Saturday, December 21

கலாபூஷணம் கலைப்பேரரசு ஆறுப்பிள்ளை தம்பிப்பிள்ளை பொன்னுத்துரை (ஏ.ரி.பி)

0

அறிமுகம்

கலைப்பேரரசு ஏ.ரி.பி அவர்கள் மறைவிற்குப் பின்னரும் நாடக உலகிலும் கலைஞர் மனங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நல்ல மனிதன். பொறுமைக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர். யாம் பெற்ற இன்பம் இவ் வையகம் பெறவேண்டும் என்ற உயரிய பண்பு கொண்;மைந்தவர். தான் வாழும் காலத்தில் தன்னுள் உறைந்து கிடக்கும் கலையை பிறருக்குக் கையளிக்க வேண்டும் எனத் துடியாய்த்துடித்து வாழ்ந்து காட்டியவர். இளம் வயதிலிருந்தே நாடகமே எனது உயிர்த்துடிப்பு என வாழ்ந்து வந்த நாடகப் பித்தன். இருபதாம் நூற்றாண்டின் நாடக விற்பன்னர் என பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களால் போற்றப்பட்டவர். நாடக நூல்களைப் படிப்பதில் அல்லது நாடகத்தில் நடிப்பதில் உள்ள சுவையும், குதூகலமும், பூரிப்பும் வேறு எதிலும் எனக்கு ஏற்பட்டதில்லை எனக் கூறிய ஏ.ரி.பி அவர்கள் இருபத்தைந் திற்குமேற்பட்ட நாடகங்களை தயாரித்து நடித்தது மட்டுமல்லாது பல நாடகப் பிரதிகளையும் எழுதி நாடக வரலாற்றில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த தம்பிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் கலை வளமும் இலக்கியத் தேடலும் கொண்ட கலைக் குழுமத்தின் பிறப்பிடமாய்த் திகழும் குரும்பசிட்டி என்னும் கிராமத்தில் அவ்வூரைச் சேர்ந்த பிரபல விவசாயியும் நெல்லு வர்த்தகருமான தம்பிப்பிள்ளை மாணிக்கம் தம்பதியரின் மூன்றாவதும் கடைக்குட்டியுமாக 1928-05-15 ஆம் நாள் கலைப்பேரரசு கலாபூஷணம் ஏ.ரி.பொ என அழைக்கப்படும் பொன்னுத்துரை அவர்கள் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியினை குரும்பசிட்டி பொன்பரமானந்தர் வித்தியாலயத்திலும் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியினை திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். உயர்கல்விக்காக சென்னை சென்ற இவர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இணைந்து கலைமாணி கற்கை நெறியினைப் பயின்று கலைமாணி பட்டம் பெற்று தாயகம் திரும்பி ஆசிரியராக தன்னை இணைத்துக் கொண்டார்.

காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி,

இராஜவெல இந்துக் கல்லூரி,

கண்டி இந்து உயர்தரப்பாடசாலை ஆகிய பாடசாலைகளில் ஆசிரிராகவும் குப்பிளான் விக்னேஸ்வராக் கல்லூரியில் அதிபராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

