Sunday, June 16

கிருஸ்ணானந்தன், நாகேந்திரம்

0

1951-01-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பிறந்த இவர் பொருளியலில் சிறப்புக்கலைமாணி பட்டம் பெற்றவர். தனது ஆசிரியப் பணியை ஒஸ்மானியாக் கல்லூரியில் ஆரம்பித்தார். எனினும் அரசசேவைகளின் கெடுபிடிகளுக்குள் ஒத்தோட மறுக்கும் இவரது இயல்பு இவரை முழுநேர தனியார் கல்வி நிறுவன ஆசிரியராக மாற்றியது எனலாம். ஆசிரியத்தொழிலைத் துறந்து தனியார் கல்வி நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு பொருளியலின் ஆழத்தினைப் போதித்தார். வகுப்பறையில் முழுமையான ஆசிரியனாக விளங்கினார்.இவருடைய கற்பித்த லானது போட்டிப்பரீட்சை மூலம் கூடிய புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழகம் செல்வதற்கு மட்டும் அமையாது பல்துறை விருத்திக்கும் ஆக்க வளர்ச்சிக்கும் ஆர்வங்களுக்கும் விருந்தும் மருந்தும் இட்டது எனலாம். அவரது அறிவுத்தேட்டம் பொருளியலோடு மட்டுப்படுத்தப்படாமல் அரசியல், சமூகவியல், அறிவியல் ஆகிய அனைத்துத்துறைகளிலும் விரவி நின்றமையே அவரை முதன்மை ஆசானாகத் திகழவைத்தது எனலாம். இத்துறையில் அவருக்கிருந்த ஆழ்ந்த அறிவு அவர் தம் சக கல்வியாளர்களுக்கு பெரிதும் பயன்பட்டமை குறிப்பிடத்தக்கதொன்றாகும். பணத்தைக்குறியாக வைத்து கற்பிக்கும் ஆசானாக அவர் விளங்கவில்லை. ஏழ்மைநிலையில் வாழும் மாணவர்களுக்கு கட்டணம் அறவிடாமலும் பாடக்குறிப்புக்களையும ; நூல் வெளியீடு களையும் இலவசமாக வழங்கியும் ஊக்கப்படுத்தினார். கல்விக்கட்டணங்களை விருப்பத்திற்கேற்ப தான்தோன்றித்தனமாக மாற்றியமைப்பதற்கு ஒருபோதும் விரும்பாத ஆசிரியராகவும் கல்வி வளர்ச் சிக்கழகங்களில் இலவசமாகக் கல்வி கற்பித்தமையும் இவரது தாராள மனப்பான்மைக்குச் சான்றுகளாகின்றன. வெளிநாடு செல்வதற்குப் பலவசதிகளும் வாய்ப்புக்களுமிருந்த நிலையில் கூட யாழ்.மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறைகொண்டு சொந்த மண்ணை நேசித்து வாழ்ந்தவர். பல்கலைக்கழக வாழ்க்கையின்போது பொதுவுடமைக் கருத்துக்களால் பெரிதும் கவரப்பட்ட அவர் அக்காலத்தில் புரட்சிகரக் கம்யூனிஸக் கட்சியின் பால் பிரயமுடையவராய் அக்கட்சியின் செயற்பாடு களுக்கு தனது உதவியையும் உழைப்பையும் நல்கினார். பின்னாளில் ஈழம் என்ற எண்ணக்கரு மையப்பட்டபோதும் அவரில் மனிதம் என்ற பரிணாமங்களைக் காட்டி நின்றது. அவர் தேச விடுதலைக்காக முழுமையான பங்களிப்பினையும் அதற்குத் தன்னாலான பொருளுதவியையும் ஓய்தல் ஒழிவின்றி நல்கினார். அவரது இன்னுயிரும் அதற்காகவே ஆகுதியானமை தமிழ் மண் அறிந்த துயரம் கொண்ட சரித்திரமாகும். 1988-11-12 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!