வீடு இருக்கும் வளவிற்கு, அல்லது பயிர், விவசாய நிலங்களுக்கு எல்லையிட்டு, பாதுகாப்பதற்கு பல வகையான வேலிகள் காணப்படு கின்றன. தென்னோலை கிடுகு வேலைி, பனைமட்டை வேலி, கம்பி வேலி, தகர வேலி, முட்கம்பி வேலி, மதில் வேலி, உயிர்வேலி போன்ற பல வகையான வேலிகள் காணப்படுகின்றன.
முட்கிளுவை, இலைக் கிளுவை, கள்ளிச் செடி, நொச்சி மரம், பனை மரம், பூவரசு, இலந்தை மரம், போகன்விலா, வாதராணி, முள்முருங்கை, சீமைக்கிளுவை போன்ற மரங்கள் உயிர்வேலிக்காகப் பாவிக்கப்படு கின்றன. கிளுவை உயிர்வேலியே யாழ்ப்பாணத்துத் தீவக வாழ்வியலு டன் நெருங்கிய தெடர்புடையதாகவும், பாரம்பரியமாகப் பேணப்படக் கூடியதுமான ஒன்றாகக் காணப்படுகின்றது .
கொமிபொறா கொடாற்றா என்ற தாவரவியற் பெயர் கொண்ட பேர்சறாசியே குடும்பத்தைச் சேர்ந்த, முக்கூட்டு இலைகளையும், மென்மையான தண்டையும், உடைய இலைகளை உதிர்க்கின்ற, உயிர்வேலிகளுக்காகப் பாவிக்கப்படுகின்ற மரமே கிளுவை மரமாகும். இந்த கிளுவையிலும் முட்கிளுவை, இலைக்கிளுவை, சிறுகிளுவை, பெருங்கிளுவை, செங்கிளுவை, வெண்கிளுவை என்று பல உள்ளுர்ப் பெயர்களில் ஒரே மரங்கள், பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
ஒரு ஏக்கருக்கு நான்கு பக்கமும் உயிர்வேலி அமைக்க 6 அடி கொண்ட 900 கதியால்கள் தேவைப்படுகின்றன. ஆடு, மாடு, பன்றிகள் நுழையாமலிருக்க அரையடிக்கு ஒரு கதியாலும், அதனைவிடச் சிறிய விலங்குகள், மனிதர்கள் நுழையாமலிருக்க ஒரு அடியில் 3 கதியால் களும் நடலாம். கதியால்கள் அதிகமாகக் கிடைக்குமிடத்து நெருக்கி மதில்கள் போலவும் நடலாம். கிளுவை நன்றாக வறட்சியைத் தாங்கக்கூடியது. நட்டு இரண்டு மாதங்களுக்கு நீர் பாய்ச்ச வேண்டும். மழைக்காலங்களில் நீர் பாய்ச்ச வேண்டிய அவசியமில்லை. நட்டு 20 நாட்களில் பொதுவாகத் துளிர்விடும் கிளுவையானது, 6 மாதங்களில் முழு வேலியாக வளர்ச்சியடைந்துவிடும். ஒவ்வொரு வருடமும் 6 அடிகளுக்கு மேல் வளர்ந்த கிளைகளை வெட்டி நீக்கிவிடலாம்.
குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர், வெட்டப்பட்ட தலைப் பகுதிகள் மற்ற மரங்களுடன் ஒட்டி இணைந்து வலுவான மதில் போன்ற அமைப்பைக் கொடுக்கும். பல்வேறு வடிவங்களையும் கொடுக்கும். இதன் பைற்றோசோசியோலொஜி (தாவர சமூகவியல்) ஆய்வுக்குரிய தாகும்.
இயற்கையோடு இரண்டறக்கலக்கும் இந்த உயிர்வேலி வாழ்வியலா னது பல்வேறு நன்மைகளைச் செய்கின்றது. நிலத்தையும், மனிதர் களையும், சொத்துக்களையும் பயிர்களையும் பாதுகாக்கின்றது. பயிர்களை வெப்பக்காற்று, பூச்சிதாக்கம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கின்றது. மண்ணரிப்பைத் தடுக்கின்றது. காற்று வேலியாக வும் தொழிற்படுகின்றது. பல்வேறு ஊர்வன, பூச்சிகள், பறவைகள் போன்றவற்றுக்கு வாழிடமாகத் தொழிற்பட்டு உயிர்ப்பல்வகைமைப் பெருக்கத்தையும் ஊக்கவிக்கின்றது.
ஆயுர்வேதத்திலும், யுனானி மருத்துவத்திலும் கிளுவை முக்கிய மருந்தாக இடம் பிடித்துள்ளது. சுவைக்க சிறிது புளிப்புடன் துவர்ப்பும் சேர்ந்தது போல சுவை கொண்ட கிளுவை மரத்தின், இலைகள், வேர், தண்டு, பட்டை மற்றும் பிசின் போன்றவை பல்வேறு வியாதிகள் தீர்க்க உதவுகின்றன. மிகவும் அதிகமான மருத்துவ குணம் கொண்ட கிளுவையானது சிறுநீரக, கல்லீரல், நரம்புத் தொகுதி சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களுக்கும், வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் புண், கருப்பை, மாதவிடாய் நோய்கள், சளி, நாள்பட்ட கட்டி போன்றவற்றிற்கு மருந்தாகவும், இந்த மரத்தின் பிசின் வயாகராவாகவும் பயன்படுகின்றது. கால்நடைகளுக்கு உணவாகவும், குறிப்பாக இதன் இலைகளில் காணப்படும் புரதம் வெள்ளாட்டின் வளர்ச்சிக்கும் உதவுவதுடன், மேலும் சுரை, பூசணி, பீர்க்கு போன்ற கொடிகள் பற்றிப் படர்ந்து வளர்வதற்கும், இந்த வேலிகள் உதவுகின்றன. இந்த மரங்களின் அடியில் கட்டப்படும் மாடுகள் கோமாரி நோய்த் தாக்கத்திலிருந்து பாதுக்காக்கப்படுகின்றன. கதியால்களாற் பட்டியிடப்படும், செம்மறி ஆடுகள் கோடைகால வெப்பத்தினால் உண்டாகும் கழிச்சல் நோய் , அம்மை நோய், துள்ளுமாரி போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.
உயிர்வேலிகள் மருவிப்போய் அந்த இடத்தைக் கற்கள் எடுத்துக் கொண்டிருக்கின்ற இந்தக் காலத்தில், யாழ்ப்பாணத்தினது, குறிப்பாக தீவகத்தினது வாழ்வியலோடு இணைந்த, மனிதர்களுக்கும், தாவரங் களுக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் நேயமான கிளுவை உயிர்வேலிகள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரிய மாகும்.