1956 ஆம் ஆண்டு குரும்பசிட்டியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை ஆச்சிக்குட்டி தம்பதிய ரின் புத்திரியான பாலாம்பிகை என்பவரை தனது வாழ்க்கைத் துணையாகக் கரம்பற்றி இல்லற வாழ்வில் இனிதே மகிழ்ந்தார். இல்லற வாழ்வில் பாலகுமார், சகிதேவி என்னும் நாமமுடைய இரு பிள்ளைச் செல்வங்களைப் பெற்று அவர்களிருவரையும் கல்வியில் உயர வைத்தது மட்டுமல்லாது புதல்வியை மருத்துவராகவும் புதல்வனை வங்கி முகாமையாள ராகவும் உருவாக்கி அவர்களையும் இல்லற வாழ்வில் சிறப்புடன் வாழ வைத்தார். இவருடைய மருமகன் பொறியியலாளர் தயாபரன் அவர்கள் கலைத்துறை விருப்புடையவராகவும் கலைஞர்களை அரவணைப்பவராகவும் உள்ளமை ஏ.ரி.பி ஐயாவிற்குக் கிடைத்த கொடையே எனலாம். குரும்பசிட்டி சன்மார்க்க சபை, யாழ் இலக்கிய வட்டம், குரும்பசிட்டி சன்மார்க்க நாடக மன்றம் ஆகிய சமூகமட்ட அமைப்புகளில் தலைவராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். யாழ் இலக்கிய வட்டத்தின் ஆரம்ப காலம் முதல் பல பதவிகளை வகித்தது மட்டுமல்லாது இச்சங்கத்தின் பல்வேறு பணிகளுக்கும் இதன் இலக்கிய வளர்ச்சியிலும் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டவர். குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் வளர்ச்சி என்பதில் ஏ.ரி.பி அவர்களை பிரித்துப் பார்க்க முடியாதளவிற்கு அதனுடன் இரண்டறக் கலந்தவராக முகிழ்த்து நிற்கின்றார்.

நாடகக் கலையில் ஏ.ரீ.பி அவர்களின் வகிபாகம்.

சிறுவர் நாடகம், மரபுவழிசார் கற்பனை, சுய ஆக்க நாடகம், மொழிபெயர்ப்பு நாடகங்கள் என முழுநேரமும் நாடகக் கலையில் தன்னை ஈடுபடுத்திச் செயற்பட்ட இக் கலைஞனது நாடக வாழ்க்கை குரும்பசிட்டி பொன் பரமானந்த வித்தியாலயத்தில் ஆரம்பித்தது. பொன் பரமானந்தர் வித்தியால யம் என்பது குரும்பசிட்டியில் தாளக்காவடி ஆட்டமுறையினை அறிமுகம் செய்த வித்தியாலயமாக இருக்கின்றது. இத்தகைய கலைப்பாரம் பரியம்மிக்க பாடசாலையில் தனது ஆரம்பக்கல்வியை ஆரம்பித்தமையினால் ஏ.ரி.பி அவர்கள் பின்னாளில் கலையுலகில் சாதனை மிக்க கலைஞராகத் திகழ்ந்தார். குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் மூலவேராய் நின்று ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர். நாடகப் பிரதி எழுதுதல், நாடகங் களைத் தயாரித்தல், இயக்குதல், நடித்தல், நாடகம் தொடர்பில் ஆய்வுரைகளை நிகழ்த்துதல், கட்டுரை, விமரிசனங்கள் எழுதுதல் நவீன நாடக முறைமைகளை உள்வாங்குதல், நடிப்புத்துறையில் புதிய உத்திகளை ஏற்படுத்துதல், களப்பயிற்சிகளை வழங்குதல் முதலான சகல துறைகளிலும் கலைப்பேரரசு அவர்கள் பங்களிப்புச் செய்தவர். பிரபலமான நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமல்லாமல் பன்னூற்றுக் கணக்கான புதிய நடிகர்களையும் உருவாக்கியவர். குரும்பசிட்டி நாடகக் கலைஞர் கே.கே.வி.செல்லையா அவர்கள் 1942 ஆம் ஆண்டு தயாரித்த ‘நாட்டாமை நாகமணி’ என்ற இசை நாடகத்திலே முதன் முதலாக நடித்தார். அதனைத் தொடர்ந்து குரும்பசிட்டி மகாதேவ வித்தியாசாலையில் 1945 இல் அல்லி அர்ச்சுனா என்ற இசை நாடகத்திலும் உயர் கல்வி கற்ற யாழ் பரஸே;வராக் கல்லூரியில் பிரான்ஸ் நாட்டு நாடகவியலாளர் மோலியரின் ‘உலோபியின் காதல்’ என்னும் நாடகத்தில் உலோபியாகப் பாத்திதரமேற்று நடித்தவர். 1951-1955 காலப் பகுதியில் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பினை மேற்கொண்டிருந்த காலத்தில் ஸ்கொட்லாண்ட் நாட்டு நாடக விற்பன்னர் களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. இதன் மூலம் அவர் N~க்ஸ்பியரின் ஆங்கில நாடகங்களில் பரிட்சயத்தினை ஏற்படுத்திக் கொண்டார். இப்பின் புலத்தினை வைத்துக்கொண்டு முதலாளி, குவேனி, ராகிமைடியர் ஆகிய நாடகங்களைத் தயாரித்து பல்வேறு நாட்டவர்களின் முன்னிலையில் அரங்கேற்றி தன்னை ஓர் நாடகவியலாளராக நிலை நிறுத்தினார். 

