Tuesday, February 4

தம்பித்துரை, ஆறுமுகம் (கலாகேசரி)

0

1932-05-05 ஆம் நாள் யாழ்ப்பாணம் – திருநெல்வேலி என்னும் இடத்தில் பிறந்து தெல்லிப்பளை -குரும்பசிட்டியில் வாழ்ந்தவர். கவின்கலைக் கல்விப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றிய இவர் தேர்க் கலை சிற்ப வடிவமைப்புத் தொடர்பில் பல சிற்பக் கலைஞர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியவர். குரும்பசிட்டி சன்மார்க சபையின் தலைவராகப் பலகாலம் பணியாற்றி இலக்கிய, சமய, கலைப் பணிகள் புரிந்தவர். ஓவியக் கலையை இலவசமாகக் கற்பித்து மாணவர்களை ஊக்குவித்ததோடு பல்கலைக்கழகத்தில் ஓவியம் கற்பிக்கப்பட வேண்டுமென்று அயராது உழைத்தவர். 1964 இல் தனது தந்தையாரின் பெயரில் ஆறுமுகம் சிற்பாலயம் என்ற நிறுவனத்தினைப் பதிவுசெய்து சிற்பக்கலையை முன்னெடுத்தவர். பண்ணாகம் முருகமூர்த்தி, நந்தாவில் அம்மன், வண்ணார்பண்ணை விசுவேச விநாயகர், ஐயனார் ஆலயங்களுக்கான சித்திரத் தேர்களை நிருமாணித்து ஈழத்துத்தேர்க் கலை வரலாற்றில் புதிய பரிமாணத்தினை ஏற்படுத்தியவர். பாடசாலைகளில் சிறுவர் சித்திரத்தினை ஊக்குவிப்பதற்காக வருண காகித ஒட்டுவேலைகள், களிமண், மணல், பசை , மரம், சுளகுச்சித்திரங்களை ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்தவர் என்பதுடன் யாழ்ப்பாணத்துப் பிற்காலச் சுவரோவியங்கள், சிறுவர் சித்திரம், தையற்கலைச் சித்திரங்கள், ஓவியக்கலை, கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி, பண்பாட்டின் மூன்று கோலங்கள் போன்ற நூல்களையும் வெளியிட்டவர். இவரைப் பற்றிய சுயசரிதை நூல்களாக அம்பிகைபாகனின் கலாகேசரி ஆ.தம்பித்துரை, கனக. செந்திநாதனின் கவின்கலைக்கோர் கலாகேசரி என்ற நூல்களும் குறிப்பிடத்தக்கன. 1994 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!