Monday, May 13

சொர்ணலிங்கம், கனகரத்தினம் (கலையரசு)

0

1892-03-30 ஆம் நாள் யாழ்ப்பாணம் – மானிப்பாய், நவாலி என்ற இடத்தில் பிறந்தவர். ஈழத்துத் தமிழ் நாடக வரலாற்றில் நவீன நாடகத்தினை அறிமுகம் செய்தவராகக் கருதப்படும் இவர் தனது நான்காவது வயதில் நாடகத்தில் நாட்டம் கொண்டு கலைத்துறையில் தடம் பதித்தவர். பம்மல் சம்பந்த முதலியாரவர்களை நாடகக் குருவாகக் கொண்டு நாடகத்தில் ஈடுபட்டவர். 1913 ஆம் ஆண்டு கொழும்பில் “லங்காசுபோதவிலாச சபா” என்ற நாடக சபையை நிறுவி ஈழத்துத் தமிழ் நாடக வரலாற்றில் கலைஞர்களுக்கிருந்த இழிவான மதிப்பினை மாற்றியமைத்த பெருமைக்குரியவர். சினிமாப் பாடல்களையும், சினிமா முறையிலமைந்த நடிப்புக்களையும் பின்பற்றி அரங்கேற்றப்பட்ட நாடகங்களை முற்றாக மாற்றி இயற்றப்பட்ட பாடல்களையும்,இயல்பான நடிப்பு முறைகளையும் உருவாக்கி எல்லோரது கவனத்தினையும் அரங்கு மீது கொண்டு வந்தார். பம்மல் சம்பந்த முதலியாரவர்களால் அரங்கேற்றப்பட்ட நாடகங்களையும், தத்ரூபமான சுய ஆக்கமுறையிலமைந்த நாடகங்களையும் தயாரித்து ஐந்நூற்றிற்கு மேற்பட்ட நாடகங்களை ஈழத்து தமிழ் நாடக வரலாற்றில் அரங்கேற்றிய பெருமைக்குரியவர். ஆங்கிலமொழி பெயர்ப்பு, தழுவல் நாடகங்களையும்,புராண, இதிகாச, இலக்கிய, காவியக்கதைகளையுள்ளடக்கிய நாடகங்களுடன் சமூக நாடகங்களையும் அரங்கேற்றினார். குறிப்பாக ஷேக்ஸ்பியரது நாடகங்களான வெனிஸ்வணிகன் என்பதனை வாணிபுர வணிகன் என்றபெயரில் தயாரித்து ஷைலொக் என்ற பாத்திரத்தில் நடித்தவர். மேலும் ஹம்லெட், ஒதெல்லோ, மக்பெத், கிங்லியர் போன்றவற்றுடன் கர்ணன்போர், அல்லிஅர்ச்சுனா, சாரங்கதாரா,கூனி போன்ற பல்வேறு நாடகங்களைத் தயாரித்தளித்தவர்.தனது நாடக அனுபவங்களையெல்லாம் தொகுத்து “ஈழத்தில் நாடகமும் நானும்” என்ற ஈழத்து நாடக வரலாற்றுத் தகவல்களடங்கிய சுயசரிதை நூலினை வெளியிட்டுள்ளார். இவருடைய கலைச்சேவையினை பாராட்டும் வகையில் மறுமலர்ச்சி மன்றம் கலையரசு என்ற பட்டத்தினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1982-07-26 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!