‘வருடம் பிறந்த முன்னம் முன்னம்’ என்னும் இவர் எழுதிய வானொலி நாடகம் வானொலி நாடகப் பிதாமகர் சானா அவர்களால் பாராட்டுப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் நின்று விடாமல்; விதியின்சதி, தாகம், இருமனம் என்னும் நாடகங்களை தானே எழுதி நெறிப்படுத்தி மேடையேற்றினார். மரபுவழி நாடகங்கள் மட்டுமன்றி நவீன நாடகங்களிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். ‘நாடகம்’ என்ற பெயர் தாங்கி இவர் எழுதிய ஓரங்க நாடகம் 1966 இல் இலங்கை கலைக்கழம் நடத்திய நாடக எழுத்துருப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுக் கொண்டமையும், 1967 இல் நடத்திய போட்டியில் இவர் எழுதிய நாமொன்று நினைக்க என்னும் நாடகம் முதலாமிடத்தைப் பெற்றமையும்  இவரது நாடக எழுத்தாற்றலின் வெளிப்பாடு ஆகும்.

வயது வேறுபாடின்றி தன்னை அனைத்துக் கலைஞர்களுடனும் இணைத்து அரங்கக் களப் பயிற்சி பெற்றவர். ஈழத்து நவீன நாடக நெறியாளர்களான அ.தார்சீசியஸ், குழந்தை ம.சண்முகலிங்கம்,  போன்றவர்களின் அரங்கப் பயிற்சிகளில் தன்னை ஒரு மாணவனாக இணைத்துப் பயிற்சி பெற்றவர். இவரோடு பயிற்சி பெற்ற கலைஞர் பேர்மினஸ் அவர்கள் ஏ.ரி.பி அவர்களை மதித்துப் பேசும்போது குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை போன்றவர்களால் பாராட்டப்பட்டவர். இப்பயிற்சியின் மூலம் பெற்றுக்கொண்ட நாடக நுணுக்கங்கள், அனுபவங்கள், பட்டறிவுகள் அனைத்தும் இணைந்து பாத்திர உருவாக்கலில் சிறப்புடன் செயற்படுவதற்கு இவரை புடம் போட்டன என்று பெருமிதத்தடன் குறிப்பிடும் ஏ.ரி.பி அவர்கள் பின்னாளில் கலாநிதி மௌனகுரு அவர்கள் நெறியாள்கை செய்த ‘சங்காரம’;, அ. தாசீசியஸ் அவர்கள்  நெறிப்படுத்திய ‘பொறுத்தது போதும’;, மகாகவியின் கோடை போன்ற நாடகங்களில் நடித்து பாத்திரச் சித்;தரிப்பின் உச்சத்தினைத் தொட்டார். நல்ல நடிகராக அனைவரும் பாராட்டுமளவிற்கு உயர்ந்தவர்.

