இற்றைக்கு 300 வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தினைக் கொண்ட இவ்வாலயத்தின் தோற்றம் பற்றிய சரியான காலத்தினைக் குறிப்பிட முடியாமலுள்ளது. இவ்வூரில் வாழ்ந்து வந்த ஆறுமுகம் சிவஞானம் என்பவரது மூதாதையர் வழித்தோன்றலாக ஆலயத்தினைப் பராமரிக்கும் பரம்பரை உரித்துடையவராக இருந்தார். இவர் இவ்வாலயத்தினை சரியாகப் பராமரிக்காது சீரழிந்தமையால் இவ்வூர் மக்கள் ஒன்றிணைந்து ஆலயத்தினை வளர்த்தெடுத்துள்ளனர். மூலிகைமையினால் வரையப்பட்ட சுவரோவியங்களுடன் பழம்பெருமை பேசிய இவ்வாலயம் முற்றுமுழுதாகப் புனரமைப்பிற்குட்படுத்தப்பட்டு 1991இல் முதலாவது கும்பாபிN~கம் நடைபெற்றது.ஆலயம் சீரழிந்து அழிவுறும் நிலையிலிருந்தமையால் ஊர்மக்கள் ஒன்றிணைந்து 1950 இல் அலங்காரத் திருவிழாவினை முன்னெடுத்தனர். மீண்டும் வருடாந்த மகோற்சவத்தினை நடத்தி வருகின்றனர். வருடந்தோறும் ஆடிப்பூரணையை தீர்த்தோற்சவமாகக் கொண்டு பத்து நாட்கள் மகோற்சவம் நடைபெற்று வருவது வழக்கம். இக்காலங்களில் கூத்து மற்றும் இசை நாடகங்கள், கரகம், காவடி போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.