1927-11-17 ஆம் நாள் யாழ்ப்பாணம் கந்தரோடை என்னும் இடத்தில் பிறந்து அளவெட்டி என்ற இடத்தில் வாழ்ந்தவர்.தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியில் ஓவிய ஆசிரியராகக் கடமையாற்றியவர். பாடசாலையாலும் கலை மன்றங்களினாலும் அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் பலவற்றிற்குப் பின்னணி ஓவியம் வரையும் வரை கலைஞனாகவும் நாடக ஒப்பனையாளனாகவும் கலைப் பணியாற்றியவர். ஆதவன் என்ற புனைபெயரில் பத்திரிகைகளில் பல ஆக்கங்களை எழுதி வந்தவர். இலக்கிய உலகில் பிரபல எழுத்தாளராகத் திகழும் சிற்பி அவர்களின் கலைச் செல்வி சஞ்சிகையின் ஓவியங்களை வரைந்து வழங்கியவர். 1975 ஆம் ஆண்டு கடுகண்ணாவையிலும், குளவி சுட்டான் நெடுங்கேணியிலும் ஓவியக் கண்காட்சிகளை நடத்தியவர்.ரமணி எனப்படும் சிவசுப்பிரமணியம், சங்கானை ஞானசேகரன் ஆகியோர் இவரிடம் ஓவியக் கலையினைக் கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கைக்காட்சிகள் மட்டுமன்றி சுவரோவியங்கள்,திரைச்சீலைகள், தத்ரூபமான உருவப்படங்கள் என்பவற்றினையும் வரைந்து புகழ் பெற்றவர்.கொழும்பு கலாபவனம் நடத்திய ஓவியப்போடடியில் இவரது மாலை நேரச்சந்தை என்ற ஓவியப் படைப்பிற்கு தேசியமட்டத்தில் இரண்டாமிடம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. ஆலயங்களுக்கான ஓவியங்கள், வருணங்கள் ஆகியவற்றினை செயற்படுத்துவதிலும் சிறப்பான ஆற்றலுடையவர்.1999-11-04 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.