங்க, வலைகள், உபகரணங்கள் வாங்க அற்ஹோம் முறைமையினால் பணத்தைப் பெற்றுக்கொண்டனர். சிறிய முதலாளிகள் சம்மாட்டி எனப்படும் பெரிய முதலாளிகளாக மாற அம்முறைமை பெரிதும் உதவியுள்ளது. அதேபோல காணி வாங்குதல், வீடுகட்டுதல், வாகனம் வாங்குதல், பெண் பிள்ளைக்குத் திருமணம் செய்தல், வெளிநாடுகளுக்கு செல்லல், சிறு தொழில்கள் நிறுவுதல் போன்றவற்றிற்கும் இம்முறைமை கைகொடுத்து உள்ளது. கரையோரம் தவிர்ந்த பிரதேச மக்களும் இந்த வகையான நன்மைகளை அனுபவித்துள்ளனர். சுருக்கமாகக் கூறுவதாயின் பணவரவுப் பொருளாதார முறைமையை கிறிஸ்த்தவர்கள் கைக்கொண்ட ஓர் வடிவமெனலாம். இன்றைய காலத்தில் இந்த அற்ஹோம் முறைமையை வலுவிழந்து வருவதைப் பரவலாகக் காண முடிகின்றது. கரையோரக் கிராமங்களில் இப்பொருளாதார முறைமை ஓரளவுக்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஏனைய இடங்களில் இது பெருமளவுக்கு வழக்கற்றுப் போய்விட்டது. மக்களின் வாழ்க்கைத் தரம் பெருமளவுக்கு உயர்ந்துவிட்ட நிலையில் வறுமையைக் காரணம் காட்டி பணம் பெறும் முறைமையை பெருமளவில் விரும்பவில்லை. பணத்தைக் கொடுத்து வாங்குவதை இழிவாக எண்ணும் சமுதாயம் உருவாகிவிட்டதும் இதற்கு காரணமெனலாம். வங்கிகள் கிராமப்புறமெங்கும் தனது கால்களைப் பதித்து விட்டது. இதனால் தேவைக்கு கடன் எடுப்பது இலகுவாகி விட்டதனால் அற்ஹோமின் தேவை குறைந்து விட்டது.
நன்றி. மூலம்: வேதநாயகன் தபேந்திரன் (முன்னாள் சமூகசேவை அலுவலர்)
தினக்குரல் வார வெளியீடு 2012.07.15