1857-08-06 ஆம் நாள் கத்தோலிக்க விசுவாசமுடைய சந்தியாகுப்பிள்ளை உடையாருக்கு மகனாக அச்சுவேலியில் பிறந்த இவர் யாழ்ப்பாணக் கத்தோலிக்கத் திருச்சபையின் தூணாய் விளங்கியவர். அக்கால கல்வி மரபுப்படி கல்வியினைக் கற்றவர். தூயகத்தோலிக்கராக இருந்தாலும் தந்தையாரால் தமிழ்ப் பண்பாட்டு மரபின் பிரகாரம் ஏடு தொடக்கல் மரபினூடாக மரபுக்கல்வியைப் பெற்றுக் கொண்டவர். புத்தூர் மிஷன் பாடசாலையிலும், வயாவிளான் கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலையிலும் ஆங்கிலக்கல்வியைப் பெற்றுக் கொண்டார். தந்தையாருக்குதவியாக லிகிதராகப் பணி தொடங்கிய இவர் பகுதிப் பராபத்தியகாரன், விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகாரன் என்னும் பதவிகளையும் பெற்றார். அச்சியந்திரங்கள் அறிமுகமில்லாத காலத்தில் இவரால் அச்சிடப்பட்ட நூல்களின் தொகைகள் எல்லோரையும் ஆச்சரியப்பட வைக்கும் பல நாடகங்களையும், நூல்களையும் எழுதிய இவர் அச்சுவேலியில் சன்மார்க்க விருத்திச் சங்கம் என்ற ஒன்றினை ஸ்தாபித்து நற்செய்திப் போதகராய் விளங்கியவர். சன்மார்க்க போதினி என்ற பத்திரிகையையும் ஐம்பது வருடங்கள் தொடர்ச்சியாக நடத்திய பிள்ளையவர்கள் சுவாமி ஞானப்பிரகாசரின் சிறிய தந்தையாராவார். இவரின் வழிகாட்டலிலேயே ஞானப்பிரகாச சுவாமிகள் அறிவிலும், ஆற்றலிலும், ஆன்மீகத்திலும் மேலோங்கி விளங்கினார். இவற்றுக்கு அப்பால் அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலய மூப்பராய் இறைபணி செய்து தனது அயராத உழைப்பினாலும், ஊக்கத்தினாலும் அச்சுவேலித் தேவாலயத் தினைக் கட்டி முடித்தார். இதற்காகப் போப்பாண்டவரின் பாராட்டினையும் பெற்றவர். தேவாலயங்களில் முதன்முதலாக திரைக்கவி, சிந்துப் பிரார்த்தனை ஆகியவற்றினை மத்தள வாத்தியங்களுடன் தொடக்கி வைத்தார். ஊரவர்களுக்காக தேவசகாயம்பிள்ளை போன்ற நாட்டுக்கூத்துக்களை தானும் இணைந்து நடித்து அரங்கேற்றி கலைவழி இறைபணி என்னும் கருத்தினை நிலைபெற வைத்தார்.தம்பிமுத்துப்பிள்ளையவர்களின் பணிகளை சமயப்பணி, சமூகப்பணி, பதிப்புப்பணி, பத்திரிகைப்பணி, இலக்கியப்பணி எனப் பாகுபடுத்திப் பார்க்கமுடியும். இவருடைய பணிகளையும், வாழ்க்கை வரலாற்றினையும் இவர் வாழ்ந்த காலத்திலே ஜோன் இராசா என்பவர் தம்பிமுத்துப்பிள்ளை சரித்திரசூசனம் என்ற நூலாக எழுதி வெளியிட்டுள்ளார். தம்பிமுத்துப்பிள்ளையவர்களின் வாழ்வியலையும் வரலாற்றினை யும் அறிந்து கொள்வதற்கு இதனைத்தவிர வேறு எந்த நூல்களும் இல்லை எனலாம். பேராயர் தியோகுப்பிள்ளையவர்களின் 2010 ஆண்டு நினைவுப்பேருரை பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்களால் தம்பிமுத்துப்பிள்ளை வாழ்வும் பணியும் என்னும் தொனியில் ஆற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்புடைய இப்பெரியார் 1934-04-04 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.