Sunday, February 9

சுப்பையா, சர்வானந்தா

0

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் 1923 பெப்ரவரி 22ஆம் நாள் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் ஆங்கிலப் பாடசாலையிலும், பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்றார். பள்ளிப் படிப்பின் பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து 1946 ஆம் ஆண்டில் வழக்கறிஞரானார். சட்டக் கல்லூரியில் படிக்கும்போது, இலண்டன் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பிரபலமான வழக்கறிஞர்களான எச். டபிள்யூ. தம்பையா, சா.ஜே.வே. செல்வநாயகம், எச். வி. பெரேரா ஆகியோரின் கீழ் பணியாற்றினார். 1974 ஆம் ஆண்டில் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1984 ஆம் ஆண்டில் அன்றைய அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனா இவரை பிரதம நீதியரசராக நியமித்தார். தமிழர் ஒருவர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டது இதுவே முதல் தடவை ஆகும். உயர் நீதிமன்றப் பணியில் அரசமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தம் உட்படப் பல புகழ்பெற்ற வழக்குகளில் இவர் நீதிபதியாக இருந்து செயலாற்றினார். 1988 இல் உயர் நீதிமன்றத்தில் இருந்து இளைப்பாறினார். நீதிமன்றப் பதவியில் இருந்து இளைப்பாறிய பின்னர், 1988 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா இவரை மேல் மாகாணத்தின் முதலாவது ஆளுநராக நியமித்தார். 1994 ஆம் ஆண்டு வரை இப்பதவியில் அவர் இருந்தார். 2001 இல் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா அவர்கள் 1981 முதல் 1984 வரை நிகழ்ந்த இனக்கலவரம் பற்றிய அரசுத் தலைவரின் உண்மை ஆராயும் ஆணையத்தின் தலைவராக இவரை நியமித்தார். புலம்பெயர்ந்து அவுஸ்திரேலி யாவின் சிட்னி நகரில் வசித்து வந்த சர்வானந்தா 2007 சனவரி 10 அன்று சிட்னியில் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!