ஏ.ரி.பொன்னுத்தரை அவர்கள் நாடகத்தில் புகழ் பெற்ற கலைஞராகத் திகழ்வதற்கு ஈழத்து நாடக ஜாம்பவான்களான கலையரசு சொர்ணலிங்கம், சண்முகநாதன் (சானா), கே.கே.வி.செல்லையா, போன்ற நல்லாசான்களின் பேறும், புதிய நாடக வார்ப்புகளுக்கு குழந்தை ம.சண்முகலிங்கம், அ.தாசீசியஸ், சி.மௌனகுரு, போன்றவர்களது ஊக்கமும் மாவை முத்தமிழ் கலைமன்றத் தலைவர் மகாராஜஸ்ரீ சு.து.~ண்முகநாதக் குருக்கள், முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் அமரர் சு.வித்தியானந்தன், நடிகமணி வி.வி.வைரமுத்து, குரும்பசிட்டி சன்மார்க்க சபை பொதுச் செயலாளர் அமரர் த.இராசரத்தினம், அமரரின் சகலர் அமரர் மு.சபாரத்தினம், மறுமலர்ச்சி மன்றத் தலைவர் பொ.செல்வரத்தினம், மற்றும் ஏ.ரி.பி அவர்களது பாரியாரும் பிள்ளைகள் மருமக்களும் காரணமாக அமைந்தனர் என்றால் மிகையாகாது. இவற்றிற்கு மேலாக குரும்பசிட்டி எழுத்தளர் இரசிகமணி கனக  செந்திநாதன் அவர்களது உறவும் அவர் மூலம் ஈழத்து எழுத்தாளர்கள் பலரது தொடர்பும் நட்பும் கிடைத்தமை இத்துறையில் இவரைப் புகழீட்ட வைத்தன. அவரிடம் இயல்பாகவே காணப்பட்ட சில பண்புகள் அவரை மேலும் பிரகாசிக்க வைத்தன எனலாம்.

1) நேரக் கட்டுப்பாடும் நேரந் தவறாமையும்.

2) விடாமுயற்சி.

3) இறுதிக் காலம் வரை மாணவ நிலையில் தேடல் உடையவராக இருந்தார்.

4) புதிய உத்திகளை வரவேற்குந் தன்மை.

5) இணைந்து கருமமாற்றுதலும் பண்பாகப் பழகுதலும்.

6) கலைஞனது குறைகளை பொறாமைக் கண்ணோடு பாராது நேரிய                              நோக்கில் தட்டிக் கொடுக்கும்    வகையில் பேசுதல்.

7) கலை வளர்ச்சிக்கு இயன்றளவு பண உதவி வழங்குதல்  என்பன போன்ற               பண்புகள்   அவரிடம் காணப்பட்டதனை குறிப்பாகச் சொல்ல முடியும்.

ஆலயத் திருவிழாக்களில் பக்தி மயமாக ஆடப்பட்டு வந்த காவடியாட்டம் முருகனை வழிபடும் ஒரு நேர்த்திக்கடன் முறை. பக்திக் கூத்து. இதன் மகத்துவத்தினை உணர்ந்த மாவையாதீன முதல்வர் மகாராஜஸ்ரீ சு.து ~ண்முகநாதக் குருக்கள் அவர்கள் மாவைக் கந்தன் ஆலய வீதியில் விசேட அரங்கம் அமைத்து ஆற்றுகை செய்வதற்கு வழிசெய்தார். இக்லையின் பொறுப்பினை ஏற்ற ஏ.ரி.பி அவர்கள் தாளக்காவடி என்னும் பெயரில் மேடை நுணுக்கங்களைப் பின்பற்றி இரசனைக்குரியதாக படச்சட்ட அரங்கில் தாளக்காவடி என்னும் பதிய கலைவடிவமாக பக்திபூர்வமாக அரங்கேற்றி னார். இதனால் எமது பாரம்பரியக் கலைவடிவமான தாளக்காவடி எம் மக்கள் மத்தியில் நிலைபேறுடைய கலைவடிவமாக உயர்ந்தது. இச் செயற்பாடு இவரை கலை உலகில் வரலாற்றுப் புகழ் பெற்;ற கலைஞனாக உயர்த்தியது. பின்னாளில் இக்கலைவடிவம் இலங்கை வானொலியில் ஒலிபரப்புச் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தனிநடிப்புப் போட்டி என்பது ஏ.ரி.பி அவர்களின் கனவு – நீண்ட நாள் விருப்பு. அவ்விருப்பினை விரைவாகவே செயற்படுத்தினார். இளைய தலைமுறை யினரை நாடகத்தின் பால் ஆர்வமும் விருப்புமுடையவர்களாக உருவாக்க வேண்டுமென்ற சிந்தனையுடைவராகத் திகழ்ந்த இவர் அதற்காக தனது சொந்த நிதியிலிருந்து செலவிட்டு தனி நடிப்புப் போட்டி ஒன்றினை பல வருடங்களாக யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியில் நடத்தி வந்தவர்.

அங்கம் வகித்த அமைப்புகள்

குரும்பசிட்டி சன்மார்க்க சபை.

தெல்லிப்பளை கலை இலக்கியக் களம்,

யாழ் இலக்கிய வட்டம், கம்பன் கழகம்,

மாவை முத்தமிழ் கலை மன்றம்.

வெளியிட்ட அரங்கு சார் படைப்புகள்.

பாடசாலை நாடகம்

மயில்,

இறுதிப் பரிசு,

கூப்பிய கரங்கள்,

பக்தி வெள்ளம்

நிஜங்களின் தரிசனம்

தாளக்காவடி போன்ற நாடக நூல்களையும்,

அரங்கக் கலைஞர் ஐவர்,

அரங்குகண்ட துணைவேந்தர்,

கலையுலகில் கால் நூற்றாண்டு; ஆகிய வரலாற்று நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

எழுதித் தயாரித்து நடித்த நாடகங்கள்

நாடகம்

விதியின்சதி,

முதலாளி தொழிலாளி,

குவேனி,

ராகிமைடியர்,

இருமனம்,

பகையும் பாசமும்,

நிறைகுடம்,

பண்பின் சிகரம்,

பாசக்குரல்,

செங்கோல் சரிந்தது,

அண்டல் ஆறுமுகம்,

பிற்பகலிலே,

இறுதிப்பரிசு,

பஞ்சபூதங்கள்,

காதல் கைநட்டம்,

ஆயிரத்தில் ஒருவர்,

நாமொன்று நினைக்க

தாளக்காவடி

பிறரது நாடகங்களில் நடித்தமை

பேராசிரியர் மௌனகுரு      – சங்காரம்

அ.தாசீசியஸ்        – பொறுத்தது போதும், கோடை.

தேவன்          – கற்புக்கனல்

சானா              – பதியூர் ராணி

புரவலர் பொ.செல்வரத்தினம் – ஆராமுது அசடா

ஈழத்துப் பத்திரிகைகளில் எழுதிய அரங்கு சார் கட்டுரைகள்.

நாடகக் கலை வளர                  – வீரகேசரி.

கால் நூற்றாண்டில் ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சி – மித்திரன்.

பாடசாலை நாடகம்                  – தினகரன்.

ஓரங்க நாடகம்                   – தினகரன், தீபம்.

நாடக உலகில் நான் கண்ட நால்வர்       – கலைச்செல்வி.

நாடகம் நடத்திப் பார்                – ஈழநாடு.

இலங்கையர்கோன் நாடகங்கள்            – ஈழநாடு.

எனது நாடக அனுபவங்கள்                – மல்லிகை.

சிறந்த நடிகனாக வேண்டுமா?             – வலிவடக்கு சனசமூக சமாஜ மலர்.

சமூக நாடகமும் சரித்திர நாடகமும்           – கலைக்கண்.

பெற்ற விருதுகள்

நாடகமாமணி  – குரும்பசிட்டி – 1970

கலைப்பேரரசு       – நடேஸ்வராக் கல்லூரி மைதானம் – 1974.

ஆளுநர் விருது   – வடக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்              – 1998.

கலாபூஷணம்        – கலாசார அலுவல்கள் திணைக்களம் – 1999.

இறுதிப்பரிசு நாடக நூலுக்காக சாகித்திய மண்டலப்பரிசு பெற்றவர்.

 ஏ.ரி.பி. அவர்கள் சார்ந்து பிறர் வெளியிட்ட நூல்கள்

நாடகக் கலைஞர் ஏ.ரி.பொ. வெள்ளி விழா மலர்    – குரும்பசிட்டி சன்மார்க்க சபை.

அரங்கக் கலையில்; ஐம்பது ஆண்டுகள்         – தெல்லிப்பளை கலை இலக்கிய களம்.

 அரங்கக் கலையில் ஐம்பது ஆண்டுகள்

2003-05-15 ஆம் நாள் தெல்லிப்பளை கலை இலக்கியக் களத்தினால் ஏ.ரி.பி அவர்களது கலையுலகில் ஐம்பது ஆண்டுகள் பூர்த்தியானதையிட்டு பெருமள வில் பவள விழாவினை நடத்தியிருந்தனர். இவ்விழாவில் தெல்லிப்பளை கலை இலக்கியக் களம் மட்டுமல்லாது கம்பன் கழகம், யாழ் இலக்கிய வட்டம், சன்மார்க்க சபை போன்ற மன்றங்களது கலைஞர்களும் கலந்து ஐயாவை வாழ்த்தினார்கள். இவ்விழாவில் ஏ.ரி.பி. அவர்களது கலைப்பணிகள் குறித்துப் பதிவு செய்ப்பட்ட வரலாற்று ஆவணமாக ‘அரங்கக் கலையில்; ஐம்பது ஆண்டுகள்’ என்ற நூலை வெளியிட்டு ஏ.ரி.பி. அவர்களைப் பெருமைப்படுத் திய வரலாறு கலையின் மீது அவர் கொண்டிருந்த மதிப்பினையும் பற்றினையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.

இலக்கிய நிகழ்வுகள் என்றில்லாது அனைத்து நிகழ்வுகளிலும் தன்னை இணைத்துக் கொள்பவர். கருத்தரங்குகள், களப்பயிற்சிகள், நூல் வெளியீடுகள், பாராட்டு விழாக்கள், நாடகப் போட்டிகளின் நடுவர் பணி, தலைமை வகித்தல், என எதற்கு அழைத்தாலும் மறுக்காமல் உரிய நேரத்திற்குச் சமூகம் கொடுக்கும் உயரிய பண்பின் சிகரமாக வாழ்ந்தவர். தன்னை ‘ஒரு நாடக சந்நதக்காரன்’ எனக் குறிப்பிட்டு வரும் ஏ.ரி.பி அவர்கள் தன் வாழ்நாளில் சிறந்த மாணவனாக, சிறந்த ஆசிரியனாக, சிறந்த சமூகப் பணியாளனாக, நல்லதோர் குடும்பத் தலைவனாக, நல்ல கலைஞனாக எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல மனிதனாக வாழ்ந்த ஈழத்துத் தமிழ் அரங்கின் மூத்த அரங்கவியலாளர்; கலையுலக வாழ்வை 2003-10-09 ஆம் நாள் நீத்து நிலையுலகம் சென்றார்.

ஏ.ரி.பி. ஐயாவின் மருமகன் பொறியியலாளர் தயாபரன் அவரது வாழ்க்கைத்துணையும் ஏ.ரி.பி. ஐயாவினது புதல்வியுமான வைத்திய கலாநிதி சகிதேவி அவர்களுக்கும் யாழ்ப்பாணப் பெட்டகம் நிழலுருக் கலைக்கூடத்தின் இனிய நன்றி.

இறைபதம் குறித்த நினைவு மலர் 2003-08-11

நாடகக் கலைஞர் ஏ.ரி.பொ. வெள்ளி விழா மலர்.

 

 

 

 


Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!